230 சீன ஆப்ஸ்களுக்கு ஆப்பு! இதுவரை இல்லாத உற்சாகத்தில் இந்தியர்கள்! ஏன் தெரியுமா?
உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சில ஆப்ஸ்களை தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட பல பயன்பாடுகள் தற்போது ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கவில்லை. சீன இணைப்புகளை கொண்ட 138 பந்தயம் மற்றும் சூதாட்ட பயன்பாடுகள், 94 கடன் வழங்கும் பயன்பாடுகளை தடுக்கும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்தல்
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் ஐடி சட்டத்தின் கீழ் பிரிவு 69 படி இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இந்த ஆப்ஸ்கள் ஆனது சிறிய அளவிலான கடன்களை பெற்ற பொது மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களை துன்புறுத்தும் ஆப்ஸ்கள்
இந்தியர்களை பல்வேறு முக்கிய பொறுப்பில் அமர்த்தி சீன நாட்டினரால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் இவை அனைத்தும் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆப்ஸ்கள் பொது மக்களை கடனை பெற வற்புறுத்துகின்றன. தொடர்ந்து வட்டியை ஆண்டுதோறும் 3000 சதவீதம் வரை உயர்த்துகிறார்கள். கடனாளிகள் முழு கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத போது அவர்களை துன்புறுத்தத் தொடங்குகின்றனர்.
மார்பிங் புகைப்படங்கள் மூலம் மிரட்டல்
கடன் பயன்பாடுகள் கடனாளிகளை ஆபாசமாக சித்தரித்து அனுப்புகின்றனர். அவர்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவோம் என அச்சுறுத்துகின்றனர். அந்த நபரின் தொடர்புகளில் உள்ள பிற எண்களுக்கு உங்கள் மார்பிங் புகைப்படங்களை அனுப்பிவிடுவோம் என மிரட்ட ஆரம்பிக்கின்றனர். இதுதொடர்பாக பல புகார்கள் எழுந்திருக்கிறது.
தடை செய்யும்படி குவிந்த கோரிக்கைகள்
தெலுங்கானா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களும், மத்திய உளவுத்துறை அமைப்புகளும் இந்த செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆராய்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை
கோரிக்கைகளின் அடிப்படையில், MHA ஆறு மாதங்களுக்கு முன்பே 28 சீன கடன் வழங்கும் பயன்பாடுகளை ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் பிற 94 பயன்பாடுகள் இ-ஸ்டோர்களில் தொடர்ந்து கிடைத்து வந்தன. இவை அனைத்தும் மூன்றாம் தரப்பு இணைப்புகள் மூலம் செயல்படுவது கண்டறியப்பட்டது. அதன்படி தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பந்தயம், சூதாட்டம் மற்றும் கடன் வழங்கும் ஆப்ஸ்கள்
நடவடிக்கை எடுக்கப்பட்ட பல பயன்பாடுகள் இப்போதே ஸ்மார்ட்போன்களில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட பல பயன்பாடுகளின் இணைப்புகள் பிற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்ய கிடைப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது, அதில் பயனர்கள் சட்டவிரோதமான கடன் வழங்கும் தளங்கள், பந்தயம் மற்றும் சூதாட்ட ஆப்ஸ்களில் இருந்து கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

துரிதமாக செயல்பட்டு ஏமாற்றும் லோன் ஆப்ஸ்கள்
டிஜிட்டல் யுகத்தில் லோன் ஆப்ஸ்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இதில் வரும் சிக்கலை பலரும் அறிவதில்லை. 10 வினாடிகளில் கடன், கண் இமைக்கு நேரத்தில் கடன் தொகை, மூன்று ஸ்டெப்ஸ் முடித்தால் வங்கிக் கணக்கில் பணம் வரவு என பல விளம்பரங்களுடன் லோன் ஆப்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த லோன் ஆப்ஸ்கள் எல்லாம் எங்கிருந்து செயல்படுகிறது, யார் இவர்கள், நமது இருப்பிடம் கூட உறுதி செய்யாமல் நமக்கு ஏன் அவர்கள் லோன் கொடுக்க வேண்டும், இவர்களை நேரில் சந்திக்க முடியுமா என்று எப்போதாவது யோசித்தது உண்டா? சரி, நாம் வாங்கியக் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் இவர்கள் எப்படி வசூலிப்பார்கள் என்று தெரியுமா?
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சட்டவிரோத கடன் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதுபோன்ற கடன் பயன்பாடுகளால் துன்புறத்தல் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. லோன் ஆப் ஏஜென்ட்களின் துன்புறத்தல் காரணமாக தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. இதையடுத்து நாட்டில் உள்ள சட்டவிரோத/ஆதாரமற்ற கடன் பயன்பாடுகளை ஒடுக்குவதற்கு என மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் லோன்
இந்த சட்டவிரோத ஆப்ஸ்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் எதையும் பொருட்படுத்தாமல் கடன்களை வழங்குகின்றன. மொபைலில் உள்ள தொடர்பு பட்டியலில் தொடங்கி பல முக்கிய அணுகலை வாடிக்கையாளர்களிடம் இருந்து நூதன முறையில் பெறுகின்றன. நீங்கள் பணத்தை திரும்ப தரவில்லை என்றால் உங்களை தவறாக சித்தரித்து உங்களது தொடர்பு பட்டியலில் இருக்கும் எண்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டுகிறார்கள். இந்த லோன் ஆப்ஸ்கள் வட்டி அடிப்படையிலும் முறையற்று செயல்படுகின்றன.
தொடரும் நடவடிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து பயன்பாடுகளையும் ஆராய்ந்து சட்டப்பூர்வமாக செயல்படும் பயன்பாடுகளை "ஒயிட் லிஸ்ட்" பட்டியலில் இணைக்கும் என்றும் அதற்கு மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனுமதி வழங்கப்படும் என்றும் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications








