அம்பானி சார்.. என்ன முரட்டு அடியா இருக்கு.. UPI வசதியுடன் புதிய Jio போன்.. அதுவும் ரூ.1000 பட்ஜெட்ல!
பார்தி ஏர்டெல்-ஆ.. பிஎஸ்என்எல்-ஆ என்று பார்க்காமல்.. தனியார் டெலிகாம் நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆக இருந்தாலும் சரி.. வியாபாரம் என்று வந்துவிட்டால் பாரபட்சம் பார்க்காமல் அடித்து நொறுக்குவதே ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் பழக்கமாகும்.
அந்த வரிசையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவானது, பணப்பரிமாற்றம் செய்ய உதவும் யுபிஐ வசதி (UPI Feature) உடனான புதிய ஜியோ போனை (New Jio Phone) அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? ஜியோ நிறுவனம் அதன் "2ஜி முக்ட்" நோக்கத்தின் கீழ், அதாவது இந்தியாவில் 2ஜி சேவைகளை இல்லாமல் ஆக்கவேண்டும் என்கிற நோக்கத்தின்கீழ்.. ஜியோ 4ஜி ஆதரவுடன் வரும் பீச்சர் போன்களை அறிமுகம் செய்ய தொடங்கியது. அதனொரு பகுதியாக 2023 ஆம் ஆண்டில், ஜியோ நிறுவனம் தனது சொந்த ஜியோ பாரத் (Jio Bharat) ஆப்ரேட்டிங் சிஸ்டமை அறிவித்தது.
இதன் கீழ் ஜியோ நிறுவனமானது ஓஇஎம்-களுடன் (OEM - Original Equipment Manufacturer) கூட்டு சேர்ந்து, ரூ.1000 பட்ஜெட்டில் 4ஜி திறன் கொண்ட பீச்சர் போன்கள் அறிமுகமாகும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குறுதியின் கீழ் ரூ.1299 க்கு ஜியோ பார்த் பி1 (Jio Bharat B1) என்கிற பீச்சர் போன் அறிமுகமானது. இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது.

இதற்கிடையில் 91மொபைல்ஸின் (91 Mobiles) சமீபத்திய அறிக்கையானது, ஜியோ பாரத் ஆப்ரேட்டிங் சிஸ்டமின் கீழ் இன்னொரு புதிய ஜியோ பீச்சர் போன் அறிமுகமாகும் என்று கூறுகிறது. ஜியோ பாரத் பி2 என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படும் இந்த ஜியோ போன், பிஐஎஸ் சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளதால், கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அறியாதோர்களுக்கு பிஐஎஸ் என்பது இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau Of Indian Standards) என்பதன் சுருக்கமாகும். வழக்கமாக பிஐஎஸ் தளத்தை கடக்கும் எந்தவொரு ஸ்மார்ட்போனுமே கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாவது வழக்கம். ஆக ஜியோ பாரத் பி2 பீச்சர் போனும் கூட உடனடி அறிமுகத்தை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஜியோபார்த் பி1 பீச்சர் போன் ஆனது 4ஜி கனெக்டிவிட்டி (4G connectivity), யுபிஐ கட்டணங்களை (UPI Payments) செய்யும் திறன், ஜியோ சினிமா ஆப் (Jio Cinema,) வழியிலான ஆன்லைன் கன்டென்ட் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. அதே அம்சங்கள் ஜியோ பார்த் பி2 மாடலிலும் இடம்பெறும்.
ஜியோ பார்த் பி1 போனில் ஜியோசாவன் (JioSaavn), ஜியோபே (JioPay) மற்றும் பல தளங்களுக்கான அணுகல்களும் உள்ளன. மேலும் பேக் பேனலில் டிஜிட்டல் கேமரா, 2000எம்ஏஎச் பேட்டரி, 2.4-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த பீச்சர் போன், ஜியோ நெட்வொர்க்கின் கீழ் மட்டுமே வேலை செய்யும்.
இதேபோன்ற அம்சங்கள் மற்றும் பட்ஜெட்டில் கிடைக்கும் நோக்கியா (Nokia), மோட்டோரோலா (Motorola) மற்றும் லாவா (Lava) போன்ற நிறுவனங்களின் பீச்சர் போன்களுக்கு இது கடும் போட்டியாக உள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஜியோ பார்த் பி1 மாடலின் அப்கிரேடட் எடிஷனான ஜியோ பார்த் பி2 மாடலை பற்றி ஜியோ நிறுவனம் இன்னும் வாயே திறக்கவில்லை; விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
என்ன விலைக்கு வரும்? முன்னரே குறிப்பிட்டபடி ஜியோபார்த் பி1 பீச்சர் போன் ரூ.1299 க்கு வாங்க கிடைப்பதால், ஜியோபார்த் பி2 மாடலும் கூட இதேபோன்ற விலைக்கே அறிமுகம் செய்யலாம். எப்படி பார்த்தாலும் இது ரூ.1500 க்குள் தான் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சரியான விலை விவரம் வெளியீட்டு தினத்தன்று அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications