WhatsApp-ல் +92 நம்பரிலிருந்து கால் வருகிறதா? உஷார்.! வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும்.!
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களே உஷார்.! உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு +92 என்று துவங்கும் எண் அல்லது உங்கள் காண்டாக்ட்டில் சேவ் செய்யப்படாத எண்ணிலிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் மிகவும் கவனமாக இருங்கள். அலட்சியம் காட்டினால் உங்கள் வங்கி கணக்கு சூறையாடப்படும்.
வாட்ஸ்அப் மற்றும் மொபைல் பயனர்களுக்கு சில காலமாக, சைபர் கிரைம் மோசடிக்காரர்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் +92 என்ற நாட்டின் கோடை (Country code) கொண்ட விர்ச்சுவல் எண்களைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த +92 என்று எண் பெரும்பாலும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு வகையான ஸ்மார்ட்போன் வழி மோசடிகளைச் செய்ய மோசடிக்காரர்கள் இத்தகைய எண்களை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்போது, குஜராத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், இத்தகைய எண் மூலம் வந்த வாட்ஸ்அப் அழைப்பை ஏற்ற காரணத்தினால், அவருடைய வங்கி கணக்கில் இருந்த ரூ.7 லட்சம் திருடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அழைப்பை ஏற்றால், வங்கி கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போகுமா? எப்படி? இது என்ன புது மாதிரியான மோசடியாக இருக்கிறது? இதில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற விரிவான தகவலை இப்போது பார்க்கலாம். மோசடிக்காரர்கள், மக்களின் ஆசையை தூண்ட, ஐபோன் 14 சாதனத்தை இலவச பரிசாக தருவதாக பேச துவங்குகின்றனர்.
மோசடி செய்பவர்கள் மக்களைத் தங்கள் வலையில் சிக்க வைப்பதற்காக 'துபாயிலிருந்து அழைக்கும் ஒரு பாய்' போல தங்களை பிரதிபலித்துக்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. புத்தம் புதிய iPhone 14 போன்ற கவர்ச்சிகரமான சாதனங்களை பரிசாக வழங்குவதாக கூறி, இது ஒரு தள்ளுபடி செய்யப்பட்ட பொருள் என்று கூறி மக்களை தங்களின் வலையில் சிக்க வைக்கிறார்கள்.

இதேபோல், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தண்டூகாவைச் சேர்ந்த விரக் தோஷி என்பவர் +92 என்ற விர்ச்சுவல் எண் மோசடிக்கு பலியாகியுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் 'படே பாய் மற்றும் சோடே பாய்' வழங்கும் இலவச ஐபோன் 14 சாதனத்தை வென்றதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது.
UPI மூலம் டோக்கன் கட்டணமாக ரூ. 3,000 செலுத்த வேண்டும் என்று அந்த மெசேஜ்ஜில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஐபோன் 14 ஐ இலவசமாகப் பெறும் முயற்சியில், அந்த நபரும் ரூ.3000 த்தை டோக்கன் கட்டணமாக செலுத்தியிருக்கிறார். அடுத்த நாள், அவருக்கு +92 நாட்டுக் குறியீட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், அவரை 'படே பாய்' என்று கூறியிருக்கிறார். சூரத் விமான நிலையத்தில் ஐபோன் 14 மற்றும் வாட்ச் டெலிவரிக்கு தயாராக இருப்பதாக தோஷியிடம் தெரியப்படுத்தியுள்ளார். அடுத்த நாள், டெலிவரிக்கு கூடுதலாக 8,000 ரூபாய் தேவைப்படுவதாக மற்றொரு அழைப்பும் +92 எண்ணில் இருந்து வந்துள்ளது. அந்த தொகையையும் தோஷி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இறுதியில், எந்த தகவலும் வராமல் இருந்ததை அடுத்து சந்தேகம் அடைந்த தோஷி நபர், தனது வங்கி கணக்கை சோதனை செய்திருக்கிறார். ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை சுமார் ரூ.6.76 லட்சம் வரை தொகை அவருக்கே தெரியாமல், அவரின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இறுதியில் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க, +92 என்ற எண்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் நிராகரிப்பது பாதுகாப்பானது. +92 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த எண்களில் இருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் உடனே பிளாக் செய்யவும் மற்றும் பாதுகாப்பாக இருக்கவும்.


Click it and Unblock the Notifications








