ஒரு மெல்லிசான கோடு.. ஸ்லிம்மில் திகைக்க வைக்கும் Realme Narzo N53.. மே 18 வெளியீடு
ரியல்மீ (Realme) ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் மிகவும் மெல்லிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள ரியல்மீ நார்சோ என்53 (Realme Narzo N53) போன் மே 18ஆம் தேதி வெளியாகிறது. இந்த போன் வெறும் 7.49 மிமீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு 16 ஜிபி டைனமிக் ரேம் வசதி உடன் வெளியாகும் என்று ட்விட்டரில் தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்தியாவில் ஸ்லிம் ஸ்மார்ட்போன்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சொல்லப்போனால், போனின் அம்சங்களை கண்டுகொள்ளாமல், ஸ்லிம் டிசைனை மட்டுமே வைத்து வாங்குவோரும் இங்கு இருக்கிறார்கள். இந்த ஸ்லிம் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றபோன்களை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். இதுவரை வெளியான ஸ்லிம் போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் போன்களே முதல் இடத்தில் உள்ளன.

ஐபோன் எக்ஸ் சீரிஸ், 11 சீரிஸ், 12 சீரிஸ் போன்கள் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டன. அதற்கேற்ப மார்க்கெட்டிலும் சக்கைபோடு போட்டு அந்த போன்கள் விற்பனையானது. இந்த போன்களில், ஐபோன் 12 சீரிஸின் அகலம் 7.4 மிமீ இருந்தது. இந்த அளவை கிட்டத்தட்ட சமன் செய்யும் வகையில் ரியல்மீ நிறுவனத்தின் நார்சோ என்53 போன் 7.49 மிமீ அகலத்தில் களமிறங்க உள்ளது. இந்த போனின் முழு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் கசிந்த தகவல்களை இங்கு கொண்டு வந்துள்ளோம்.
ரியல்மீ நார்சோ என்53 போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: இந்த நார்சோ என்53 போன் 6.72 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்ப்ளே உடன் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால், ரியல்மீ நார்சோ என்55 (Realme Narzo N55) ஸ்மார்ட்போனில் இந்த அம்சங்கள் உடன் கூடிய டிஸ்பிளேவே வருகிறது. அதில், 90Hz ரிப்ஃரெஷ் ரேட் கொடுக்கப்படலாம்.
ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட் இருக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல 64 எம்பி மெயின் கேமரா - 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் உடன் வரவும் வாய்ப்பிருக்கிறது. செல்பீ கேமிராவை பொறுத்தவரையில் வழக்கமாக 8 எம்பியாகவே இருக்கும். 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், நார்சோ என்55 போல, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்படுமா என்பது சந்தேகமே, ஏனென்றால் இந்த போன் 7.49 மிமீ அகலத்துடன் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளதால் 4000 எம்ஏஹெச் பேட்டரி வரலாம். இந்த போனின் ஸ்டோரேஜ் வசதியை பொறுத்தவரையில் கசிந்த தகவலின் அடிப்படையில் 16 ஜிபி டைனமிக் ரேம் (16GB Dynamic RAM) கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அதாவது, 8 ஜிபி ஃபிசிக்கல் ரேம் (8GB physical RAM) மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (8GB virtual RAM) என கொடுக்கப்படலாம். அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்டுகளில் வர வாய்ப்பிருக்கிறது.
இந்த போன் ஃபெதர் பிளாக் (Feather Black ) மற்றும் ஃபெதர் கோல்டு (Feather Gold ) ஆகிய 2 கலர்களில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நார்சோ என்53 போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வளவு மலிவான விலையில் மிகவும் ஸ்லிம் டிசைன் கிடைப்பது இதுவே முதல் முறை என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications








