ஒரே போடு.. 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ்.. அடேங்கப்பா விலையில் OnePlus Open Apex Edition இந்தியாவில் அறிமுகம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பனின் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) ஆக ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) என்கிற மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடியே.. "இதுதான் தற்போது ஒன்பிளஸ் பிராண்டின் கீழ் கிடைக்கும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்" என்கிற பெயரையும் பெற்றுள்ளது. ஒன்பிளஸ் ஓப்பனின் இந்த புதிய வேரியண்ட் ஆனது ஸ்டாண்டர்ட் வேரியண்ட் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஆனது அதன் பேக் பேனலில் லெதர் பினிஷ் உடனான புதிய கிரிம்சன் ரெட் கலரை பெற்றுள்ளது. மேலும் அபெக்ஸ் எடிஷன் ஆனது புதிய ரேம் + ஸ்டோரேஜ் விருப்பத்துடன், சில புதிய சாஃப்ட்வேர் அம்சங்களுடன் வருகிறது. அதென்ன அம்சங்கள்? இதன் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் இது ரூ.1,49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி , இது லெதர் பேக் பேனலுடன் புதிய கிரிம்சன் ஷேடோ கலரில் வருகிறது. ஆகஸ்ட் 10 முதல் விற்பனைக்கு வரும்.
ஒப்பிடுகையில் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்.. 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.1,39,999 க்கு அறிமுகமானது. இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் ஒப்பன் அபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது ஒரு புதிய விஐபி மோட் உடன் வருகிறது. இது அலெர்ட் ஸ்லைடரை டாப் பொஷிஷனுக்கு நகர்த்தும்போதுடாக்கில் செய்யப்படுகிறது. இந்த ப்ரைவஸி அம்சமானது - கேமராக்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் பல அம்சங்களுக்கான அணுகலை தடுக்கிறது. இதுபோன்ற சில சாஃப்ட்வேர் அம்சங்களை தவிர்த்து ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டிற்கும், அபெக்ஸ் எடிஷனுக்கும் அம்சங்கள் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.
அதாவது இது அதே 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட் உடனான 7.82-இன்ச் AMOLED இன்னர் டிஸ்பிளே, 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் AMOLED அவுட்டர் டிஸ்பிளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் ஒரு எப்/1.7 அபெர்க்ஷர் உடன் வருகிறது.
ஒன்பிளஸ் ஓப்பனில் 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது. மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும்.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவைப் பெறுவீர்கள். மேலும் இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால் இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும்.


Click it and Unblock the Notifications








