யார்ரா நீங்கலாம்.. பிப்.25 அறிமுகத்திற்கு முன்பே SALE க்கு வந்த Samsung Galaxy S26 Plus.. என்ன விலை?
வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த சீரீஸின் கீழ் கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதால், இந்த சீரீஸ் பற்றிய லீக்ஸ் ஏற்கனவே மலைபோல குவிந்துள்ளன. ஆனால் "இது புதுசா இருக்குண்ணே" என்று கூறும்படியாக மிகவும் அசாதாரணமான ஒரு விஷயம் நடந்துள்ளது. கேலக்ஸி எஸ்26 பிளஸ் என்று கூறப்படும் ஒரு ஸ்மார்ட்போன் கிரெய்க்ஸ்லிஸ்ட் பட்டியலில் விலை உடன் தோன்றியுள்ளது.

குறிப்பிட்ட லிஸ்டிங்கில் எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை $1,650 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.1,49,650 ஆகும். அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதன் விலை நிர்ணயம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் இது எந்த அளவிற்கு உண்மையானதாக இருக்கும் என்பதை பிப்.25 வெளியீட்டு நாளன்று நமக்கு தெரிய வரும்.
$1,650 என்பது கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலையை விட மிகவும் அதிகம் ஆகும். தற்போதைய மதிப்பீடுகள் ஸ்டோரேஜை பொறுத்து இந்த ஸ்மார்ட்போனின் விலை $1,000-$1,100 வரம்பில் எங்காவது வைக்கப்படும் என்று பரிந்துரைக்கின்றன. ஒருவேளை $1,650 என்பது உண்மையான விலையாக இருந்தால், பலரும் கையெடுத்து கும்பிட்டு விட்டு கிளம்புவது உறுதி!
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னதாக எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (Ice Universe) பகிர்ந்துள்ள விவரங்களின்படி - கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்26 ஆகிய இரண்டுமே அவற்றின் முன்னோடிகளை விட மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கலாம்.
மேலும் அனைத்து 3 மாடல்களுமே ஆப்பிள் அபின் 17 சீரிஸை (Apple iPhone 17 Series) விட தடிமன் மற்றும் எடையின் அடிப்படையில் குறைவாக அளவிடப்படும். வெளியான விவரங்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 7.9மிமீ தடிமன் கொண்டதாகவும், சுமார் 214 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்கள் ஆனது முறையே 6.9மிமீ (164 கிராம்) மற்றும் 7.3மிமீ (191கிராம்) தடிமன் மற்றும் எடையை கொண்டிருக்கலாம்.
இது உண்மையாக இருந்தால், சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் ஸ்டாண்டர்ட் மாடல்கள் அவற்றின் முன்னோடிகளான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்25 மாடலை விட இலகுவாகவும் மெல்லியதாகவும் இருக்கலாம். குறிப்பிடத்தக்க வகையில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 8.2 மிமீ தடிமன் மற்றும் சுமார் 218 கிராம் எடையை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வெண்ணிலா கேலக்ஸி எஸ்25 ஆனது 7.2 மிமீ தடிமன் மற்றும் சுமார் 168 கிராம் எடையை கொண்டுள்ளது.
சுவாரஸ்யமாக, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல் ஆனது அதன் முன்னோடியை போலவே தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது 7.3 மிமீ தடிமன் மற்றும் சுமார் 190 கிராம் எடை கொண்ட கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலை விட கனமாக இருக்கலாம். ஆக ஒட்டுமொத்தமாக முழு சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸும் 2025 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17 சீரிஸை விட மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கலாம்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை சாம்சங் நிறுவனத்தின் இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படலாம். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில், இது இன்னுமும் அறிமுகப்படுத்தப்படாத சாம்சங்கின் எக்ஸினோஸ் 2600 சிப் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் எஸ்26 பிளஸ் மாடல்களில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும் , அல்ட்ரா மாடலில் குவாட் ரியர் கேமரா செட்டப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








