புது ரூல்ஸ்.. டோல் கேட்களில் ரூ.100 க்கு பதிலாக ரூ.200 கட்டணம்.. வாகன ஓட்டிகளுக்கு 30 நாள் கெடு!
இந்திய அரசங்கமானது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் போது செலுத்தக்கூடிய கட்டணம் தொடர்பான புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் - சரியாக இன்னும் 1 மாதத்தில், அதாவது நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
2025 நவம்பர் 15 ஆம் தேதி முதல் செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் (FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்குள் நுழையும் வாகனங்கள் - ரொக்கமாக பணம் செலுத்த விரும்பினால் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆக செல்லுபடியாகும் ஃபாஸ்டாக்கை வாங்க சரியாக 30 நாட்கள் கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கூகுள்பே, போன்பே மற்றும் பெட்டிமே போன்ற ஆப்களை பயன்படுத்தி, ரொக்கமாக கொடுக்காமல் - யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface) வழியாக பணம் கொடுப்பதை தேர்வு செய்யும் வாகன ஒட்டிகள் 2 மடங்கிற்கு சுங்கக்கட்டணத்திற்கு பதிலாக 1.25 மடங்கு மட்டுமே செலுத்தலாம் என்றும் சிறிய விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஃபாஸ்டாக் மூலம் ஒரு வாகனம் குறிப்பிட்ட டோல் கேட்டை கடப்பதற்கான கட்டணம் ரூ.100 ஆக இருந்தால், அது ரொக்கப் பணமாக செலுத்துவதற்கு ரூ.200 ஆகவும், யுபிஐ வழியாக செலுத்தினால் ரூ.125 ஆகவும் உயரும். போக்குவரத்து ஓட்டத்தை சீராக்கவும், சுங்க வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பயணிகள் டிஜிட்டல் முறைகளை பின்பற்றுவதை ஊக்குவிக்கவும் - இந்த புதிய விதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய நடவடிக்கை - தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008 இல் செய்யப்பட்ட திருத்தத்தின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ரொக்கப் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, என்எச்ஏஐ (NHAI) அந்த ஃபாஸ்டாக் அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்தியது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு ஆர்எப்ஐடி (RFID) கார்டுகளை மீண்டும்-மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி தடையற்ற பயணங்களை செய்ய அனுமதிக்கிறது.
கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டுமே ப்ரீபெய்ட் பாஸ் பொருந்தும். கடந்த அக்டோபர் 15, 2025 அன்று ஒரு எக்ஸ் தள பதிவின் வழியாக - புதிய ஃபாஸ்டாக் ஆண்டு பாஸ் ஆனது 25 லட்சம் பயனர்கள் என்கிற மைல்கல்லை தாண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோல் கேட் மற்றும் ஃபாஸ்டாக் தொடர்பான மற்ற சமீபத்திய செய்தியை பொறுத்தவரை, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸின் (Jio Financial Services) துணை நிறுவனமான ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payments Bank) ஆனது டோல்கேட்களில் "தடையற்ற சுங்கச்சாவடி கட்டண வசூல் முறை" ஆன ஃப்ரீ-ப்ளோ டோல் சிஸ்டமை (Free-flow toll system) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
ஃப்ரீ-ப்ளோ டோல் சிஸ்டம் என்றால் ஒரு மேம்பட்ட மின்னணு சுங்க வசூல் தொழில்நுட்பம் ஆகும். இது பாஸ்டாக் ஏஎன்பிஆர் (FASTag ANPR) என்கிற ஃபாஸ்டேக் ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) அடிப்படையிலான மல்டி-லேன் ஃப்ரீ ப்ளோ டோல் சிஸ்டம் (Multi-Lane Free Flow Toll System) ஆகும்.
இந்த மல்டி-லேன் ஃப்ரீ ப்ளோ டோல் சிஸ்டம் ஆனது பயணிக்கும் வாகனங்களை மெதுவாக்கவோ, நிறுத்தவோ அல்லது நியமிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை பயன்படுத்தவோ தேவையில்லாமல் துல்லியமாக அடையாளம் கண்டு, வகைப்படுத்தி, கட்டணம் வசூலிக்கும் என்று ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் செய்துள்ள பிஎஸ்இ தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இப்போதைக்கு இந்த சிஸ்டம், குருகிராம்-ஜெய்ப்பூர் பாதையில் உள்ள ஷாஜகான்பூர் மற்றும் மனோகர்புரா ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








