ஒன்பிளஸ் 12ஆர் 256ஜிபி ஸ்டோரேஜ் சிக்கலுக்கு இடையில் இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் தான் வருகிறது என்று நம்பி வாங்கி, பின்னர் ஏமாந்துபோன வாடிக்கையாளர்களுக்கு ரீஃபண்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.. பிப்.28 ஆம் தேதியன்று இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது!
அதென்ன மாடல்? ஒன்பிளஸின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் என்ன சிக்கல்? அதை வாங்கியவர்களுக்கு ஏன் ரீஃபண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

2024 பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் (Global Markets) அறிமுகம் செய்யப்படப்போவது ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் (OnePlus 12R Genshin Impact) என்கிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் (Special Edition Smartphone) தான்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்கிற சந்தேகம் நீண்ட நாட்களாக நிலவிவந்த நிலைப்பாட்டில், இது பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது (இந்த முடிவுக்கு பின்னால் ஒன்பிளஸ் 12ஆரின் யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் முக்கிய காரணமாக இருந்தால். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை).

ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வானது, பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு தொடங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் கீழ் உடனடி தள்ளுபடி, பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்வதன் வழியிலான போனஸ், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம், ரூ.1000 கேஷ்பேக் மற்றும் ஸ்மார்ட்போனை இலவசமாக வெல்லும் போட்டி போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்மல் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் - இரண்டிற்கும் இடையே என்னென்ன வித்தியாசங்கள் இருக்கும்? ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் ஸ்மார்ட்போனானது கெக்கிங் (Keqing) என்ற கேம் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புடன் வரும். இதில் எலக்ட்ரோ வயலட் கலர் (Electro-violet color) மற்றும் தொழில்துறையில் முதல் எலக்ட்ரோ-எட்ச்சிங் செயல்முறையும் (Electro-etching process) உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமான ஜென்சின் இம்பாக்ட்-தீம்டு சேகரிப்புகளுடன் (Genshin Impact-themed collectibles) கஸ்டம்-டிசைன்டு பரிசு பெட்டியில் (Custom-designed gift box) வரும். இதுதவிர்த்து ஸ்பெஷல் எடிஷனுக்கும், ஸ்டாண்டர்ட் எடிஷனுக்கும் எந்த வேறுபாடுகளும் இருக்காது. அதாவது இவ்விரு மாடல்களுமே ஒரே அம்சங்களைத்தான் பேக் செய்யும்!
ஒன்பிளஸ் 12ஆர் ஜென்சின் இம்பாக்ட் ஸ்மார்ட்போன் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக இது 100W சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரி, டூயல் ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் ஐபி65 ரேட்டிங் போன்றவைகளையும் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் இது ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏற்கனவே இங்கே வாங்க கிடைக்கும் "சாதாரண" ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனை விட ரூ.10,000 அதிகமான விலைக்கு வரலாம்.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் என்ன சிக்கல்? கடந்த மாதம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12ஆர் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வெளியீட்டின் போது, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் வரும் என்று ஒன்பிளஸ் அறிவித்திருந்தது.
இருப்பினும், ஒன்பிளஸ் 12ஆர்-ன் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து சந்தேகம் எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதாவது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வேரியண்ட்களுமே யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் வருகின்றன என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இந்த விஷயத்தை "யாருக்கும் பாதிப்பு இல்லாமல்" முன்னோக்கி எடுத்துச்செல்ல, ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவரும், சிஓஓ-வுமான கிண்டர் லியு (Kinder Liu) புதிய செயல் திட்டமொன்றை அறிவித்து, இதன்கீழ் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கியவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் (மார்ச் 16 ஆம் தேதி வரை) என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications