Samsung Galaxy S25 சீரீஸ் அறிமுக தேதி அறிவிப்பு.. புதிய S25 Slim மாடல், கேலக்ஸி Ring 2, XR ஹெட்செட்.. ரெடியா?
கண்ணா 2-வது லட்டு சாப்பிடணுமா என்று கேட்கும்படியாக.. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் இன்று நடக்கவுள்ள நிலைப்பாட்டில், இதற்கு ஈடாக எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு (Samsung Galaxy Unpacked 2025 Event) எப்போது நடக்கும் என்கிற தேதி, எங்கு நடக்கும் என்கிற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு எப்போது நடக்கும்? இந்நிகழ்வின் போது என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் இருக்கும்? கேலக்ஸி எஸ்25 சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு எப்போது நடக்கும்? சாம்சங் நியூஸ்ரூமின்படி, சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது ஜனவரி 22 ஆம் தேதி நடக்கும். இது இந்திய நேரடி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும். மேலும் சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் நியூஸ்ரூம் (Samsung Newsroom) மற்றும் சாம்சங்கின்அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? இந்நிகழ்வின் முக்கிய ஹைலைட் ஆக கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் இருக்கும். சாம்சங்கின் கூற்றுப்படி, எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அனுபவங்களில் இது ஒரு "பெரிய பாய்ச்சலை" வழங்கும். சாம்சங் இந்தியாவில் எஸ்25 சீரீஸின் போன்களுக்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது; முன்பதிவு செய்பவர்கள் சிறப்பு பலன்களைப் பெறுவார்கள்.
கேலக்ஸி எஸ்25 சீரிஸ் உடன் சேர்த்து, தென் கொரிய நிறுவனமான சாம்சங், கடந்த 2024 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட ப்ராஜக்ட் மூஹன் (Project Moohan) என அழைக்கப்படும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (Extended reality - XR) ஹெட்செட்டையும் அறிமுகப்படுத்தலாம். இது கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு எக்ஸ்ஆர் இயங்குதளத்தின் (Google new Android XR platform) கீழ் இயங்குகிறது.
சாம்சங்கின் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி ஹெட்செட் ஆனது ஏஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி, விஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR), மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவைகளை நம்பியிருக்கும் அம்சங்களை ஆதரிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் எக்ஸ்ஆர் ஹெட்செட் உடன் சேர்த்து சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ரிங் 2 (Galaxy Ring 2) ஸ்மார்ட் ரிங்கையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளன. இது ஓரா ரிங் (Oura Ring) உடன் போட்டியிட இரண்டு புதிய அளவுகளில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முதல் தலைமுறை சாம்சங் கேலக்ஸி ரிங் உடன் ஒப்பிடும்போது, புதிய சாம்சங் கேலக்ஸி ரிங் 2 ஆனது மிகவும் துல்லியமான ஹெல்த் டேட்டா சென்சார்கள் (health data sensors), மேம்படுத்தப்பட்ட ஏஐ செயல்பாடுகள் (AI functionalities) மற்றும் நீண்ட பேட்டரி லைஃப் (longer battery life) உடன் வரும் என்றும் ஊகிக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் அறிமுகமாகும்? வழக்கம் போல இந்த ஆண்டும் எஸ் சீரிஸின் கீழ் மூன்று புதிய மாடல்கள் அறிவிக்கப்படலாம் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra).
இந்த 3 மாடல்களுமே குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Qualcomm Snapdragon 8 Elite SoC) மற்றும் 12ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய வேறுபாடுகள் கேமராக்களில் இருக்கலாம். பேட்டரி கெப்பாசிட்டையை பொறுத்தவரை ஸ்டாண்டர்ட் கேலக்ஸி எஸ்25 மாடலில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா வகைகளில் முறையே 4,900mAh மற்றும் 5,000mAh பேட்டரிகள் இடம்பெறலாம். இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடலை ;டீஸ்' செய்யவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








