சின்ன ஓட்டை தெரியுதா.. ON, OFF பட்டனுடன் உலகின் முதல் AC போன்.. சீன நிறுவனம் Realme அசத்தல்!
ரியல்மி 828 ரசிகர் விழாவிற்கு (Realme 828 Fan Festival) முன்னதாக, புதுமையான தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான டீஸர்களை ரியல்மி பகிர்ந்துள்ளது. 15000mAh பேட்டரியுடன் கூடிய ரியல்மி கான்செப்ட் ஸ்மார்ட்போனானது நாளை (ஆகஸ்ட் 27 ஆம் தேதி) வெளிப்படுத்தவுள்ளது.
இதற்கிடையில் பில்ட் இன் ஏசி ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் (Built in AC active cooling system) உடனான இன்னொரு புதிய ரியல்மி சில் ஃபேன் போனும் (Realme Chill Fan Phone) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டீஸ் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சைனீஸ் பிராண்டின் 15,000mAh போன் ஆனது ஒரு முழு சார்ஜில் 50 மணிநேர வீடியோ பிளேபேக்கை உறுதியளிக்கும் என்று டீஸ் செய்யப்பட்ட மறுகையில் ரியல்மி சில் ஃபேன் ஸ்மார்ட்போன் ஆனது பிஸிக்கல் விசிறியுடன் கூடிய ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
ஒரு ஸ்மார்ட்போனில் கூலிங் சிஸ்டமை காண்பது இதுவொன்றும் முதல் முறை அல்ல. இந்த தொழில்நுட்பத்தை கொண்ட ஏராளமான கேமிங் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இருப்பினும், ரியல்மி சில் ஃபேன் போன்-ஐ தனித்து நிற்க வைப்பது அதன் "ஏசி கூலிங்" (AC Cooling) ஆகும்.
இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீஸரை பார்க்கும்போது, ரியல்மி நிறுவனம் ஆனது உலகின் முதல் ஏசி போனில் (World's first AC phone) வேலை செய்து வருகிறது, இது மைய வெப்பநிலையை 6 டிகிரி செல்சீயஸ் வரை குறைக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது
இந்த புதிய குளிரூட்டும் தொழில்நுட்பத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதை ஒரு ஏசி-ஐ போலவே ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனின் வீடியோ ட்ரெய்லர் ஆனது, இந்த ஸ்மார்ட்போனை ஒரு பழக்கமான வடிவமைப்புடன் காட்டுகிறது, ஆனால் பக்கவாட்டு பிரேமில் ஒரு சிறிய வென்ட் உள்ளது.
இந்த வென்ட் ஒரு மெழுகுவர்த்தியை ஊதி அணைக்க போதுமான அளவிலான காற்றை வெளியேற்றி, தண்ணீர் கொள்கலனில் ஒரு ரப்பர் டக்கியை முன்னோக்கி தள்ளுவதையும் நீங்கள் காணலாம். அறியாதோர்களுக்கு ரியல்மி 828 ரசிகர் விழாவானது, நாளை, அதாவது ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று சீன நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது.
இதில் காட்சிப்படுத்தப்பட உள்ள அல்லது வெளியாக உள்ள ரியல்மி சில் ஃபேன் போன் ஆனது ஒரு உண்மையான புதுமையாக இருக்குமா அல்லது அது வெறும் தந்திரமா என்பது நாளை தெரிந்துவிடும். ஆனால் 15,000mAh பேட்டரி ஸ்மார்ட்போனில் தந்திரத்தை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இந்நிறுவனம் ஏற்கனவே 10000mAh பேட்டரி கொண்ட கான்செப்ட் போனை வெளியிட்டுள்ளது.
15000mAh பேட்டரி என்பது இப்போதைக்கு மொபைல் மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான ரக்டு போன்களை விட உண்மையிலேயே மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். ஆனால் ரியல்மி வெளியிட்டுள்ள டீஸர் படத்தில் காணப்படும் ரியல்மியின் 15000எம்ஏஎச் ஸ்மார்ட்போன் ஆனது வழக்கத்திற்கு மாறாக சற்றே மெலிதான வடிவமைப்பை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போனால் 50 மணிநேர இடைவிடாத வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்க முடியும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது. 15000எம்ஏஎச் என்கிற திறனை கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. மேலும் ரியல்மி நிறுவனத்தின் இந்த 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது திடீரெனெ வந்துடவில்லை.
முன்னரே குறிப்பிட்டபடி இந்நிறுவனம் கடந்த மே மாதத்தில் 10000mAh பேட்டரியுடன் கூடிய ரியல்மி ஜிடி கான்செப்ட் போனை அறிமுகப்படுத்தியது. இது தொழில்துறையின் மிக உயர்ந்த 10% சிலிக்கான் விகிதத்தையும் 887Wh/L ஆற்றல் அடர்த்தியையும் கொண்டுள்ளது. இதன் விளைவாக, ரியல்மி ஜிடி கான்செப்ட் போன் ஆனது மிகவும் தடிமனாகவோ அல்லது கனமாகவோ இல்லை. இது 8.5 மிமீ அளவை கொண்டுள்ளது மற்றும் 200 கிராமுக்கு சற்று அதிகமாக எடையுள்ளதாக இருக்கிறது.
ஆக வரவிருக்கும் 15,000mAh பேட்டரி ஸ்மார்ட்போனிலும் நாம் அதே சிலிக்கான்-அனோட் வேதியியலை எதிர்பார்க்கலாம் ஆனால் இங்கே எழும் உண்மையான கேள்வி என்னவென்றால், ரியல்மி நிறுவனம் எப்படி இவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை ஒரு சாதாரண ஸ்மார்ட்போனாக தோற்றமளிக்கும் வகையில் பொருத்துகிறது என்பதுதான். இதுவும் நாளை தெரிந்துவிடும்!


Click it and Unblock the Notifications








