Home
News

திக் திக் நிமிடங்கள்.. ஆகஸ்ட் 5ல்.. ISRO-வின் சந்திரயான் 3-க்கு அடுத்தடுத்து காத்திருக்கும் 4 ஆபத்துகள்!

கசப்பான உண்மை என்னவென்றால்.. இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷன் (ISRO Chandrayaan-3 Mission) ஆனது இன்னும் பாதி கிணற்றை கூட தாண்டவில்லை. எந்த சிக்கலும் இல்லாமல் அது விண்வெளிக்குள் செலுத்தப்பட்டு விட்டது என்கிற ஒரே காரணத்திற்காக சந்திரயான்-3 மிஷன் வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு இருந்தால் அது அறியாமையாகும்.

இனிமேல் தான் உண்மையான திக் திக் நிமிடங்கள் ஆரம்பமாக உள்ளன. ஏனென்றால் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலமானது மிகவும் சமீபத்தில் தான் (இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று தான்) நமது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி உள்ளது.

ISRO-வின் சந்திரயான் 3-க்கு அடுத்தடுத்து காத்திருக்கும் 4 ஆபத்துகள்!

அதாவது ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது இப்போது தான் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதைக்குள்ளேயே (Translunar Orbit) நுழைந்துள்ளது. அதாவது இப்போது தான் சந்திரயான்-3 ஆனது நிலவை நோக்கிய தனது பயணத்தை.. பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி உள்ளது.

இதுவொன்றும் வாட்ஸ்அப் வழியாக வந்த பார்வேட் மெசேஜில் உள்ள தகவல் அல்ல; இஸ்ரோவிடம் இருந்து வந்துள்ள அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும். "சந்திராயன்-3 ஆனது பூமியை சுற்றிய தனது சுற்றுப்பாதையை முடித்து, நிலவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"அடுத்த நிறுத்தம்: சந்திரன் தான்! சந்திரனை வந்தடையும் போது, ​​ஆகஸ்ட் 5, 2023 இல் சந்திரயான்-3 ஆனது சந்திர சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்படும்படி திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. இந்த கட்டத்தில் தான் சந்திரயான்-3 மிஷன் ஆனது பாதி கிணற்றை தாண்டி விட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.

"மீதி கிணறு".. அதாவது சந்திரயான்-3 விண்கலமானது வெற்றிகரமாக சந்திர கிரகத்தில் தரை இறக்கப்படும் வரையிலாக உள்ள கட்டங்கள்.. மிகவும் ஆபத்தான பகுதியாக இருக்கும். ஏனென்றால்.. நேற்றோ இன்றோ அல்ல; நிலவு தொடர்பான விண்வெளி ஆராய்ச்சிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நிலவில் தரை இறங்குவது என்பது எப்போதுமே மிகவும் கடினமான காரியமாகவே உள்ளது.

அதற்கு விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் மீறிய சில இயற்கை சக்திகள் தான் காரணம். அந்த சக்திகளை இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு காத்திருக்கும் ஆபத்துகள் என்று கூறுவதில் பெரிய தவறொன்றும் இல்லை.. அதென்ன ஆபத்துகள்? என்று பார்க்கும் போது முதலில் இருப்பது - சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைவது!

பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொள்வதும், சந்திர கிரகத்தின் மேற்பரப்பில் இறங்குவதற்கும் இடையே ஒரு ஆபத்து காத்திருக்கிறது. அதுதான் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைவது. விண்கலத்தின் உந்துவிசை அமைப்பில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டால், சந்திர கிரகத்தின் சுற்றுப்பாதையில் சரியாக நுழைய முடியவில்லை என்றால் நிலவில் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்படும்.

அடுத்ததாக உள்ள ஆபத்து - நிலவின் தரைப்பகுதியில் காத்திருக்கும்! சந்திரயான்-3 ஆனது நிலவில் தரை இறங்கும் முழு செயல்முறையும் தன்னாட்சியாக நடக்கும்; அதாவது பூமியிலிருந்து இஸ்ரோவால் அதை கட்டுப்படுத்த முடியாது. சரியான வேகம், சரியான உயரம் என எல்லாமே சரியாக இருந்தால் தான் சந்திராயன்-3 விண்கலத்தால் மென்மையான தரை இறக்கத்தை சாதிக்க முடியும்.

மூன்றாவதாக உள்ள ஆபத்து - சந்திர தூசிகள் ஆகும்! ஒரு விண்கலம் மென்மையாக தரையிறக்கப்பட்ட பின்னனர் கீழே சந்திர தூசிகள் என்கிற பிரச்சினை காத்திருக்கும். ஒரு விண்கலம் சந்திர கிரகத்தை தொடும் போது, ​​லேண்டரின் த்ரஸ்டர்கள் சந்திர மேற்பரப்பில் உள்ள சந்திர தூசியை அதிக வேகத்தில் கிளப்பிவிடும்.

சந்திர தூசிகள் ஆனது விண்கலத்தில் உள்ள கேமரா லென்ஸை மறைத்து, தவறான அளவீடுகளுக்கு வழிவகுக்கலாம். நினைவூட்டும் வண்ணம் நாசாவின் அப்பல்லோ 15 மிஷனை (NASA Apollo 15 Mission) உட்பட மற்ற அனைத்து அப்பல்லோ மிஷன்களும் கூட சந்திர தூசி காரணமான சிக்கல்களை எதிர்கொண்டன.

நான்காவது மற்றும் கடைசியாக உள்ள ஆபத்து என்னவென்றால் - அங்கே ஜிபிஎஸ் இல்லை; நிலவில் துல்லியமாக தரையிறங்குவதற்கு நம்மிடம் எந்த டிஜிட்டல் வரைபடமும் இல்லை. இதன் பொருள் என்னவென்றால், நிலவில் தரை இறங்கப்போகும் ஒரு விண்கலத்தில் உள்ள ஆன்போர்டு சிஸ்டம்கள் ஆனது துல்லியமாக இறங்குவதற்கு விரைவான கணக்கீடுகள் மற்றும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் தன்னியக்கமாக நடக்கும், அதுமட்டுமின்றி மிகவும் விரைவாகவும் நடக்கும். இதில் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் கடைசி நிமிட சிக்கல்கள் ஏற்படலாம். ஏனென்றால் சந்திர கிரகன் முழுக்க பள்ளங்கள் உள்ளன, கற்பாறைகள் சிதறி கிடக்கின்றன. இப்போது சொல்லுங்கள்.. சந்திரயான்-3 இன்னும் பாதி கிணற்றை கூட தாண்டவில்லை தானே? எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Obstacles Waiting For Chandrayaan 3 As ISRO Planned Lunar Orbit Insertion on August 5th
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X