Apple-ஐ ஜூஸ் போட்ட Samsung.. Privacy Display உடன் புது பேஸ் மாடல்.. ஆடிப்போன ஸ்மார்ட்போன் மார்க்கெட்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் (Galaxy S26 Series) கீழ் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Galaxy S26 Ultra) மாடலில் மட்டுமே ப்ரைவஸி டிஸ்பிளே (Privacy Display) அம்சம் இருந்தது. ஆனால் இது விரைவில் மாறவுள்ளது.
அடுத்துவரும் கேலக்ஸி எஸ்27 சீரீஸ் (Galaxy S27 Series) முழுவதிலும் தனது ப்ரைவஸி டிஸ்பிளே தொழில்நுட்பத்தை ஒரு நிலையான அம்சமாக அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எஸ்27 சீரீஸின் பேஸ் மாடல் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்27 5ஜி-யில் கூட இந்த அம்சம் இருக்கும்.

திஎலெக் (TheElec) வெளியிட்ட தகவல்களின்படி, எஸ்27, எஸ்27 பிளஸ், எஸ்27 ப்ரோ மற்றும் எஸ்27 அல்ட்ரா ஆகிய அனைத்து மாடல்களிலும் இந்த அம்சம் இடம்பெறும். ஆனால், விலை குறைவான எஸ்27 எப்இ மாடலில் மட்டும் இது இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்26 சீரீஸில், அல்ட்ரா மாடலில் மட்டுமே இந்த அம்சம் இருந்த நிலையில், எஸ்27 சீரிஸில் எல்லா மாடல்களுக்கும் விரிவடைவது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்
ப்ளெக்ஸ் மேஜிக் பிக்சல் (Flex Magic Pixel) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எஸ்26 அல்ட்ராவில் சாம்சங் முதன்முதலில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது. இது ஓஎல்இடி டிஸ்பிளேவை துல்லியமாக கட்டுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. இதனால், டிஸ்பிளேவை நேராக பார்ப்பவருக்கு தெளிவான காட்சி கிடைக்கிறது, அதே சமயம் பக்கவாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்குத் திரை இருண்டதாக தெரியும். பொது இடங்களில் மற்றவர்கள் டிஸ்பிளேவை எட்டிப் பார்ப்பதை (Shoulder surfing) தடுப்பதில் இது சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.
இதன் பர்ஸ்ட் வெர்ஷன் பிரபலமடைந்தாலும், செயல்பாட்டு தன்மையில் சில ஆரம்பக்கட்ட சிக்கல்கள் இருந்தன. தற்போது அந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எஸ்27 சீரீஸில், மிகவும் மென்மையான மற்றும் நம்பகமான அனுபவத்தை வழங்கும் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை வெர்ஷனை நாம் எதிர்பார்க்கலாம்.
பிளாக்ஷிப் மாடல்கள் (Flagships models) அனைத்திலும் ப்ரைவஸி டிஸ்பிளே வசதியை நிலையான அம்சமாக மாற்றுவது, சாம்சங் நிறுவனத்திற்கு இந்த அம்சம் எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுகிறது என்று துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இனி அல்ட்ரா மாடலுக்கு மட்டுமேயான சிறப்பம்சம் அல்ல; மாறாக, ஹைஎண்ட் கேலக்ஸி எக்ஸ்பீரியன்ஸின் ஒரு முக்கிய அங்கமாக இது மாறியுள்ளது.
இந்த நடவடிக்கை சாம்சங்கிற்கு, குறிப்பாக ஆப்பிளின் (Apple) வரவிருக்கும் ஐபோன் 18 சீரீஸ்க்கு (iPhone 18 Series) தொடருக்கு எதிராக, குறிப்பிடத்தக்க முன்னிலையை வழங்கக்கூடும். மக்கள் தங்கள் தரவுகள் சார்ந்த பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் இன்றைய சூழலில், கஃபேக்கள், ரயில்கள் அல்லது கூட்டங்களில் மற்றவர்களின் பார்வையில் இருந்து ஸ்க்ரீனை பாதுகாக்கும் திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்27 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? எஸ்27 சீரீஸ் ஆனது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸில் புதிய காம்பாக்ட் ப்ரோ மாடலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இப்போதைக்கு இந்த சீரீஸின் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், ப்ரைவஸி டிஸ்பிளே வசதி பரவலாக அறிமுகப்படுத்தப்படுவது இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மேம்பாடுகளில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்துள்ளது.
தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் கொள்முதல் முடிவுகளில் இது போன்ற அம்சங்கள் முக்கிய பங்காற்றக்கூடும். தனது முன்னணி மாடல்கள் அனைத்திலும் இந்த தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய விற்பனை அம்சமாக மாற்றும் அளவுக்கு இது முதிர்ச்சியடைந்துள்ளது என்று சாம்சங் நம்புகிறது. மேலும், இது மற்ற நிறுவனங்களையும் இதே பாதையை பின்பற்றத் தூண்டக்கூடும்.


Click it and Unblock the Notifications