OG-னா Samsung தான்.. 3 டிஸ்பிளேனு மொத்தம் 9.96-இன்ச்.. 3 பேட்டரினு மொத்தம் 4400mAh.. என்ன விலை?
ப்பா.. என்னா காம்பினேஷன்ப்பா இது என்று கேட்கத்தூண்டும் படியான முக்கிய அம்சங்களுடன், அதாவது 9.96-இன்ச் டிஸ்பிளே, 200எம்பி ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 4400mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களுடன் ஒரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதை சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் என்று கூறுவதை விட, ஸ்மார்ட்போன் உலகில் ஒரு புதிய புரட்சி என்றே கூறலாம். ஏனென்றால் சாம்சங் அறிமுகம் செய்யவுள்ளது - அதன் முதல் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் (Samsung First Tri-Fold Smartphone) மாடலை!

சாம்சங்கின் இந்த முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் கேலக்ஸி இசட் ட்ரை ஃபோல்ட் (Samsung Galaxy Z Tri Fold) ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே, இது 3 டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும். இந்த ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் ஜி-ஸ்டைல் உள்நோக்கி மடியும் பொறிமுறை (G-style inward folding mechanism) இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் தென் கொரிய நிறுவனமான சாம்சங், இந்த ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இது சீனா மற்றும் தென் கொரியாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது, ஆனால் ஒரு புதிய அறிக்கை - இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக 2 சந்தைகளில் அறிமுகமாகும் என்று கூறுகிறது.
தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி சாம்மொபைல் (SamMobile) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சாம்சங் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது சீனா மற்றும் தென் கொரிய சந்தைகளோடு சேர்த்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
இதற்கிடையில் மற்றொரு டிப்ஸ்டர், எக்ஸ் தளம் வழியாக சாம்சங்கின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது வியட்நாமிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். ஆக சாம்சங் நிறுவனம் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் மீதும், அதன் செயல்திறனின் மீதும் அதிக நம்பிக்கையுடன் இருப்பதையும், இந்த ஸ்மார்ட்போனை பரந்த அளவிலான மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் தனது அடுத்த கேலக்ஸி ஹார்ட்வேர் நிகழ்வானது 2025 அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அந்நிகழ்வில் சாம்சங்கிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ராஜெக்ட் மூஹன் இடம்பெறும் புதிய ஏஐ டிவைஸ்களுடன் சேர்த்து கேலக்ஸி இஸட் ட்ரைஃபோல்ட், ப்ராஜெக்ட் மூஹன் எக்ஸ்ஆர் ஹெட்செட் ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இஸட் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை வழியாக இது குறிப்பிடத்தக்க உள் வேறுபாடுகளை கொண்டிருக்கும் என்பது தெரிய வந்தது. அதாவது பேடண்ட் வரைபடங்கள் ஆனது 3 பேட்டரிகளை வெளிப்படுத்துகின்றன, ஒரு பேனலுக்கு ஒன்று, ரிப்பன் கேபிள்களால் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிலான பெரிய ட்ரை-ஃபோல்ட் டிஸ்ப்ளேவை ஆதரிக்க, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த பேட்டரி ஆனது முன்னதாக அறிமுகமான கேலக்ஸி ஃபோல்ட் 7 மாடலில் உள்ள 4400mAh பேட்டரியை விட அதிகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் நிச்சயம் 4400mAh பேட்டரி இடம்பெறும்.
டிஸ்பிளே அளவீடுகளை பொறுத்தவரை, வதந்திகளின் படி - சாம்சங்கின் இந்த ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை முழுமையாக விரிக்கும் போது 9.96-இன்ச் அளவிலான டிஸ்பிளே கிடைக்கும். மடிக்கப்பட்ட நிலையில் 6.54-இன்ச் டிஸ்பிளே கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப், சிலிக்கான்-கார்பன் பேட்டரி மற்றும் 200-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட டிரிபிள்-கேமரா செட்டப், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் யுஐ 8 ஓஎஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.
சாம்சங் கேலக்ஸி இஸட் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? கிடைக்கப்பட்ட அறிக்கைகளின்படி, சாம்சங் கேலக்ஸி இஸட் ட்ரை-ஃபோல்ட்டின் விலை சுமார் $3,000 ஆக இருக்கலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 2,64,000 ஆக இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், இதுவரை அறிமுகமானதிலேயே மிகவும் விலையுயர்ந்த சாம்சங் போல்டபிள் ஸ்மார்ட்போன் இதுவாகத்தான் இருக்கும்!


Click it and Unblock the Notifications








