இனி ரூ.5000 இல்ல ரூ.10,000.. 2025 ஆரம்பேம UPI சேவையில் மாற்றம்.. 2024-ஐ உலுக்கிய 6 முக்கிய மாற்றங்கள்!
எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சேவையில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன. இது 2025 ஆம் ஆண்டிற்கும் நீள உள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் யுபிஐ123 பேக்கான பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்க உள்ளது.
01. ஜனவரி 1 ஆம் தேதி முதல் யுபிஐ123 பயனர்கள் ரூ.10,000 வரை பரிவர்த்தனை செய்ய முடியும், இது முந்தைய வரம்பான ரூ.5,000 உடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த மாற்றம், கடந்த 2024 ஆம் ஆண்டில் நடந்ததை போலவே டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

யுபிஐ சேவை மீதான புதிய கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் ஆனது பேடிஎம் ஆப் மீதான தடைக்கு பின்னரே அதிகமானது என்பது வெளிப்படை. அப்படியாக பேடிஎம் மீதான தடை தொடங்கி 2024 ஆம் ஆண்டில், யுபிஐ சேவையில் நடைமுறைக்கு வந்த 6 முக்கியமான விதிகள் / கட்டுப்பாடுகள் குறித்தும், அவைகளால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விரிவாக பார்ப்போம்.
02. 2024 மார்ச் 15 ஆம் தேதியோடு பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் முடிவுக்கு வந்தன. இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) உத்தரவின்கீழ் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்கால் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்ளப்படுவதும், பரிவர்த்தனைகளை செய்வதும் நிறுத்தப்பட்டது.
பேடிஎம் மீதான இந்த தடை கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பேவின் (PhonePe) ஆதிக்கம் அதிகமானது; யுபிஐ மார்க்கெட்டில் டூயோபோலி (Duopoly) நிகழ்ந்தது. அதாவது ஒரு துறையில்.. ஒரு பொருள் அல்லது சேவைக்கான சந்தையில் இரண்டு சப்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை உருவானது. இரண்டுமே அமெரிக்க நிறுவனங்கள் என்பதால், அதீத ஆதிக்கத்தை தடுக்க இந்திய அரசாங்கம் புதிய உத்திகளை மற்றும் திட்டங்களை பரிசீலிக்க, நடைமுறைப்படுத்த தொடங்கியது.
ஏனென்றால் "அந்த நேரத்தில்" இவ்விரு நிறுவனங்களும் யுபிஐ கட்டண சந்தை பங்கில் சுமார் 80 சதவீதத்தை தன்வசம் கொண்டிருந்தன. இதை கட்டுக்குள் கொண்டுவரவும், யுபிஐ பயன்பாட்டை விரிவுபடுத்தவும் ஆர்பிஐ ஆனது பல புதிய விதிகளை மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டது. சில "சின்னச்சின்ன" மாற்றங்களுக்கு பின்னர் நவம்பர் 2024 முதல் மிகப்பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன.
03. நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டது. முன்னதாக யுபிஐ லைட் சேவையின் கீழ் ஒவ்வொரு பயனரும் ரூ.500 வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தியது.
மேலும் யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டது. கடைசியாக யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், புதிய ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) வழியாக யுபிஐ லைட்-ல் மீண்டும் பணம் சேர்க்கப்படும் புதிய அம்சமும் அறிமுகமானது. இது மேனுவல் டாப்-அப் (Manual top-up) செய்ய வேண்டிய அவசியத்தை குறைத்தது.
அறியாதோர்களுக்கு யுபிஐ லைட் என்பது யுபிஐ பின்-ஐ பயன்படுத்தாமலேயே சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் சேவையாகும். சிறிய தொகைகளை மட்டுமே அனுப்ப முடியும் என்பதால் யுபிஐ லைட் வாலட்டை அடிக்கடி நிரப்ப வேண்டி இருந்தது. இதற்காக பயனர்கள் ஒவ்வொரு குறையும் தங்கள் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து கைமுறையாக வாலட் பேலன்ஸ்-ஐ நிரப்ப வேண்டும். இந்த அவசியத்தை குறைத்தது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (NPCI) கூட இதையேத்தான் சொன்னது. இந்த செயல்முறையை யுபிஐ லைட் சேவையை நெறிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது மற்றும் கைமுறையாக ரீசார்ஜ் செய்வதற்கான தேவையை நீக்கும் என்று கூறியது. இந்த அம்சம் ஆகஸ்ட் 27, 2024 தேதியிட்ட என்பிசிஐ அறிவிப்பிலேயே அறிவிக்கப்பட்டு இருந்தது, நவம்பரில் அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
04. யுபிஐ சேவையில் கொண்டுவரப்பட்ட, ஏடிஎம் சென்டர்களுக்கு வெட்டு வைக்கும் அளவிற்கு பிரபலம் அடைந்தன. அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள வங்கிகள் தத்தம் ஏடிஎம்-களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதாக தகவல் வெளியாகின. அதாவது வழக்கம் போல ஏடிஎம் சென்டர்களில் இருந்து பணம் எடுக்கலாம், ஆனால் பணம் எடுப்பதற்கு ஆங்காகே ஏடிஎம் சென்டர்கள் இருக்காது.
நிலைமை இப்படியே சென்றால், 2025 ஆம் ஆண்டில், இந்தியாவானது க்ளோபல் மாடலை (Global mode) பின்பற்ற வேண்டி இருக்கும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். க்ளோபல் மாடல் என்றால் - ஒரு கிளைக்கு 2 ஏடிஎம்கள், ஒரு ஆன்-சைட் மற்றும் ஒரு ஆஃப்-சைட் ஏடிஎம்களை கொண்டிருப்பது ஆகும். இப்படி செய்வதன் மூலம் வங்கிகளால் பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை சமநிலையில் வைத்திருக்க முடியும்.
ஏடிஎம் சென்டர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவதற்கான முக்கிய காரணம் - மிகவும் எளிமையான முறையில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் யுபிஐ சேவை தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் விளைவாக (ஆர்பிஐ தரவுகளின்படி) இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 2023 இல் 219,000 இல் இருந்து, இந்த 2024 செப்டம்பரில் 215,000 ஆக குறைந்துள்ளது.
இந்த சரிவுக்கு, ஆஃப் சைட் ஏடிஎம்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பு தான் காரணம். இதன் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 2023 இல் 97,072 என்பதில் இருந்து செப்டம்பர் 2024 இல் 87,760 ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ரொக்கம் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தாலும் கூட ஏடிஎம் சென்டர்கள் இழுத்துமூடப்பட இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது.
அது ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) விதிமுறைகள் தான். இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் (Free ATM transactions), இயங்கக்கூடிய தன்மை (Interoperability) மற்றும் பரிமாற்றக் கட்டணம் (Interchange fees) ஆகியவைகளில் இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு உள்ள விதிமுறைகள் ஆனது ஏடிஎம்களில் முதலீடு (ATM investments) செய்வதற்கான ஆர்வத்தை அப்டியே அமுக்கி விடுகின்றன.
05. இந்திய மக்கள் மத்தியில், எதிர்பார்க்காத அளவிற்கு யுபிஐ சேவையின் பயன்பாடு விரிவடைந்த போதிலும் கூட, பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரூ.50 அல்லது ரூ.100 க்கும் குறைவான தொகையாகவே உள்ளது. இப்படிப்பட்ட சிறிய அளவிலான தொகையை பணப்பரிமாற்றம் செய்யும் செயல்முறை ஆனது லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் (Low-ticket payments) என்று அழைக்கப்படுகிறது.
இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI - National Payments Corporation of India) விரும்பியது. யுபிஐ சேவையில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் பரிவர்த்தனை தோல்விகளை குறைக்கும் நோக்கத்தின் கீழ் லோ-டிக்கெட் பேமண்ட்களை யுபிஐ லைட்டிற்கு மாற்றுவதற்கான வேலைகளை என்பிசிஐ செய்து வருகிறது.
இப்படி செய்வதன் மூலம் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சுற்றுச்சூழல் அமைப்பானது (Unified Payments Interface ecosystem) இன்னும் திறம்பட செயல்படும் என்று என்பிசிஐ நம்புகிறது. யுபிஐ சேவையில் ஏற்படும் சரிவுகள் (Declines) ஆனது, கடந்த 2016 ஆம் ஆண்டில் 8-10 சதவீதமாக இருந்தது, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 0.7 சதவீதமாக குறைந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலோட்டமாக பார்த்தால் 0.7% என்பது மிகவும் குறைவான எண்ணிக்கை தான் என்றாலும் கூட, இதை 0% க்கு அருகில் கொண்டுவருவது மிகப்பெரிய சாதனையாக இருக்கும், இந்தியாவில் தற்போது, 400 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்கள், நிகழ்நேர கட்டணங்களுக்கு யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இதில் சிறிய அளவிலான தொகையை அனுப்பும் பயனர்கள் யுபிஐ லைட் சேவையை பயன்படுத்தினால், யுபிஐ சேவையில் ஏற்படும் சரிவுகளின் எண்ணிக்கை இன்னும் குறைக்கப்படும்.
ஏனென்றால் யுபிஐ லைட் என்பது யுபிஐ பின் நம்பரை பயன்படுத்தாமலேயே குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் சேவையாகும். இதன் கீழ் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் இது குறைந்த உள்கட்டமைப்பு லோட்-ஐ கொண்டிருக்கும்.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் யுபிஐI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 25 பில்லியனை தொட்டாலும் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். அக்டோபர் 2024 இல் 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.23.50 லட்சம் கோடி வேல்யூவை எட்டிய பிறகு, கடந்த நவம்பர் மாதத்தில் யுபிஐ சேவையின் கீழ் 15.48 பில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.21.55 லட்சம் கோடி வேல்யூ பதிவாகி உள்ளது
அதிகரித்துக்கொன்டே போகும் ஸ்மார்ட்போன் ஊடுருவல், புதிய ஆப்களின் அறிமுகங்கள் மற்றும் ஃபீச்சர் போன்களில் யுபிஐ ஆதரவு போன்றவைகளின் விளைவாக 2025 ஆம் ஆண்டின் இறுதியில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 25 பில்லியனைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சுனில் ரோங்காலா (எஸ்விபி, ஹெட்-ஸ்டிராடஜி, இன்னோவேஷன் அண்ட் அனலிட்டிக்ஸ், வேர்ல்ட்லைன் இந்தியா) தெரிவித்துள்ளார்.
06. யுபிஐ சேவையின் புதிய விதிகள் ஒருபக்கம் இருக்க, கூகுள் பே, போன்பேவிற்கு புதிய யுபிஐ ஆப்களும் கூட 2024 ஆம் முளைத்தன. பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv) நிறுவனமானது, டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான ஜீரோ-சார்ஜ் யுபிஐ பரிவர்த்தனைகளை (Zero Charge UPI Transactions) அறிமுகப்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
மேலும் இந்நிறுவனம் யுபிஐ லைட் பேமெண்ட் ஆப்ஸ், யுபிஐ பே இந்தியா சேவை மற்றும் பீம் யுபிஐ (BHIM UPI) உடனான ஒருங்கிணைப்புகளையும் செய்தது. பஜாஜ் ஃபின்சர்வ் யுபிஐ லைட்டின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதன் கீழ் குறைந்தபட்ச காத்திருப்பு நேரங்களுடன் விரைவான பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இன்னும் வசதியாக்குகிறது. மேலும் இந்த ஆப்பின் இன்டர்பேஸ் ஆனது குறைவான இணைய வசதி உள்ள பகுதிகளில் கூட வேகமாக செயல்படஅனுமதிக்கிறது மற்றும் உங்களுடைய பணப்பரிவர்த்தனை நாடு முழுவதும் எளிதில் சென்றடையும். முன்னரே குறிப்பிட்டபடி பஜாஜ் ஃபின்சர்வின் யுபிஐ லைட் ஆப் ஆனது பீம் யுபிஐ உடன் முழுமையாக இணக்கமானது. இதன்கீழ் பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட் மற்றும் ஏற்கனவே உள்ள யுபிஐ ஐடிகளுடன் கனெக்ட் ஆக முடியும்.
பஜாஜ் ஃபின்சர்வ்-ஐ போலவே ஜென்வைஸ் (GenWise) ஆனது, மூத்த குடிமக்களுக்கான யுபிஐ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, வயதானோர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜென்வைஸ் யுபிஐ (GenWise UPI) சேவையை அறிமுகம் செய்தது இது இந்தியாவில், வயதானவர்களுக்கான பிரத்யேகமாக உருவாக்கப்ட்டுள்ள இண்டஸ்ட்ரி ஃபர்ஸ்ட் யுபிஐ பேமண்ட் சொல்யூஷன் ஆகும்.
ஜென்வைஸ் யுபிஐ சேவையில் ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric authentication) மற்றும் ஆடியோ அடிப்படையிலான நேவிகேஷன் (Audio-based navigation) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, முதியவர்களை மிகவும் வசதியாகவும் நம்பிக்கையுடனும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை செய்ய உதவுகின்றன. இதேபோல பல நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் யுபிஐ சேவைக்குள் சேவைக்குள் நுழைய உள்ளதால், யுபிஐ சேவையில் இன்னும் பல பெரிய-பெரிய மாற்றங்களை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








