300 யூனிட் மின்சாரம் இலவசம்.. 1 கோடி வீடுகள்.. அடித்தட்டு வர்க்கத்துக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு!
2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை (Budget 2024) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூஃப்டாப் சோலாரைசேஷன் (Rooftop Solarization) திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். விவரம் இதோ.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பசுமை வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பசுமை ஆற்றல், ரூஃப்டாப் சோலாரைசேஷன், மின்சார வாகன ஈகோசிஸ்டம் திட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

பசுமை ஆற்றல் (Green Energy): 2070ஆம் ஆண்டுக்குள் நெட்-ஜீரோ உமிழ்வை (Net-zero Emissions) எட்டும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதில் கடல் காற்றாலை ஆற்றலுக்கு (Offshore Wind Energy) சீரான இடைவெளியில் நிதி ஒதுக்கப்படும். அதேபோல நிலக்கரி வாயுவாக்கம் (Coal Gasification) மற்றும் திரவமாக்கமானது (Liquefaction), 2030ஆம் ஆண்டுக்குள் 100 மெகா டன்னாக அதிகரிப்படும்.
இதன் மூலம் இயற்கை எரிவாயு (Natural Gas), மெத்தனால் (Methanol) மற்றும் அம்மோனியா (Ammonia) இறக்குமதியை குறைக்க முடியும். போக்குவரத்து வாகனங்களில் கம்ப்ரஸ்டு பயோ கேஸ் (CBG), கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ் (CNG) எரிவாயுகள் மற்றும் உள்நாட்டு தேவைக்காக பைப்ட் நேச்சுரல் கேஸ் (PNG) எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு படிப்படியாக அதிகரிப்படும்.
மின்சார வாகன ஈகோசிஸ்டம் (Electric Vehicle Ecosystem): மின்-வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் மற்றும் பலப்படுத்தும் நோக்குடன் உற்பத்தி உள்கட்டமைப்புக்கு ஆதரவளிக்கப்படும். அதேவேளையில் பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு இ-பஸ்களை அதிக அளவில் கொண்டுவருவதும் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

ரூஃப்டாப் சோலாரைசேஷன் (Rooftop Solarization): நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இதன் மூலம் மாதாமாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பெற்று கொள்ளலாம். இதனால், ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையிலான பணம் சேமிப்பாக மாறும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளில் பிரதமர் மோடி எடுத்த தீர்மானத்தை பின்பற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிரதான்மந்திரி சுரோதயா யோஜ்னா (Pradhanmantri Surodaya Yojna) திட்டத்தின் ஒருபகுதியாக இத்திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.
ரூஃப்டாப் சோலாரைசேஷன் மூலம் மின்சாரம் வழங்குவதையும், உபரி மின்சார உற்பத்தியின் மூலம் கூடுதல் வருமானத்தை மக்களுக்கு வழங்குவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் ரூஃப்டாப் சோலாரைசேஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








