மார்ச் 1 முதல் விலை உயர்வு.. ரூ.4000 அதிகமாகும் லேட்டஸ்ட் OnePlus போன்.. எந்த மாடல்?
நம்பகமான சில டிப்ஸ்டர்களிடம் இருந்து கிடைத்து உள்ள சமீபத்திய தகவல்களின் படி, ஒன்பிளஸ் நிறுவனம், இந்தியாவில் வாங்க கிடைக்கும், அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையை அதிகரிக்க உள்ளது. அது எந்த மாடல்? எவ்வளவு விலை உயரக்கூடும்? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இதோ விவரங்கள்:
எந்த மாடல்? விலை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) மாடல் ஆகும். இது கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.47,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ஒன்பிளஸ் நிறுவனம் எந்த திருத்தத்தையும் செய்யவில்லை மற்றும் விலை உயர்வு குறித்து எதையும் உறுதிப்படுத்தவில்லை.

இருந்தாலும் வரும் வாரங்களில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் மீதான விலை உயர்வு செயல்படுத்தப்படலாம் என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு, வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்று டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறுகிறார்.
மற்றொரு டிப்ஸ்டர் ஆன டெபயன் ராய் (@Gadgetsdata), ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை அதிகரிக்கப்படலாம் என்றும், சுமார் இரண்டு வாரங்களுக்குள் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்றும் கூறுகிறார். ஆனால் யாருமே இந்த திடீர் நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி பேசவில்லை.
இது நடந்தால், ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டிரெஜ் ஆப்ஷன் ரூ.47,999 இல் இருந்து ரூ.51,999 ஆக அல்லது ரூ.52,999 ஆக அதிகரிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாததால், இந்த தகவலை இப்போதைக்கு உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே கருத வேண்டும்.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே அமோல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகிய டிஸ்பிளே அம்சங்களும் உள்ளன.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் ஆகும். 3என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உயர்நிலை சிப்செட் ஆனது சிபியு, ஜிபியு மற்றும் சிறந்த வேகம் மற்றும் ஆற்றல் மேலாண்மை உள்ளிட்ட பொதுவான செயல்திறனில் குறிப்பிடத்தக்க ஆதாயங்களை வழங்குகிறது.
இமேஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செய்யப் 30fps மற்றும் 120fps இல் 4கே வீடியோ பதிவை ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh என்கிற மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இது - இதுவரை எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் 16 (OxygenOS 16) கொண்டு இயங்குகிறது. ஐபி ரேட்டிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது உயர்மட்ட IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களை பெற்றுள்ளது. இது தூசி மற்றும் தண்ணீரிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








