மீண்டு(ம்) வருகிறதா பப்ஜி: சீன நிறுவத்துடன் இனி உறவு இல்லை- அதிரடி காட்டும் பப்ஜி நிறுவனம்!
பப்ஜி விளையாட்டை இந்தியாவில் மீண்டும் களமிறக்குவதற்கு பப்ஜி கார்ப்பரேஷன் பெரும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மீண்டும் பப்ஜி வருகிறதா என்ற கேள்விக்கான முழு விவரங்களை பார்க்கலாம்.

118 சீன பயன்பாடுகளுக்கு தடை
இந்தியாவில் 118 சீன பயன்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில், சந்தை மதிப்பின் அடிப்படையில் டெண்சென்ட் 34 பில்லியன் டாலர்களை இழந்தது. இந்தியாவில் பிரதான பயன்பாடாக பப்ஜி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி
ஆரம்பத்தில் தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, பிற சந்தைகளின் விரிவாக்க நடவடிக்கையாக பப்ஜி விளையாட்டை சீன நிறுவனமான டென்சென்ட் வாங்கியது. உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியா, பப்ஜியில் அதிக பயனர்களை கொண்ட நாடாக உள்ளது. பப்ஜி இந்தியாவில் 175 மில்லியன் அளவு பயனர்களை கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சீன நிறுவனமான டென்செண்ட் கேம்ஸ்
தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, சீன நிறுவனமான டென்செண்ட் கேம்ஸ் பங்குகளை கொண்டுள்ளதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் டென்சென்ட் நிறுவனத்தோடு இந்தியாவில் தமது தொழில்நுட்ப உறவுகளை தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளது. பப்ஜி கார்ப்பரேஷன் தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான கிராப்டன் கேம் யூனியனின் துணை நிறுவனமாகும்.

முன்னோக்கி நகரும் PUBG கார்ப்பரேஷன்
இதுகுறித்து தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னோக்கி நகரும் PUBG கார்ப்பரேஷன் நாட்டிற்குள்ளான அனைத்து வெளியீட்டுப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் எதிர்காலத்தில் இந்திய பயனர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்கிறோம்
இதுகுறித்து மேலும் தெரிவித்த பப்ஜி நிறுவனம், நாட்டில் பப்ஜி விளையாட்டுக்கு அதன் பயன்பாட்டாளர்களிடம் இருந்த நல்ல ஆதரவு கிடைக்கிறது. பப்ஜி பிரியர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தது. இந்திய அரசின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இனி இந்தியாவில் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என பப்ஜி கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் களத்தில் இறக்குவதற்கு நடவடிக்கை
அதோடு பாதுகாப்பு காரணங்களை முன்னிருத்தி இந்திய அரசு எடுத்துள்ள தடை உத்தரவிற்கு மதிப்பளிக்கிறோம். இந்த தடை நீக்கப்படுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்திய அரசுடன் இணைந்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் பப்ஜி விளையாட்டை ஆன்லைன் களத்தில் இறக்குவதற்கு தேவையான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தடை விலக்கிக் கொள்ளப்படுமா
பப்ஜி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் தடை விலக்கிக் கொள்ளப்படும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பப்ஜி கார்ப்பரேஷன் இந்த அறிவிப்பு குறித்து டென்சென் நிறுவனம் தமது நிலைப்பாட்டை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் பப்ஜி விளையாட்டை இந்தியாவில் மீண்டும் களமிறக்குவதற்கு பப்ஜி கார்ப்பரேஷன் பெரும் முனைப்போடு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications