பொய் சொல்லி போன் விற்ற பாவத்துக்கு பரிகாரமா? இந்த OnePlus மாடல் மீது திடீர் விலை குறைப்பு.. நம்பி வாங்கலாமா?
கடந்த மாதம் அறிமுகமான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர்களுக்கு ரீஃபண்ட் (Refund) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னொரு வேலையையும் பார்த்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023-ல் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி மீது திடீரென நிரந்தர விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) மீது எவ்வளவு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? இந்த ஸ்மார்ட்போனின் பழைய விலை என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? இந்த ஒன்பிளஸ் மாடலை நம்பி வாங்கலாமா, வேண்டாமா? ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மீது ஏன் ரீஃபண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி-யின் புதிய விலை: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி மீது ரூ.2000 நிரந்தர விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.19,999-ல் இருந்து ரூ.17,999 ஆக குறைந்துள்ளது. இதேபோல 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜுன் விலை ரூ.21,999-ல் இருந்து ரூ.19,999 ஆக குறைந்துள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட்டின் இந்த புதிய விலை நிர்ணயமானது, ஒன்பிளஸ் இந்தியா இணையதளத்தில் மட்டுமின்றி பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவிலும் பிரதிபலிக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் க்ரோமாடிக் கிரே மற்றும் பேஸ்டல் லைம் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-ஐ நம்பி வாங்கலாமா? இதற்கான பதிலை ஒரே வரியில் கூறிவிட முடியாது. ஏனென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருக்காது. சிலர் ஓவர்-ஆல் பெர்ஃபார்ம்மென்ஸை எதிர்பார்ப்பார்கள்; சிலர் கேமரா குவாலிட்டியை எதிர்பார்ப்பார்கள்; இப்படி எதிர்பார்ப்புகள் வேறுபடும். எனவே.. முதலில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து விரிவாக பார்த்துவிடலாம், பின்னர் அதன் நிறைகள் மற்றும் குறைகளை பற்றி பேசலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 91.4 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் வரும் இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் போனானது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 619 ஜிபியு மற்றும் 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, 108 மெகாபிக்சல் மெயின் கேமரா (சாம்சங் எச்எம்6 சென்சார்; எஃப் /1.75 சென்சார்; இஐஎஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும். மேலும், இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக் , ப்ளூடூத் 5.1 யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யின் நிறைகள் மற்றும் குறைகள்: நிறைகளை பொறுத்தவரை விலையை மீறிய வடிவமைப்பு, திறமையான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், க்ளீன் ஆன யூஸர் இன்டர்பேஸ், டீசண்ட் ஆன பேட்டரி லைஃப் போன்றவைகளை கூறலாம். குறைகளை பொறுத்தவரை, இதன் கேமராக்களை "தி பெஸ்ட்" என்று கூறிவிட முடியாது மற்றும் இதில் எல்சிடி டிஸ்பிளே பயன்படுத்தபட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் மீது ஏன் ரீஃபண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது? கடந்த மாதம் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் போது, இந்த ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் (UFS 4.0 Storage) வரும் என்று ஒன்பிளஸ் அறிவித்திருந்தது. இருப்பினும், ஒன்பிளஸ் 12ஆர்-ன் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் (read and write) வேகத்தை சந்தித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வேரியண்ட்களுமே உண்மையில் யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் தான் வருகின்றன என்பதை உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கியவர்கள் (மார்ச் 16 ஆம் தேதிக்குள்) பணத்தை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications