செல்போன் & ஸ்மார்ட்போன் இடையிலான பரிணாம வளர்ச்சி என்னனு தெரியுமா?
செல்போன்கள் குறைந்த கால இடைவெளியில் மனிதனின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. செல்போன்கள், பியூச்சர் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என்று பல கட்டமாக போன்கள் மாறுபட்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

செல்போன் VS ஸ்மார்ட்போன் குழப்பம்
நம்மில் இன்னும் சிலருக்கு செல்போன், பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது சரியாகச் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருப்போம். அப்படிப்பட்ட குழப்பத்தை நீக்குவதற்கான மிக எளிமையான விளக்கவுரை தான் இந்த பதிவு.

செல்போன்கள் என்றால் என்ன?
செல்போன் என்பது ரேடியோ செல்களைப் பயன்படுத்திச் செயல்படும் மொபைல் போன் ஆகும். ரேடியோ கவரேஜ் உள்ள ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும் பொழுது கவரேஜ் தடை இல்லாமல் செல் விட்டுச் செல் கவரேஜுடன் இணைப்பில் இருப்பதால் தான் இதற்கு செல்போன் என்று பெயரிடப்பட்டது. வயர்லெஸ் முறையில் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்தில் உள்ள ஒருவருடன் பேசுவதற்கு உருவாக்கப்பட்ட சாதனம் தான் செல்போன். பிறகு இதில் மெஸேஜிங் சேவையும் வழங்கப்பட்டது.

பியூச்சர் போன் என்றால் என்ன?
செல்போன்கள் உருவாக்கிய பின் செல்போன்களின் பரிணாம வளர்ச்சியாக இந்த பியூச்சர் போன்கள் உருவாக்கப்பட்டன. கூடுதல் சேவைகள் இணைக்கப்பட்டு பியூச்சர் போன் என்ற பெயரில் செல்போன்கள் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பியூச்சர் போனில் அழைப்புகளுக்கான சேவை மட்டும் இல்லாமல், கேம், காலெண்டர், ஈமெயில் போன்ற சேவைகள் பியூச்சர் போன்களில் இணைக்கப்பட்டன.

ஸ்மார்ட்போன் என்றால் என்ன?
செல்போன் மற்றும் பியூச்சர் போன்களின் பரிணாம வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன்கள் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஸ்மார்ட்போன்கள், போன் இனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட கம்ப்யூட்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியாக இருக்கும் என்றே கூற வேண்டும்.

ஒரே சாதனத்தில் அனைத்து சேவைகள்
கம்ப்யூட்டரில் நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் நம்மால் இப்பொழுது ஸ்மார்ட்போனில்செய்து முடிக்க முடியும். கேமரா, வீடியோ ரெகார்டிங், வாய்ஸ் காலிங், காலெண்டர், பர்சனல் அசிஸ்டன்ட், கால்குலேட்டர், மியூசிக் என பல சேவைகள் ஒரே சாதனத்தில் வழங்கப்படுவது தான் ஸ்மார்ட்போன்.

செல்போன் மற்றும் ஸ்மார்ட்போன் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் இவை தான்!
- செல்போன்களுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன்கள் மிகவும் மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது.
- ஸ்மார்ட்போன் என்பது பி.டி.ஏ மற்றும் செல்போனின் கலவை ஆகும்.
- செல்போன்காளே ஸ்மார்ட்போன்கள் உருவாக முக்கிய காரணம்.
- ஸ்மார்ட்போன்கள் வழக்கமாக தொடுதிரை மற்றும் முழு QWERTY விசைப்பலகை கொண்டிருக்கும்.
- செல்போன்கள் வழக்கமான சிறிய திரை மற்றும் எண் விசைப்பலகை கொண்டிருக்கும்.
- ஸ்மார்ட்போன்கள் OS அடிப்படையிலான இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.
- செல்போன்களுக்கு என்று தனி ஒப்பரேட்டிங் சிஸ்டம்கள் எதுவும் கிடையாது.


Click it and Unblock the Notifications