அட OnePlus 13-ஐ விட கம்மியா இருக்கே.. 7000mAh பேட்டரி கொண்ட OnePlus 15 விலை இவ்ளோ தானா?
ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய அறிமுகம் தான் இப்போதைக்கு ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் "ஹாட் டாப்பிக்". ஒரு சிங்கிள் டீஸர் கூட வெளியிடப்படாத சூழ்நிலையில், ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ ஆன ராபின் லியு , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை கையில் எடுத்துவந்து, போஸ் கொடுத்து, அதை "காட்சிப்படுத்தி" பரபரப்பை கிளப்பி உள்ளார்!
ரியல்மி மற்றும் ஐக்யூ போன்ற போட்டியாளர்கள், தத்தம் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 5 ஜென் (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் தான் - இந்த அவசரத்திற்கு காரணம். ஏனென்றால் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனிலும் அதே சிப்செட் தான் உள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13 மாடலை விட குறைவாக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

எக்ஸ் தளத்தில்@OnePlusClub வழியாக லீக் செய்யப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட பேஸிக் வேரியண்ட்டின் விலை 3,999 யுவான்களாக இருக்கும் என்று கூறுகிறது; அதாவது $560; இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.49,700 ஆக இருக்கும்.
ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அதே 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் சீனாவில் 4,499 யுவான்களுக்கு அறிமுகமானது. ஆக புதிய ஒன்பிளஸ் 15 ஆனது பழைய ஒன்பிளஸ் 15 உடன் ஒப்பிடும் போது மலிவான விலை நிர்ணயத்தை பெறும் என்பது போல் தெரிகிறது. சீன விலை மலிவாக இருந்தால், இந்திய விலையும் சற்று மலிவாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த "விலை வீழ்ச்சிக்கு" பின்னால் - ஒன்பிளஸ் நிறுவனம் சில உயர்நிலை கூறுகளை குறைத்து செயல்திறனை அதிகரிக்க விரும்புவதே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெளியான ஒரு லீக் தகவல், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ப்ரைமரி மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் "தரமிறக்கப்படலாம்" என்று கூறுகிறது
மேலும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் உள்ள ஹாப்டிக் மோட்டார் ஆனது அதன் முன்னோடியை விட (ஒன்பிளஸ் 13 மாடலில் உள்ளதை விட) சிறியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எல்லாவற்றை விட முக்கியமாக ஒன்பிளஸ் மற்றும் ஹசல்பிளாட் (Hasselblad) கூட்டாண்மையும் முடிவுக்கு வந்துள்ளது. ஆக ஒன்பிளஸ் 15 மாடலில் ஒன்பிளஸின் இன்-ஹவுஸ் இமேஜிங் எஞ்சின் தான் பயன்படுத்தப்படும் இதெல்லாம் சேர்ந்து ஒன்பிளஸ் 15 விலையை குறைத்து இருக்கலாம்.
ஒன்பிளஸ் 15 இல் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்: இது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம். ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கலாம். கடைசியாக 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 7,000mAh பேட்டரியுடன் வரலாம்.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5-க்கான போட்டி: இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற அறிவிப்பு வெளியான வேகத்தில், ஐக்யூ நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 உடன் வரும் அதன் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்திருந்தது.
அதை தொடர்ந்து - அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக ஜனவரி 2026 வாக்கில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 15 மாடல் ஆனது 2025 நவம்பர் அல்லது டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் - ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் 2024 இல் சீனாவில் அறிமுகமானது. பின்னர் உலகளாவிய சந்தைக்கான முதல் டீஸர் 2024 டிசம்பரில் வந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2025 இல் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. 2025 இல் இந்த "லான்ச் டைம்லைன்" வழக்கம் மாற்றப்படுவது உறுதி.


Click it and Unblock the Notifications








