அசத்துறீயே OnePlus.. சிங்கிள் சார்ஜில் 3 நாள் பேட்டரி.. 7 வருட வாரண்டி.. 8000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்!
ஜூன் 30 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) குறித்த புதிய விவரங்களை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பிரம்மாண்டமான 8,000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் சார்ஜிங் திறன், நீண்ட கால பேட்டரி லைஃப் மற்றும் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் மிக முக்கியமான புதிய தகவல், 45W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் வசதி பற்றியதுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் 8,000mAh பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் கூறுகிறது. இது இப்பிரிவில் கிடைக்கும் மிகப்பெரிய பேட்டரிகளில் ஒன்றாகும்.

பேட்டரியின் அளவைத் தாண்டி, நீண்ட காலப் பயன்பாட்டிலும் ஒன்பிளஸ் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்து சார்ஜ் செய்த பிறகும் கூட, பேட்டரி அதன் அசல் திறனில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக தக்கவைத்துக் கொள்ளும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. இத்தகைய கூற்றுகள் காலப்போக்கில் நடைமுறை சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், சார்ஜிங் ஸ்பீட் உடன் பேட்டரி லைஃப்பையும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முன்னிலைப்படுத்தும் தற்போதைய சந்தை போக்குடன் இது ஒத்துப்போகிறது.
மேலும், ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனுக்கான 60-மாத மென்மையான செயல்பாட்டு சான்றிதழையும் (60-month smoothness certification) ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கூற்றுப்படி, ஆக்சிஜன்ஓஎஸ்-ல் (OxygenOS) செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் மூலம் ஆப் திறக்கும் வேகம், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் (multitasking) மற்றும் அனிமேஷன்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிஸ்டத்தின் செயல்வேகம் சீராக பராமரிக்கப்படும்.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) அல்லது டிமென்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100 Plus) சிப்செட் இடம்பெறலாம் என்றும், இது 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
கிஸ்பாட்டின் கருத்து: சிப்செட்டை மட்டும் வைத்து பார்க்கும்போது பெஞ்ச்மார்க் (benchmark) மதிப்பெண்களில் இது மற்றவற்றுடன் போட்டியிடுவது கடினம் என்பதால், பேட்டரி லைஃப் மற்றும் சாஃப்ட்வேர் அனுபவம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனை தனித்துவப்படுத்த ஒன்பிளஸ் முயல்வதாக தெரிகிறது.
என்ன விலைக்கு வரலாம்? ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஜூன் 30 அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். அப்போது தான் இந்த ஸ்மார்ட்போனின் சரியான விலை விவரங்கள் அறிவிக்கப்படும். இப்போதைக்கு, எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இது ரூ.18,000 முதல் ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்
இந்த விலை நிர்ணயம் உண்மையாகும்பட்சத்தில் , ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் ஆனது நத்திங் போன் 3ஏ லைட் (Nothing Phone 3a Lite), ரியல்மி பி4 சீரீஸ் (Realme P4 Series), ரெட்மி 15 (Redmi 15) மற்றும் போக்கோ எம் சீரீஸ் (POCO M Series) ஸ்மார்ட்போன்கள் போன்ற மாடல்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அறிமுகமான பல ஒன்பிளஸ் நார்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை ஒன்பிளஸ் நிறுவனம் உயர்த்தியுள்ள நிலையில் இந்த அறிமுகம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, மலிவு விலை பிரிவில் (affordable segment) ஒன்பிளஸ் நிறுவனத்தின் இருப்பை தக்கவைக்க ஒன்பிளஸ் என்6 ஒரு முக்கிய தயாரிப்பாக அமையும். இதெல்லாமே ஒன்பிளஸ்-ன் வியூகங்கள் ஆகும். ஆனால் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் மீதான ஈர்ப்பு பயனர்களின் முன்னுரிமைகளை பொறுத்தே அமையும்.


Click it and Unblock the Notifications