நன்றி மட்டும் போதாதுப்பா.. சூப்பர் ஹீரோ போல் 12 வயது சிறுமியை காப்பாற்றிய Apple Watch!
உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் என்ற தகவலை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த முறை 12 வயது சிறுமிக்கு இருந்த புற்றுநோயை கண்டறிய ஆப்பிள் வாட்ச் பேருதவியாக இருந்திருக்கிறது.

உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்
எதிலும் தனித்து நிற்கும் ஆப்பிள்.. ஸ்மார்ட் வாட்ச் பிரிவிலும் தனித்தே நிற்கிறது. பல்வேறு மேம்பட்ட அம்சங்கள், தனித்துவ செயல்பாடுகள் என கூட்டத்தில் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுகிறது ஆப்பிள் வாட்ச்கள்.
ஆப்பிள் என்றால் அம்சங்களும் உயர்வு, விலையும் உயர்வு என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த விலையும் ஒரு உயிரின் மதிப்புக்கு இணையாகாது. அதன்படி ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படியான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

ஒரு சிறுமிக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிய ஆப்பிள் வாட்ச் பேருதவியாக இருந்திருக்கிறது. வாட்ச் அசாதாரணமான இதயத் துடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இதயத் துடிப்பு அம்சமானது வாட்ச் எஸ்இ, வாட்ச் 7 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ச் 8, வாட்ச் அல்ட்ரா ஆகிய அனைத்து வாட்ச்களிலும் இருக்கிறது.

அதிகமான இதயத்துடிப்பு குறித்து தெரிவித்த ஆப்பிள் வாட்ச்
Hour Detrout தகவலின்படி, இமானி மைல்ஸ் என்ற 12 வயது சிறுமி தனது அசாதாரணமான உயர் இதயத் துடிப்பு குறித்து ஆப்பிள் வாட்ச் மூலம் கண்டறிந்து இருக்கிறார். 12 வயது சிறுமியின் தாயார் ஜெசிகா கிச்சனும் தனது மகளின் இதயத்துடிப்பு வித்தியாசமாக இருந்ததைக் கண்டிருந்திருக்கிறார். முன்பு இதைபோல் இத்தனை அதிகமான இதயத்துடிப்பு தனது மகளுக்கு இருந்தது இல்லையே என்றும் இந்த முறை மிக அதிகமாக இருக்கிறது எனவும் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி
தொடர்ந்து ஜெசிகா கிச்சன் இதுகுறித்து கூறுகையில், இதயத் துடிப்பு அதிகமானது குறித்து பலமுறை ஆப்பிள் வாட்ச் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அந்த 12 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயத்துடிப்பு அதிகமான காரணம் குறித்து சோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி இமானிக்கு குடல் அழற்சி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அங்கு பிரச்சனை அதோடு முடியவில்லை.

கண்டறியப்பட்ட புற்றுநோய்
மருத்துவர்களின் தொடர் சோதனையில் அந்த சிறுமிக்கு நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் அந்த தாயாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கட்டி குழந்தைகளுக்கு அரிதானவை எனவும் இமானியின் உடலில் மற்ற பாகங்களுக்கும் கட்டி பரவி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் வாட்ச்சை புகழ்ந்த சிறுமியின் தாயார்
கட்டியினால் இதயத்துடிப்பு அளவு மாறுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறுமியின் கையில் ஆப்பிள் வாட்ச் இருக்கும் காரணத்தால் இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது எனவும் இதன்மூலமாக கட்டி இருப்பது தெரியவந்தது எனவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். கையில் வாட்ச் இல்லாவிட்டால் கட்டியை கண்டறிய இன்னும் தாமதமாகி இருக்கும் என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். ஆப்பிள் வாட்ச் இரண்டு நாட்களாக இதுகுறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்ததாகவும் சிறுமியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு
ஆப்பிள் வாட்ச் ஆனது அசாதாரண இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவைகளை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். இதேபோல் முன்னதாக பல நிகழ்வு நடந்திருக்கிறது. அதில் ஒன்றை பார்க்கலாம்.
34 வயதான பெண் ஒருவர் ஆப்பிள் வாட்ச் உடனான தனது அனுபவத்தை Reddit தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டார். அதில் அவரது ஆப்பிள் வாட்ச் 15 நாட்களுக்கும் மேலாக தனது அதிகரித்த இதயத் துடிப்புக் குறித்து எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் தனது ஓய்வெடுக்கும் நேரத்தின் போது இதயத்துடிப்பு 57 ஆக இருக்கும் எனவும் ஆனால் சமீபத்தில் தனது இதயத் துடிப்பு 72 ஆக அதிகரித்தது எனவும் குறிப்பிட்டார்.

சிக்கலை கண்டறிந்த பெண்
தனது 18 மாத குழந்தை தன்னிடம் தாய்ப்பால் குடித்து வருகிறார் எனவே இதன்காரணமாக கூட இதயத்துடிப்பு அதிகமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் பொருட்படுத்தவில்லை என குறிப்பிட்டார்.
தொடர்ந்து இதயத் துடிப்பு அதிகமாகவே இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் முதலில் கோவிட் பரிசோதனை செய்துள்ளார். இதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. பின் சளி மற்றும் காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்தார். ஆனால் அதிலும் எந்த சிக்கலும் இல்லை என ரிசல்ட் வந்திருக்கிறது.
பின் ஏன் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கிறது என சாத்தியமான காரணங்கள் குறித்து ஆன்லைனில் சோதித்து பார்த்துள்ளார். அதில், கர்ப்பக் காலத்தில் பெண்களின் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசவத்தை கண்டறிந்து பூரித்து போன பெண்
இதையடுத்து பிரசவத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒரு கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் 4 வாரம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்ததால், இதுதொடர்பான எந்த அறிகுறிகளும் அவருக்கு தென்படவில்லை என கூறப்படுகிறது.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அவரது உடலில் உள்ள அசாதாரணமான ஒன்றைக் கண்டறிந்து ஆப்பிள் வாட்ச் எச்சரித்து உள்ளது. கர்ப்பத்தை கண்டறிந்ததற்காக தனது ஆப்பிள் வாட்சை அந்த பெண் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications