அடுத்த ஹிட்டு பார்சல்.. பேரு நத்திங் போன் 2.. டாப்பு டக்கர் அம்சங்களுடன் NOTHING-ன் அடுத்த ஸ்மார்ட்போன்!
நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2-வை பற்றி பேசுவதற்கு முன்னர், பிஐஎஸ் (BIS) என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பிஐஎஸ் என்பது இந்திய தரநிலைகள் பணியகமான 'ப்யூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்' (Bureau of Indian Standards) என்பதன் சுருக்கமாகும்.
இந்தியாவில் அறிமுகமாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுமே பிஐஎஸ்-யிடம் தரநிலை சான்றிதழை பெற வேண்டும்; அதன் பின்னரே அவைகள் இந்திய சந்தையில் அறிமுகமாகும். அதுமட்டுமின்றி ஒரு ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்றிதழை பெற்றுவிட்டது என்றால், அது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகி விடுமென்றும் அர்த்தம்.

அப்படியாக, நத்திங் நிறுவனத்தின் அடுத்த மாடலான நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனானது பிஐஎஸ் தளத்தில் காணப்பட்டுள்ளது. ஆக நத்திங் நிறுவனம் பெரிய ஆராவாரம் இல்லாமல், சத்தமின்றி அதன் அடுத்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.
மறுகையில் நத்திங் போன் 2-வில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்கிற லீக்ஸ் தகவல்களும் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது சரியாக எப்போது அறிமுகமாகும்? இந்தியாவில் என்ன விலைக்கு வரும்? போன்ற விவரங்கள் இதோ:
நத்திங் போன் 2-வில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: இதுவொரு அப்பர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக (Upper Midrange Smartphone) இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் இது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 ப்ராசஸர் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது எஃப்எச்டி+ ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கலாம்.
நத்திங் போன் 2-வில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் இடம்பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சாஃப்ட்வேரை பொறுத்தவரை, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் (Nothing OS) உடன் அனுப்பப்படலாம். கடைசியாக கேமராக்களை பொறுத்தவரை, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனனான் 50எம்பி மெயின் கேமரா இடம்பெறலாம்.
நத்திங் போன் 2 எப்போது அறிமுகமாகும்? பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் லீக்ஸ் தகவல்கள் எல்லாமே ஒருபக்கம் இருக்க, நத்திங் நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2-வின் அறிமுகம் பற்றி இன்னும் வாயே திறக்கவில்லை. இருப்பினும் இது இந்த 2023 ஆம் ஆண்டு இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டிற்குள் அறிமுகமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 2-வின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? நத்திங் போன் 2-வின் இந்திய விலை நிர்ணயம் ரூ.39,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 1 ரூ.30,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக, அப்கிரேடட் வெர்ஷன் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 ப்ராசஸர் போன்றவைகளை வைத்து பார்க்கும் போது ரூ.40,000 என்கிற பட்ஜெட் சற்றே நியாயமானதாகவே தெரிகிறது!


Click it and Unblock the Notifications








