அதிகபட்சம் ரூ.1,59,900.. குறைந்தபட்சம்..? இன்று இரவு அறிமுகமாகும் iPhone 15 சீரிஸின் சாத்தியமான இந்திய விலை!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்றிரவு, அதாவது செப்.12 ஆம் தேதி இரவு, இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே இந்நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களாக ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) அறிமுகமாகும்.
பாதி பேர்.. அம்சங்களின் அடிப்படையில் புதிய ஐபோன்கள் என்னென்ன மேம்பாடுகளை கொண்டிருக்கும் என்பதை பார்க்க மிகவும் ஆவலாக காத்திருக்கும் மறுகையில், மீதி பேர்.. புதிய ஐபோன் 15 சீரீஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இன்று இரவு நடக்கும் ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வின் போது தான் ஐபோன் 15 சீரிஸின் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் வெளியிடப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம், ஆனால் லீக்ஸ் வழியாக கிடைக்கப்பெற்ற விலைகளை பார்ப்பதன் மூலம் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய யோசனை நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
அப்படியாக வரவிருக்கும் ஐபோன் 15 (iPhone 15), ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus), ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் எனபது குறித்து பல லீக்ஸ் வெளியாகியுள்ளன. அவைகளில் நம்பத்தகுந்த விலை விவரங்கள் இதோ:
ஸ்டாண்டர்ட் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் ஆனது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலைகளை தக்க வைக்கலாம் அல்லது மிகவும் சிறிய அளவிலான விலை அதிகரிப்பை காணலாம். ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதுள்ள விலை நிர்ணய உத்தியின்படி ஐபோன் 15 ரூ.79,900 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுகையில் உள்ள ஐபோன் 15 பிளஸ் மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ.89,900 ஆக இருக்கலாம். ஆனால் இதேபோன்ற விலை நிர்ணய உத்திகளை ப்ரோ மாடல்களில் அதாவது ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இவ்விரு மாடல்களும் பெரிய அளவிலான விலை அதிகரிப்பை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஐபோன் 15 ப்ரோ மாடலானது $100 விலை அதிகரிப்பை பெறலாம்; மறுகையில் உள்ள ப்ரோ மேக்ஸ் ஆனது $200 விலை உயர்வை பெறலாம். இதன்படி பார்த்தால் ஐபோன் 15 ப்ரோவின் விலை சுமார் $999 இருந்து தோராயமாக $1,099 ஆக அதிகரிக்கப்படலாம். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.82,900 இல் இருந்து தோராயமாக ரூ.91,200 ஆக அதிகரிக்கப்படலாம்
வழக்கம் போல, இதே மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில் அமெரிக்காவிற்கும் இந்திய சந்தைகளுக்கும் இடையே எப்போதும் பெரிய விலை வேறுபாடு உள்ளது. உதாரணமாக, ஐபோன் 14 ப்ரோ அமெரிக்காவில் $999க்கு (தோராயமாக ரூ.82,900) கிடைத்தது, ஆனால் இந்தியாவில் அது ரூ.1,29,900 க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேற்கண்ட கணக்கின்படி பார்த்தால் இந்தியாவில் புதிய ஐபோன் 15 ப்ரோவின் விலை ரூ.1,39,900 ஆக அதிகரிக்கப்படலாம். கடைசியாக உள்ள ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலை கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விளையான $1,099 இல் இருந்து $1,299 ஆக அதிகரிக்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் இந்த விலை நிர்ணயத்தை பின்பற்றினால், புதிய ப்ரோ மேக்ஸ் மாடலின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.1,59,900 ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் ரூ.1,39,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆகமொத்தம் 2 ப்ரோ மாடல்களின் விலைகளும் நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.
Photo Courtesy: @ShrimpApplePro


Click it and Unblock the Notifications








