மார்ச் மாசம் ஆரம்பமேவா! WhatsApp-க்கு வந்த முக்கிய மாற்றம்! சத்தமின்றி Settings-ல் சேர்க்கப்பட்ட புது மேட்டர்!
கடந்த சில தினங்களில், வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய மாற்றம் "இதுதான்" என்று தாராளமாக கூறலாம். அப்படி என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது? வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-ல் புதிதாக என்ன சேர்க்கப்பட்டுள்ளது? அதனால் என்ன பயன்? அதை பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்:
மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப்பில் உள்ள சேர்ச் திறன்களை (Search Capabilities) மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ் புதிய காலண்டர் அம்சம் (Calendar Feature) சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் இதை சேர்ச் பை டேட் (Search by Date) என்று அழைக்கிறது.

பெயர் குறிப்பிடுவது போல இந்த அம்சத்தின் கீழ் கிடைக்கும் காலண்டரை பயன்படுத்தி, தேவையான தேதிகளின் கீழ் உள்ள மெசேஜ்கள், போட்டோக்களை மற்றும் வீடியோக்களை மிகவும் எளிமையாக தேடி கண்டுபிடிக்க முடியும். முன்னதாக சேர்ச் ஆப்ஷனின் கீழ் நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகளை கொண்ட மெசேஜ்களை மட்டுமே உங்களால் அணுக முடியும்.
அப்போதும் கூட குறிப்பிட்ட வார்த்தையை கொண்ட எல்லா மெசேஜ்களையும் நீங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இனிமேல் அந்த அளவிலான சிரமம் கூட உங்களுக்கு இருக்காது. புதிய சேர்ச் பை டேட் அம்சத்தின் கீழ்.. ஒரு பெர்சனல் சாட் அல்லது க்ரூப் சாட்டில்.. நேரடியாக ஒரு குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்து, நேரடியாக அந்த தேதியில் நீங்கள் நிகழ்த்திய உரையாடல்களை அணுக முடியும்!

இந்த புதிய அம்சத்தை எங்கே அணுகுவது? எப்படி பயன்படுத்துவது? புதிய 'சேர்ச் பை டேட்' அம்சத்தை பயன்படுத்த விரும்பும் ஆண்ட்ராய்டு பயனர்கள், உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள ஏதேனும் ஒரு பெர்சனல் சாட் அல்லது க்ரூப் சாட்டிற்கு செல்லவும். பின்னர் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும் (ஐஓஎஸ் பயனர்கள் காண்டாக்ட் அல்லது க்ரூப் பெயரை கிளிக் செய்ய வேண்டும்)
பின்னர் அதன் கீழ் கிடைக்கும் சேர்ச் (Search) விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது அதே சேர்ச் விருப்பத்தின் வலது பக்க மூலையில் காலண்டர் போன்ற சின்னத்தை பிரதிபலிக்குமொரு புதிய ஐகானை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும் ஒரு பாப்-அப் காலண்டர் தோன்றும்; அதில் உங்களுக்கு விருப்பமான தேதியை (எந்த தேதியில் நிகழ்த்திய உரையாடல்களை பார்க்க விரும்புகிறீர்களோ.. அந்த தேதியை) தேர்ந்தெடுக்கவும்.

உதாரணமாக, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதியை தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை தேர்வு செய்து "ஓகே"(OK) என்கிற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான், குறிப்பிட்ட பெர்சனல் சாட்டில் அல்லது க்ரூப் சாட்டில்.. 2023 செப்டம்பர் 6 ஆம் தேதியன்று நீங்கள் அனுப்பிய மெசேஜ்கள் காட்சிப்படுத்தப்படும். சுருக்கமாக நீங்கள் விரும்பிய தேதிகளில், நீங்கள் அனுப்பிய பழைய மெசேஜ்களை டக்கென்று பார்க்க அனுமதிக்கும்.
புதிய 'சேர்ச் பை டேட்' அம்சம் யாருக்கெல்லாம் கிடைக்கிறது? அனைவருக்கும் கிடைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று, உங்களுடைய வாட்ஸ்அப் செயலியை, லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு இன்னமும் லேட்டஸ்ட் வெர்ஷன் வந்து சேரவில்லை என்றால்.. இன்னும் ஒரு சில தினங்கள் காத்திருக்கவும்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வாட்ஸ்அப்பில் 4 புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்கள் (Text Formatting Options) அறிமுகம் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அணுக கிடைக்கும் போல்ட் (Bold), இடாலிக் (Italic), ஸ்ட்ரைக்த்ரோ (Strikethrough) மற்றும் மோனோஸ்பேஸ் (Monospace) ஆகிய 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களுடன் புதிதாக 4 விருப்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அவைகள் புல்லடட் லிஸ்ட் (Bulleted List), நம்பர்டு லிஸ்ட் (Numbered List), பிளாக் கோட் (Block Quote) மற்றும் இன்லைன் கோட் (Inline Code) என்று அழைக்கிறது. இதுவும் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் அணுக கிடைக்க்கிறது. மேலும் வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகளும் கூட இந்த புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களை பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








