சிப் பொருத்தி நூதன முறையில் பெட்ரோல் பங்க்கில் மோசடி! இனி ரீடிங் மீட்டரையும் நம்ப முடியாது போல?
பெட்ரோல் விலை ஆண்டுக்கு-ஆண்டுக்கு எதிர்பார்த்திடாத அளவிற்கு வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. மக்களும் இந்த விலை அதிகரிப்பை விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு நாட்களை கடத்தி வருகின்றனர். நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலில் கலப்படம் மற்றும் மோசடி போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதில் இப்பொழுது ஒரு மாஸ் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெட்ரோல் பங்கில் நீங்கள் காசு கொடுத்து பெட்ரோல் போடும் பொழுது, அந்த இயந்திரத்தில் பார்க்கும் எண்களை வைத்தே உங்களுக்குச் சரியான சேவை வழங்கப்பட்டுள்ளது என்று நம்பி இருப்பீர்கள், ஆனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இந்த ரீடிங் மீட்டரில் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி போலியான கணக்கைக் காட்டி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இந்த இயந்திரத்தின் மூலம் ரீடிங் மீட்டரில் போலியான எண்களை நிமிடம் காட்டி பெட்ரோல் பங்க் நிறுவனங்கள் நம்மிடம் சுரண்டல் செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்திலிருந்து உங்களுக்கு பெட்ரோல் போடும் பொழுது, 1 லிட்டருக்கு சுமார் 40 முதல் 70 மி.லிட்டர் வரை குறைத்து விநியோகிக்கப்படுகிறது. ஆனால், உங்களுக்குச் சரியான ரீடிங் போல் இயந்திரத்தின் டிஸ்பிளேயில் காண்பிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் விநியோகம் செய்வதில் மோசடி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்படி மாவட்ட போலீஸார் சம்மந்தப்பட்ட பங்க்கைச் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் பெட்ரோல் பங்க் இயந்திரங்களில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டு, போலியான கணக்கைக் காட்டி விநியோகத்தில் மோசடி செய்யப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பெயரில் கோதாவரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர், அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 3 பெட்ரோல் பங்குகளில் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டது உறுதியானது. இந்த மோசடி தொடர்பாக போலீஸார் 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது என்பவரிடமிருந்து எலக்ட்ரானிக் சிப்களை ரூ.80,000 முதல் ரூ.1,00,000 வரை கொடுத்து வாங்கியதாகத் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஹைதராபாத் முழுவதிலும் உள்ள பங்குகளில் சோதனை நடத்தப்பட்டது. ஹைதராபாத்திலும் சுமார் 13 பெட்ரோல் பங்க்குகளில் சிப் பொருத்தி மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

எலக்ட்ரானிக் சிப் பொருத்தி மோசடி செய்த அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 39 பெட்ரோல் பங்க்குகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படும் இயந்திரத்தில் எலக்ட்ரானிக் சிப் பொருத்துவதன் மூலம் ஒரு லிட்டருக்கு 40 முதல் 70 மி.லிட்டர் வரை சுரண்டப்படுகிறது. ஆனால், இயந்திரம் உங்களுக்கு ஒரு லிட்டர் விநியோகித்ததாகக் காண்பிக்கும்.


Click it and Unblock the Notifications