ரூ.3000 ஸ்வாகா.. Motorola வழி தனி வழி.. உலகமே விலை உயர்த்தும் நேரத்தில் 2 Moto போன்கள் விலை திடீர் குறைப்பு!
இந்தியாவில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலைகளை "சத்தம் இல்லாமல்" உயர்த்தி வரும் நிலையில், மோட்டோரோலா நிறுவனம் மட்டும் "என் வழி தனி வழி" என்கிற படியாக - விலை உயர்வு விஷயத்தில், வேறு பாதையை நோக்கி செல்வது போல் தெரிகிறது.
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ள விவரங்களின்படி கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) மற்றும் மோட்டோ ஜி67 பவர் ( Moto G67 Power) ஆகிய 2 ஸ்மார்ட்போன்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த விலை குறைப்பை "பரிந்துரைக்கும்" மோட்டோரோலாவின் சந்தை தகவல்தொடர்பு ஆவணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து மோட்டோரோலா நிறுவனத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும்வரவில்லை, ஆனாலும் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது உண்மையிலேயே தற்போது குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள ஆவணத்தில், ரூ.3000 விலை குறைக்கப்பட்டு மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ரூ.29,999 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.32,999 ஆக இருந்தது. அதே நேரத்தில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி அபிஷனின் விலை ரூ.16,999 என்று காட்டப்பட்டுள்ளது. இது முந்தைய விலையான ரூ.17,999 இல் இருந்து ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மோட்டோரோலா போன்களின் சில்லறை விலைகளையும் நாங்கள் பிளிப்கார்ட்டில் சரிபார்த்தோம், அங்கும் தள்ளுபடி விலை தான் இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட விலை நிலைத்திருந்தால், ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும் மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 க்கும் குறைவான விலையில் ஒரு போட்டிதன்மை மிக்க விருப்பமாக மாறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த விலைப்பிரிவில் ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மற்றும் விவோ டி4 ப்ரோ (Vivo T4 Pro) போன்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த விலைப்பிரிவில் உள்ள பல போன்கள் வேகமான சார்ஜிங் அல்லது கேமிங் செயல்திறனை வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில் மோட்டோரோலா அதன் அல்ட்ரா-ஸ்லிம் வடிவமைப்பு, க்ளீன் ஆன சாப்ட்வேர் மற்றும் கிட்டத்தட்ட-ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை நம்பியுள்ளது.
மறுகையில், ரூ.16,999 க்கு இறங்கி வந்துள்ள மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி, ரியல்மி மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்-சீரிஸ் மாடல்களுடன் ஏற்கனவே மிகவும் "நெரிசலாக" உள்ள பட்ஜெட் பிரிவில் அமர்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 7,000mAh பேட்டரி ஆனது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கலாம்
முன்னரே குறிப்பிட்டபடி, நத்திங் (Nothing), போக்கோ (POCO), ரெட்மி (Redmi), விவோ (Vivo), ஐக்யூ (iQOO), ரியல்மி (Realme), சாம்சங் (Samsung) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) என கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளுமே, தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. அதிகரித்து வரும் நினைவக கூறு செலவுகள் இந்த விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கின்றன.
ஆனாலும் மோட்டோரோலாவின் இந்த நடவடிக்கை தனித்து நிற்கிறது. கையிருப்பில் உள்ள சரக்குகளை காலி செய்வதாக இருந்தாலும் சரி அல்லது போட்டியாளர்களின் விலைகள் உயர்ந்து வருவதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதாக இருந்தாலும் சரி, நேரம் - மோட்டோரோலா நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுகிறது. வாங்குபவர்கள் நிச்சயமாக விலை உயர்வுகளின் பக்கம் செல்ல மாட்டார்கள்!


Click it and Unblock the Notifications








