என்னடா அநியாயம் இது! இப்படியா எங்க WhatsApp, Facebook தகவலை திருடுவீங்க! 17 கோடி பேர் பாதிப்பு!
இந்தியா, டிஜிட்டல் இந்தியாவாக வேகமாக உருமாறி வருகிறது. எவ்வளவு வேகமாக நமது நாடு டிஜிட்டலாக மாற்றமடைகிறதோ, அதே வேகத்தில் டிஜிட்டல் பாதுகாப்பு மீறல்களிலும் வேகமாக பாதிப்படைந்து வருகிறது. வியாழன் அன்று, 17 கோடி இந்தியர்களின் WhatsApp மற்றும் Facebook தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
இதை வெறும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தகவல் என்று மட்டும் நினைத்துக்கொண்டு அசால்ட்டாக விட்டுவிடாதீர்கள். உங்கள் போனின் தகவல் முதல், நீங்கள் கேஸ் புக் செய்தது, வங்கி கணக்கு விபரம், IT தாக்கல் செய்த தகவல், உங்கள் வீட்டின் முகவரி, உங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு விபரம், அலுவலக வங்கி கணக்கு விபரம் என்று இந்தியர்களிடம் இருந்து திருடப்பட்ட டிஜிட்டல் தகவல்களில் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

மார்ச் 23, வியாழன் அன்று தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் காவல்துறையினரால் தீவிரமான தேசிய பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய தரவு மீறல் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 16.8 கோடி இந்திய குடிமக்களின் தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல் (PII) திருடப்பட்டு, இப்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மோசடி திருட்டில், இந்தியாவின் தேசிய பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய தனிநபர் தகவல்களும் திருடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 கோடி நபர்களின் குறிப்பிடத்தக்க முக்கியமான PII-களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்த குற்றத்தின் பின்னணியில் மக்களுடைய என்னென்ன தகவல்கள் திருடப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள, பதிவை தொடர்ந்து படியுங்கள். தொலைப்பேசி எண்கள், பான் கார்டு எண்கள், எரிவாயு மற்றும் பெட்ரோலியம் போன்ற சேவைகளின் பதிவு விவரங்கள் வரை திருடப்பட்டுள்ளது.
டிமேட் கணக்குகளின் விவரங்கள், அதிக நிகர மதிப்புள்ள நபர்களின் வங்கி விவரங்கள், விண்ணப்பங்களின் தரவுத்தளங்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விபரங்கள், தனியார் வங்கிகளின் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களின் விவரங்கள், மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனங்களின் பணியாளர்களின் PII-க்கள் மற்றும் அடிக்கடி பிலைட் சேவைகளை பயன்படுத்திய விபரங்கள் போன்றவையும் திருடப்பட்டுள்ளது.

மேலும், 1.2 கோடி வாட்ஸ்அப் பயனர்கள் மற்றும் 17 லட்சத்துக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் அடையாள விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த விவரங்களில் சிலரின் லாகின் ஐடிகள், இன்டர்நெட் புரோட்டோகால் (ஐபி) முகவரி, வசிக்கும் நகரம், வயது, மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைப்பேசி எண்கள் மற்றும் பிற தகவல்கள் அடங்கும். இது தவிர, பிரௌசிங் ஹிஸ்டரி மற்றும் NEET விண்ணப்பித்தவர்களின் தகவல்களும் இந்த மீறலில் திருடப்பட்டுள்ளது.
சைபராபாத் போலீஸ் கமிஷனர் எம் ஸ்டீபன் ரவீந்திரன் பிடிஐக்கு அளித்த அறிக்கையின்படி, விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இருப்பினும், உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் அமைந்துள்ள மூன்று கால் சென்டர்களில் இருந்து இந்த திருட்டு நடந்ததாகத் தெரிகிறது. முதற்கட்டமாக, ஒரே கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை காவல்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. குற்றவாளிகள் 140-க்கும் மேற்பட்ட வகை தரவுகளைத் திருடி விற்றதாகத் தெரிகிறது. 50,000 பயனர்களின் தரவை வெறும் 2000 ரூபாய்க்கு விற்றதாகத் தெரிகிறது.
இணையக் குற்றவாளிகள் இந்த தகவல்களை வைத்து மக்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை மீறலாம். ஸ்பியர் ஃபிஷிங் தாக்குதல்கள், ஆள்மாறாட்டம், அச்சுறுத்தல் மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்களுக்கும் இந்தத் தகவல் பயன்படுத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள் சைபர் குற்றங்களிலிருந்து அவர்களை விழிப்புடன் பாதுகாப்பாக இருக்கும்படி, வலியுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








