பக்கா அம்சங்கள்.. பட்ஜெட் விலை.. இப்படி ஒரு POCO போனுக்கு தான் பலரும் வெயிட்டிங்.. என்ன மாடல்?
இந்திய மொபைல் சந்தையில் ரியல்மி, ஒப்போ, விவோ, டெக்னோ மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்களை ஓரங்கட்டும் முனைப்பின் கீழ், போக்கோ இந்தியா (POCO India) நிறுவனமானது இந்த 2023 ஆம் ஆண்டில் ஏற்கனவே நிறைய புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டது.
போக்கோ சி50 (POCO C50), போக்கோ சி51 (POCO C51), போக்கோ சி55 (POCO C55), போக்கோ எக்ஸ்5 (POCO X5), போக்கோ எக்ஸ்5 ப்ரோ (POCO X5 Pro) மற்றும் போக்கோ எஃப்5 (POCO F5) என புதிய போன்களை அறிமுகம் செய்வதில் இந்த பிராண்ட் மிகவும் பிஸியாக உள்ளது.

இதற்கிடையில் பக்காவான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் மேலுமொரு புதிய போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) மாடலாக இருக்கலாம். இந்த தகவலை போக்கோ இந்தியாவின் தலைவரான ஹிமான்ஷு டாண்டன் சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார்.
"போக்கோ நிறுவனத்தின் 5-நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது உள்நாட்டு சந்தையில் நல்ல வளர்ச்சிக்கு வழி வகுத்தன. அடுத்தது 6-நம்பர் சீரீஸ் தான்!" என்றுஹிமான்ஷு டாண்டன் ட்வீட் செய்துள்ளார். போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 12ஆர் (Redmi Note 12R) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, சீனாவில் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களுடன் ஒரு போக்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி என்று அழைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி விலை? உண்மையாகவே இந்த மாடல், ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில், போக்கோ எம்6 ப்ரோ 5ஜி-யின் பேஸிக் வேரியண்ட் (4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்) தோராயமாக ரூ.11,300 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இதுதான் ரெட்மி நோட் 12ஆர் 5ஜி மாடலின் சீன விலை நிர்ணயமாகும்.
போக்கோ எம்6 ப்ரோ 5ஜி அம்சங்கள்? முன்னரே குறிப்பிட்டபடி இது ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களை பகிர்ந்துகொள்ளும். அப்படியாக இது 6.79-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவையும் பெறும்.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென்2 (Qualcomm Snapdragon 4 Gen2) சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மெமரியை விரிவாக்கும் ஆதரவையும் வழங்கும்.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும். கடைசியாக இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை மிட்நைட் பிளாக், டைம் ப்ளூ மற்றும் ஸ்கை இல்யூஷனுடன் சேர்த்து போக்கோவின் பாரம்பரியான யெல்லோ கலரும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








