50 புதிய ஆதார் பதிவு மையங்கள்.. குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு அரசு..
சமீபத்தில் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு முழுவதும் 50 புதிய ஆதார் (Aadhaar) மையங்கள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். இதுதவிர புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன்படி தமிழக அரசுத் துறைகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டு வருகின்றன எனவும், இதுவரை 41 லட்சம் கோப்புகள் டிஜிட்டல்மயம் ஆகப்பட்டுள்ளன எனவும், அதன்பின்னர் 1.50 லட்சம் அரசு ஊழியர்கள் காகித பயன்பாடின்றி டிஜிட்டலில் கோப்புகளைக் கையாள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் சென்னையில் 1,869 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு ஃபைபர் கார்ப்பரேஷன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
குறிப்பாக இ-சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு அரசின் பல சேவைகள் எளிமையாக கிடைக்கின்றன. முன்னர் 7 ஆயிரம் இ-சேவை மையங்கள் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் 25 ஆயிரம் இ-சேவை மையங்கள் உள்ளன. பின்பு இவற்றின் மூலம் கடந்த ஆண்டு சுமார் 1.20 கோடி பேர் பயன்பெற்றனர். கிராமப்புறங்களில் 2 கி.மீ.க்கு ஒரு மையம் நகர்ப்புறத்தில் ஒரு கி.மீ.க்கு ஒரு மையம் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு.
அதுவும் இந்த இ-சேவை மயம் தொடங்க எளிதில் அனுமதி அளிக்கப்படுகிறது. மக்கள் இ-சேவை மையம் மூலம் பேருந்துகளுக்கு டிக்கெட் பெறும் புதிய திட்டமும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதுதவிர சில முக்கிய புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
அதாவது ஆதார் சேவைகளை மக்கள் எளிதாக பெற, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் புதிதாக 50 சேவை பதிவு மையங்கள் தொடங்கப்படும். பின்பு இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்அப் செயலி மூலம் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் முதல்கட்டமாக ரூ.3.85 கோடி செலவில் 50 சேவைகள் வழங்கப்படும்.
மேலும் அரசு திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் வகையில், பயனாளிகளின் அடையாளத்தைச் சரிபார்க்கவும் இ-கேஒய்சி கைபேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதியோர் ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும். எனவே பழைய ஆதார் கார்டு வைத்திருந்தால் அதை அப்டேட் செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








