இவன் இன்னும் திருந்தல மாமா.. பட்ஜெட் போன்னு சொன்ன புது Nothing Phone (4b) விலை என்ன தெரியுமா?
கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் ஒருவழியாக அதன் புதிய பி-சீரிஸ் ஸ்மார்ட்போனை (New b-Series Smartphone) பற்றி வெளிப்படையாக பேசியுள்ளது. அது நத்திங் போன் 4பி (Nothing Phone 4b) ஸ்மார்ட்போன் ஆகும். அதே சமயம் "இவன் இன்னும் திருந்தல மாமா!" என்று விமர்சனம் செய்யும் படியாகத்தான் இதன் விலை நிர்ணயம் (Price Range) இருக்கும் என்பது போலும் தெரிகிறது.
ஏ-சீரிஸுக்கு கீழே: வெறுமனே "(b)" என்கிற எழுத்தை மட்டுமே வெளிப்படுத்தி, பல நாட்கள் வெளியான டீசர்கள் மற்றும் ஊகங்களுக்கு பிறகு, இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இந்திய தலைவர் ஆன அகிஸ் இவாஞ்சலிடிஸ், அந்த எழுத்து ஒரு புதிய பிரிவின் தொடக்கத்தை குறிக்கிறது என்றும், அது ஏ-சீரிஸுக்கு கீழே நிலைநிறுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நம்பர்கள் VS எழுத்துக்கள்: எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், நம்பர்கள் - தயாரிப்பு தலைமுறைகளை குறிக்கின்றன என்றும், எழுத்துக்கள் வெவ்வேறு தயாரிப்பு பிரிவுகளை அடையாளம் காட்டுகின்றன என்றும் இவாஞ்சலிடிஸ் விளக்கினார். மேலும், ஏ-சீரிஸ், நத்திங்கின் "முதன்மை போன்களுக்குக் கீழே உள்ள மிகவும் பிரீமியம் சீரீஸ் ஆக" இருக்கும் என்றும், புதிய பி-சீரிஸ் ஒரு வேறுபட்ட பிரிவை குறிவைத்து அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
சிங்கிள் ரியர் கேமரா: இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நத்திங் நிறுவனம் "(b)" பிராண்டிங்கை கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை டீசர் செய்யவும் தொடங்கியுள்ளது. இதுகுறித்த ஒரு வீடியோ அதன் வடிவமைப்பின் சில பகுதிகளை ஒரு வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த போன், நிறுவனத்தின் தனித்துவமான ஒளிபுகும் பின்புற பேனலை தக்கவைத்து கொள்வதாகவும், சிங்கிள் ரியர் கேமராவை கொண்டிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது. இது மலிவு விலையில் அதிக கவனம் செலுத்தப்படுவதை உணர்த்துகிறது.
என்ன விலைக்கு வரலாம்? இந்த ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா செட்டப் இருப்பதாலும், அகிஸ் ஒரு புதிய தயாரிப்பு பிரிவை பற்றி குறிப்பிட்டிருப்பதாலும், நத்திங் போன் 4பி மாடலானது விலை அடிப்படையில் நத்திங் போன் 4ஏ சீரீஸ்-க்கு கீழே நிலைநிறுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இந்தியாவில் தற்போது நத்திங் போன் 4ஏ மாடலின் ஆரம்ப விலை ரூ.37,999 ஆக உள்ளது, எனவே நத்திங் போன் 4பி மாடலின் விலை இதைவிட குறைவாகவே இருக்கும். இருப்பினும், மிக குறைந்த விலையில் (அதாவது ரூ.20000 க்கு அருகிலான பட்ஜெட் விலையில்) கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சலாம்.
ஏனெனில், ஒட்டுமொத்த துறையிலும் விலைகள் அதிகரிக்கவே செய்யும் என்று இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei) சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். விலையை மிதமான அளவில் வைத்துக்கொண்டு, அதே சமயம் தனித்துவமான வடிவமைப்பு, எளிமையான மென்பொருள் மற்றும் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றை இந்நிறுவனம் தக்கவைத்துக்கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு 'நத்திங் போன் 4பி ஆனது ஒரு சுவாரஸ்யமான ஸ்மார்ட்போனாக அமையக்கூடும்.
அதிக விலை கொண்ட நத்திங் ஏ-சீரீஸ் மாடல்களை வாங்காமல், நத்திங் பிராண்டின் அனுபவத்தை பெற விரும்பும் பயனர்களை இது நிச்சயம் கவரக்கூடும். ஆனலும் ரூ. 30,000 க்கு குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பயனர்கள், இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளும் வரை, குறிப்பாக விலை நிர்ணயம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளும் வரை, அமைதியாக இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications