G வரார் வழி விடுங்க.. மூன்றாக மடியும் Samsung-ன் முதல் Tri-Fold போனின் மாடல் பெயர் இதுதானா!
ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் (Foldable Smartphones) என்று வந்துவிட்டால் "நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா" என்கிற அளவிற்க்கு சாம்சங் நிறுவனம் ஒரு முன்னோடியாக திகழ்கிறது. அதற்கு சாட்சி - அடுத்து வரும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Galaxy Z Fold 7) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் (Galaxy Z Flip 7) ஸ்மார்ட்போன்கள் தான்.
அதாவது, பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது தான் தங்களுடைய முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனையே அறிமுகம் செய்துள்ளன; சில நிறுவனங்கள் அறிமுகம் செய்ய உள்ளன. ஆனால் சாம்சங் அதன் ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் பிரிவில் ஏழாவது சீரீஸை அறிமுகம் செய்ய உள்ளது. இதைவிட முக்கியமாக.. சாம்சங் நிறுவனம் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனிலும் பணியாற்றி வருகிறது.

பெயர் குறிப்பிடுவது போலவே ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது மூன்றாக மடியும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது சாம்சங்கின் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனாக இருக்குமே தவிர, உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆக இருக்காது. ஏனென்றால் ஹூவாய் நிறுவனம் அதன் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. அது ஹூவாய் மேட் எக்ஸ்டி (Huawei Mate XT) மாடலாகும். இதை முழுமையாக திறக்கும் போது 2232x3184 ரெசல்யூஷன் கொண்ட 10.2-இன்ச் டேப்லெட்டாக மாறும்.
ஆக சாம்சங் சொந்த ட்ரை-ஃபோல்ட் போனில் வேலை செய்வது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. எது ஆச்சரியமாக இருக்குமென்றால்.. அந்த ட்ரை-ஃபோல்ட் போனின் மாடல் பெயர். சாம்சங் நிறுவனமானது ஏ-சீரீஸ், எம்-சீரீஸ், எஸ்-சீரீஸ், இஸட்-சீரீஸ் என விலைக்கு (பட்ஜெட்டிற்கு) ஏற்ப தனது ஸ்மார்ட்போன்களுக்கான மாடல் பெயர்களை தேர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
இப்படி இருக்கையில் சாம்சங்கின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் எந்த சீரிஸின் கீழ் அறிமுகமாகும்? பலரும் இது இஸட் சீரீஸ்-ன் கீழ் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு சமீபத்திய லீக் ஆனது சாம்சங்கின் ட்ரை-ஃபோல்ட் போன் ஆனது முற்றிலும் புதிய சீரீஸின் கீழ் அறிமுகமாகும் என்பதை பரிந்துரைக்கிறது.
லீக்கர் yeux1122 வழியாக கிடைத்த தகவலின்படி, சாம்சங் அதன் ட்ரை-ஃபோல்ட் போனுக்கு சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்ட் (Samsung Galaxy G Fold) என்று அழைக்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் இருபுறமும் மடிக்கும் போது 9.96 இன்ச் அகலமும் 6.54 இன்ச் உயரமும் கொண்டதாக இருக்கலாம் என்றும்,இது ஹூவாய் மேட் எக்ஸ்டி மாடலை போலவே 298 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அதாவது இது 218 கிராம் எடை உள்ள கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) மாடலை விட 36.7% கனமானதாக இருக்கும் மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விட 31.3% கனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் இந்த டாப்-ஆஃப்-லைன் ஃபிளாக்ஷிப் மாடலின் எடை 227 கிராம் ஆக உள்ளது.
கேலக்ஸி ஜி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து உள்நோக்கி மூடப்படும்படி வடிவமைக்கப்படலாம். இந்த வடிவமைப்பானது மூடப்படும்போது உள்பக்கமாக இருக்கும் டிஸ்பிளேவிற்கு பாதுகாப்பை கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ஒரு சிறிய கவர் டிஸ்பிளேவும் இடம்பெறலாம். இதன் மூலம் ஸ்மார்ட்போனை முழுமையாக திறக்காமலேயே அதை அக்செஸ் செய்ய முடியும்.
விலையைப் பொறுத்தவரை, நிச்சயமாக இது ஒரு விலையுயர்ந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் கேலக்ஸி இஸட் போல்ட் 6 மாடலின் விலையே ரூ.1,64,999 முதல் தொடங்கி ரூ.2,00,999 வரை செல்கிறது. இதன் அடிப்படையில் நாம் கேலக்ஸி ஜி போல்ட் ஸ்மார்ட்போனின் விலையை யூகித்தால்.. இது $2,500 முதல் $3,000 வரை எங்காவது ஒரு புள்ளியில் நிலைநிறுத்தப்படலாம். இந்தியாவில் இது ரூ.2 லட்சத்திற்கு அருகே செல்லலாம்.


Click it and Unblock the Notifications