கிளாஸ்மேட்ஸ் பிளாக்மெயில்.. கோபக்கார பெற்றோர்.. ரூ.52 லட்சம் செலவழித்த சிறுமி! காரணம் என்ன?
பெற்றோருக்கு தெரியாமல், ரூ.52 லட்சம் செலவு செய்தது மட்டுமல்லால், வங்கியில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்களை அவர்களுக்கே தெரியமால் டெலிட் செய்துவிட்டு, நான்கு மாதங்களாக ஏமாற்றிவந்த 13 வயது சிறுமி, ஆசிரியர் மூலம் மாட்டிக்கொண்டார். அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்.
இன்றைய காலத்தில் வளரும் பிள்ளைகள் தங்களது, ஸ்மார்ட்போன்களில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள், கவனிக்க தவறினால், என்ன நடக்கும் என்பதை சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமியின் செயல் அப்பட்டமாக எடுத்துக் காட்டியிருக்கிறது. ஒரு குடும்பத்தின் 10 ஆண்டுகள் சேமிப்பு மொத்தமும் கரைந்து, ஆரம்பித்த இடத்துக்கே சென்றுவிட்டது.

முன்பெல்லாம், பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த செல்போன்களை, இப்போது 5 வயது குழந்தைகள் முதல் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால், நாளடைவில் வெளியே யாருடனும் பழகாமல் செல்போனிலேயே மூழ்கி இருக்கும் நிலைக்கு, பலர் தள்ளப்படுகின்றனர். இவர்களில், மொபைல் கேம்களுக்கு (Games) அடிமையாகி சிக்கலில் மாட்டிக்கொள்வோரும் இருக்கிறார்கள்.
அந்த வகையில், சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி செல்போன், மொபைல் கேம்களுக்கு அடிமையாக இருந்துள்ளார். இந்த கேம்களை விளையாட தனது தாயின் வாங்கி கார்டுகளை அவருக்கு தெரியாமலேயே பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சிறுமி எப்போதெல்லாம், கேம் விளையாட வங்கியில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் எடுக்கிறாரோ அப்போதெல்லாம், அவரது தாயின் செல்போனை தன்னிடம் இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார்.
ஏனென்றால், பணம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ்களை அப்போதுதான் டெலிட் செய்துவிட் முடியும். அதோடு தாய்க்கும் தெரியாமல் மறைத்துவிடலாம் அல்லவா. இப்படி பலமுறை பணத்தை எடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த சிறுமி, பள்ளிக்கும் மொபைல் போனை எடுத்து சென்று கேம் விளையாடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். இந்த சமயங்களில், அவருடன் பள்ளியில் பயிலும் சக மாணவிகளும், இவருடன் கேம் விளையாடுவதற்காக கூட்டு சேர்ந்துள்ளனர்.
அப்போது, அந்த சிறுமி அவரது தாயின் பணத்தை பயன்படுத்துவது, அவர்களுக்கும் தெரிந்துள்ளது. இதனால், நாளடைவில் தங்களது செல்போன்களிலும் கேம் விளையாட பணம் செலுத்த வேண்டும், இல்லையென்றால், ஆசிரியர்களிடம் உண்மையை சொல்லிவிடுவோம் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினர். இதற்கு பயந்து அந்த சிறுமியும் அவர்களுக்காக பணத்தை செலவழிக்க தொடங்கினார்.
இப்படி நான்கு மாதங்களுக்கும் மேலாக நடந்துள்ளது. ஒருநாள் எதிர்பாராதவிதமாக வகுப்பறையில் கேம் விளையாடிய போது, அந்த சிறுமியும் சக மாணவிகளும் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டனர். இதையடுத்து, பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது, அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் பணம் கட்டி கேம் விளையாடியதை ஒப்புக்கொண்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அதில், 449,500 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52 லட்சம்) செலவழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இப்போது, அந்த வங்கிக்கணக்கில் 5 ரூபாய் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த நேரத்தில் செய்வது அறியாமல், அந்த குடும்பம் தவித்து வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்த மொத்த பணமும் பறிபோகிவிட்டது.
"பெற்றோர்களுக்கு தெரிந்தால், கோபப்படுவார்கள் என்று பயந்தே, வகுப்பு மாணவிகள் கேட்டபோதெல்லாம் பணத்தை செலவழித்தேன். இல்லையென்றால், அவர்கள் நாள் முழுவதும் என்னை தொந்தரவு செய்வார்கள். ஆசிரியரிடம் சொல்லிவிடுவோம் என்று மிரட்டுவார்கள்" என்று அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் கோபக்காரர்களாகவே, வில்லன்கள் போலவோ பிம்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications