யாரு சாமி நீ.. 15 மில்லியன் யூனிட் Jio Bharat Phoneகள்.. ரூ.999 விலையில் தயாரிப்பது யார் தெரியுமா?
ஜியோ (Jio) நிறுவனம், அதன் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மிகவும் குறைந்த விலையில் ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது, ஜியோ நிறுவனம் 15 மில்லியன் ஜியோ பாரத் போன்களை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னணு உற்பத்தியாளர் டிக்சன் டெக்னாலஜிஸ் (Dixon Technologies) செவ்வாயன்று ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து 15 மில்லியன் ஜியோ பாரத் போன்களை (Jio Bharat Phone) தயாரிப்பதற்கான பெரிய ஆர்டரை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த 15 மில்லியனில், டிக்சன் நிறுவனம் ஏற்கனவே 1 மில்லியன் ஜியோ போன்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஃபீச்சர் போன்களுக்கான வணிகம் மிகவும் ஆரோக்கியமானதாகத் தெரிகிறது என்று டிக்சன் நிறுவனம் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இது கிட்டத்தட்ட ரூ. 1,500 கோடி மதிப்பிலான வணிகம் என்றும், வணிகரீதியான உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் டிக்சன் டெக்னாலஜிஸின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அதுல் லால் கூறியுள்ளர்.
ஜியோ, இந்த மாத தொடக்கத்தில் அதன் 4G ஃபீச்சர் போனை ரூ.999 விலைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்காக கார்பன் நிறுவனத்துடன் இணைந்து பீட்டா சோதனையை ஜியோ தொடங்கியுள்ளது. டிக்சன் போன்ற உள்ளூர் மொபைல் தயாரிப்பாளர்களை வைத்து ஜியோ பாரத் போன்களை உருவாக்க ஜியோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கான ஒப்பந்த உற்பத்தியாளர்களாக ஃபீச்சர் ஃபோன்களை உருவாக்க ஜியோ நிறுவனம் அதன் புதிய ஃபீச்சர் போன்களுக்கான ஹார்டுவேர் மற்றும் டிசைனுக்கான வாய்ப்பை நிறுவனம் திறந்துள்ளது. டிக்சனைப் பொறுத்தவரை, ஜியோ பாரத் போன்களை தயாரிப்பது ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற உதவும் என்று தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டிக்சனைப் பொறுத்தவரை, ஃபீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை உள்ளடக்கிய மொபைல் பிரிவு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 6% வளர்ச்சியடைந்து ரூ.1,387 கோடியாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஃபீச்சர் போன் பிரிவின் அதிகரிப்பின் பின்னணியில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மொபைல் பிரிவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இருந்து இது இன்னும் அதிகமாக முன்னோக்கி செல்லும். ஜியோ பாரத் போன்கள், மோட்டோரோலா போன்கள், சியோமி மற்றும் நோக்கியா போன்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த மொபைல் பிரிவு நல்ல வளர்ச்சியைக் காணும் என்று லால் கூறினார்.
ஜியோவைத் தவிர, டிக்சன் நிறுவனம் சீன மொபைல் தயாரிப்பாளரான ஐட்டல் (Itel) நிறுவனத்திற்காகவும் மொபைல் சாதனங்களை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிக்சன் ஏற்கனவே ஐடெல் ஃபீச்சர் போன்களுக்கான உற்பத்தியை மாதம் 1 மில்லியன் யூனிட்களில் தொடங்கியுள்ளது என்றும் செப்டம்பர் மாதம் முதல் அதன் அடுத்த ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை தொடங்கும் என்றும் லால் தெரிவித்துள்ளார்.
Xiaomi நிறுவனத்தை பொறுத்தவரை, Dixon செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் ஒரு மாதத்திற்கு சுமார் 0.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. ஒப்பந்த உற்பத்தியாளர் பின்னர் உற்பத்தியை கட்டம் வாரியாக ஒரு மாதத்திற்கு 1 மில்லியன் யூனிட்டுகளாக உயர்த்துவார் என்று லால் கூறிய டஹ்கவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களின் தொகுதிகளில், தற்போது சாம்சங் டிக்சனுக்கான மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒன்றாகும். ஏப்ரல்-ஜூன் காலாண்டில், நிறுவனம் 2 மில்லியன் யூனிட் சாம்சங் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங்கிற்கு வெளியே உள்ள ஒட்டுமொத்த தொகுதிகளைப் பொறுத்தவரை, டிக்சன் காலாண்டில் 3.4 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது.
இத்தகைய முக்கியமான நிறுவனங்களுக்கு மொபைல்களை தயாரிக்கும் டிக்சன் நிறுவனம், இப்போது ஜியோ நிறுவனத்திற்காகவும் அதன் புதிய தயாரிப்பை உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ பாரத் போனை ரூ.999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








