மனச தேத்திக்கோங்க மக்களே.. அறிமுகத்திற்கு முன்பே வெளியான iPhone 15 விலை..? 5 ஆண்ட்ராய்டு போன் வாங்கலாம்!
ஆப்பிளின் ஐபோன் 14 மாடலானது பெரிய அளவிலான மேம்படுகளையோ அல்லது புதிய அம்சங்களையோ பெறவில்லை. ஒரு வழக்கமான ஐபோனாகத்தான் வெளியானது. ஆனால் ஐபோன் 15 (iPhone 15) அப்படி இருக்கப்போவதில்லை.. இது அதன் முன்னோடிகளை விட சில பெரிய மேம்படுத்தல்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைனமிக் ஐலேண்ட் முதல் 48எம்பி மெயின் ரியர் கேமரா வரையிலாக, ஐபோன் 15 ஆனது ஆப்பிள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் பல விஷயங்களை தன்னுள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மேம்படுத்தல்கள் அனைத்தும் ஐபோன் 15-ன் விலை நிர்ணயத்தை கடுமையாக உயர்த்துமா? என்பது தான் இங்கே எழும் முக்கிய கேள்வி!

இந்த கேள்விக்கான பதில் செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கவுள்ள ஆப்பிள் நிகழ்வுக்கு முன்னதாகவே கிடைத்து உள்ளது போல் தெரிகிறது. அதாவது ஐபோன் 15 சீரீஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐபோன் 15 மாடலின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்கிற தகவல் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஐபோன் 15-இல் பல புதிய அம்சங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்த மாடலில் பெரிய அளவிலான விலை உயர்வு எதுவும் இருக்காது. ஐபோன் 15 ஆனது 799 அமெரிக்க டாலர் அல்லது இந்தியாவில் ரூ.79900 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பீட்டளவில் இது மலிவாக தெரிந்தாலும் கூட.. "ரூ.80000 க்கு ரூ.15000 என்கிற பட்ஜெட்டில் 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்கலாமே" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. வழக்கம் போல இந்த ஆண்டும் கிட்னியை விற்றால் தான் ஐபோன் வாங்கலாம் என்கிற மீம்ஸ் வைரலாகத்தான் போகிறது!
ரூ.80,000 க்கு ஐபோன் 15 மாடலில் அப்படி என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? கிடைக்கப்பெற்ற கசிவுகளின்படி, வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்கள் ஆனது குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை பெறும். ஐபோன் 14 ப்ரோ மாடல்களுடன் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட டைனமிக் ஐலேண்ட் எனப்படும் அம்சம், முழு ஐபோன் 15 சீரீஸிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, இயூ விதிமுறைகளுக்கு இணங்க, லைட்னிங் போர்ட்டிற்கு பதிலாக யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆனது அனைத்து ஐபோன் 15 சீரீஸ் மாடல்களிலும் இடம்பெறும். குறிப்பாக ஐபோன் 15 மாடலில் புதிய 48 மெகாபிக்சல் அஸ்டேக்டுCMOS இமேஜ் சென்சார் (CIS) இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஐபோன் 15 மாடலில் ஆப்பிளின் ஏ16 பயோனிக் சிப்செட் (Apple A16 Bionic Chipset) பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஐபோன் 15 சீரிஸின் ப்ரோ மாடல்களுக்கு ஆப்பிளின் ஏ17 பயோனிக் சிப்செட் (A17 Bionic Chipset) ஒதுக்கப்படும்.
சில கசிவுகள், ஐபோன் 15 மாடல் ஆண்டு ப்ரோமோஷனை (ProMotion) பெறலாம் என்று பரிந்துரைக்கின்றன. ஆனால் அவைகள் வந்த வேகத்தில் நிராகரிக்கப்பட்டன. பொதுவாக ஆப்பிளின் ஸ்டாண்டர்ட் மாடல்களில் ப்ரோமோஷன் தொழில்நுட்பம் அல்லது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always on Display) தொழில்நுட்பம் இடம்பெறாது.
ஐபோன் 15 மாடல் ஆனது இந்த ஆண்டு கருப்பு, வெள்ளை, மஞ்சள் / பச்சை, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வர வாய்ப்புள்ளது. மேலே உள்ள எல்லா தகவல்களுமே அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளை அடிப்படையாக கொண்டவை என்பதை இங்கே மீண்டும் ஒருமுறை குறிப்பிட விரும்புகிறோம்.
ஐபோன் 15 மாடலின் சரியான விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது, பழைய மாடலுடன் ஒப்பிடும் போது இது என்னென்ன மாற்றங்களை அல்லது மேம்பாடுகளை கொண்டுள்ளது? போன்ற விவரங்கள் வருகிற செப்டம்பர் 12, 2023 அன்று திட்டமிடப்பட்ட ஆப்பிள் நிகழ்வில் தான் வெளிப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications