ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியாவுக்கு ஜாக்பாட்: 5ஜி கதிர்வீச்சு வரம்பு 10 வாட் ஆக உயர்வு.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் பல கோடி மக்கள் தற்போது இந்த 5ஜி சேவையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 5ஜி சேவை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது 5ஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சுக்கான அதிகபட்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. குறிப்பாக இந்த புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் 5ஜி டவரில் ஒரு சதுர மீட்டருக்கு 5 வாட் என்ற அளவில் உள்ள கதிர்வீச்சின் அதிகபட்ச மின் அடர்த்தி இனி 10 வாட்-ஆக உயர்த்தப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் ஒரு டவரில் இருந்து அதிக தொலைவுக்கு சிக்னல் கிடைப்பதுடன், அதிக பரப்பளவில் சேவையை வழங்க முடியும். மேலும் புதிய கோபுரங்களை (டவர்களை) அமைப்பதற்கான தேவையும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலவும் குறையும் வாய்ப்பு உள்ளது.
அதேபோல் 5ஜி சேவை விரிவாக்கத்துக்கு தற்போதைய கதிர்வீச்சு வரம்புகள் தடையாக இருப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தன. இந்தியா இதுவரை சர்வதேச கதிர்வீச்சு பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைவிடக் கடுமையான வரம்புகளைப் பின்பற்றி வந்தது. அதுவும் 1 வாட் என்றிருந்த வரம்பு கடந்த ஆண்டு 5 வாட்-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 வாட் ஆகு உயர்த்தி மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்த புதிய கதிர்வீச்சு வரம்பு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் உள்ள அளவுகளுக்கு இணையாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 5ஜி தொலைத்தொடர்பு கட்டமைப்பு சர்வதேச நடைமுறைகளுடன் மேலும் நெருக்கமாகும்.
இந்த மாற்றத்தின் மூலம் 5ஜி சேவையைத் தீவிரமாக விரிவுபடுத்தி வரும் வோடபோன் ஐடியா (VI) நிறுவனத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ள பார்தி ஏர்டெல் (airtel), ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனங்களும் ஏற்கனவே உள்ள டவர்களை சிறப்பாகப் பயன்படுத்திக் கூடுதல் முதலீட்டுச் செலவைக் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் சென்னை பிஎஸ்என்எல் (BSNL) தலைமை பொது மேலாளர் சுதாகரராவ், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்ற தகவல்களைக் கூறியுள்ளார். அதன்படி சென்னை பிஎஸ்என்எல் வட்டாரத்தில் செயல்படும் 1,902 செல்போன் கோபுரங்களில், இதுவரை 1,214 கோபுரங்கள் 4ஜி சேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கோபுரங்களையும் அடுத்த 6 மாதங்களுக்குள் 4ஜி சேவைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், தற்போது செல்போன் சேவையில் நிலவி வரும் இடையூறுகள் பெருமளவில் சரிசெய்யப்படும். மேலும், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பிஎஸ்என்எல். நிறுவனத்தின் 5ஜி (5G) சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications