இனி இப்படி ஒரு ஸ்மார்ட்போனை ரிலீஸ் பண்ண மாட்டோம்.. Samsung பின்வாங்கல்.. Apple க்கு விழுந்த அடி அப்படி!
சாம்சங் (Samsung) நிறுவனமானது சிவனேனு கேலக்ஸி எஸ் சீரீஸின் கீழ் "சூப்பர் சூப்பரா" ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செஞ்சிட்டு இருந்துச்சு.. யாரு என்ன சொல்லி உசுப்பேத்தி விட்டாங்களோ தெரியல.. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் (Ultra Slim Design) புதிய எட்ஜ் மாடலை அறிமுகம் செய்தது.
அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் ஆகும். இது எக்கச்சக்கமான லீக்ஸ் மற்றும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமானது. ஆனால் வேலைக்கு ஆகவில்லை. போதாக்குறைக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதுமே அல்ட்ராஸ்லிம் ஸ்மார்ட்போன்களுக்கான "சந்தை ஆர்வம்" குறைவாகவும் இருந்தது.

இதன் விளைவாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே, சாம்சங் நிறுவனம்தான் அடுத்த அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டத்திலிருந்து விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ்ஸ்மார்ட்போனின் தயாரிப்புக்கான திட்டங்களை ரத்து செய்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
அல்ட்ரா ஸ்லிம் டிசைன்கள் ஆரம்பகால கவனத்தை ஈர்த்திருந்தாலும், சமீபத்திய விற்பனை போக்குகள் ஆனது வாடிக்கையாளர்கள் - பேட்டரி லைஃப், கேமரா நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்தபட்ச தடிமனை விட நிலையான செயல்திறனுக்கு முன்னுரிமை அளிப்பதை குறிக்கின்றன. ஆப்பிளின் அல்ட்ரா ஸ்லிம் மாடல் ஆன ஐபோன் ஏர் மாடலுக்கும் கூட 2025-ல் "செம்ம அடி" விழுந்தது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு (கொரியா எகனாமிக் டெய்லியின் சமீபத்திய அறிக்கையின்படி) சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 எட்ஜ் ஸ்மார்ட்போனின் மேம்பாட்டை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஆக 2026 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் "சமநிலையான" வன்பொருளில் கவனம் செலுத்தி, மிகவும் பாரம்பரியமான கேலக்ஸி எஸ்26 சீரீஸ்க்கு திரும்பும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த முடிவு இந்த ஆண்டு தொடக்கத்தில் சாம்சங்கின் முதல் அல்ட்ரா-ஸ்லிம் ஃபிளாக்ஷிப் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜின் செயல்திறனுடன் நெருக்கமாக தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
அதன் பொறியியலுக்காக பாராட்டப்பட்டாலும், கேலக்ஸி எஸ்25 லாட்ஜ் ஸ்மார்ட்போன் அதன் சமரசங்களுக்காக விமர்சனங்களை சந்தித்தது. அதன் 3,900mAh பேட்டரி ஆனது நம்பகமான, நாள் முழுவதுமானபேட்டரி லைஃப்பை வழங்க போராடியது. மேலும் ஸ்லிம் ஆன சேஸிஸை பராமரிக்க சாம்சங் ஒரு டெலிஃபோட்டோ கேமராவையும் கைவிட்டது. இந்த "சமரசங்கள்" வாடிக்கையாளர்களுக்கு "வொர்த்" ஆனதாக இல்லை; ஆக இது வியாபாரமும் ஆகவில்லை!
வெளியான அறிக்கை - ஐபோன் ஏர் மாடல் உடனான ஆப்பிளின் அனுபவம் சாம்சங்கின் முடிவை மேலும் வலுப்படுத்தியதாகவும் கூறுகிறது. எதிர்பார்ப்புகள் குறைந்ததால், குபெர்டினோவை தளமாக கொண்ட ஆயில் நிறுவனம் ஐபோன் ஏர் உற்பத்தியை சுமார் ஒரு மில்லியன் யூனிட்டுகள் குறைத்ததாக கூறப்படுகிறது. மேலும் பல வாடிக்கையாளர்கள் பேட்டரி லைஃப் மற்றும் கேமரா வரம்புகள் குறித்து புகார்களும் கூறியுள்ளனர்
ஐபோன் ஏர் மாடலின் தோல்வி ஆனது ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ ஐபோன் மாடல்களுக்கு ஆதரவாக, அவைகளின் வருமானத்தை அதிகரித்தது என்பது வேறு கதை. ஆக சாம்சங் நிறுவனத்தை போலவே ஆப்பிள் நிறுவனமும் 2026 ஆம் ஆண்டில் ஐபோன் ஏர் மாடலின் அப்கிரேடட் வெர்ஷனை அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கலாம்.
இந்த விஷயத்தில் சாம்சங் நிறுவனம் சீன பிராண்டுகளை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், சீன பிராண்டுகள் ஆனது மெல்லிய வடிவமைப்புகளில் பெரிய கொள்ளளவுகளை பொருத்த சிலிக்கான்-கார்பன் பேட்டரிகளை பயன்படுத்துகின்றன. ஆனால் சாம்சங் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தொழில்நுட்பம் இல்லாமல், அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிடத்தக்க சமரசங்கள் நிச்சயம் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications








