ஒரே ஒரு வித்தியாசம் தான்.. ஆனா நச்சுனு இருக்கு.. Nothing Phone 3a VS Phone 3a Pro என்ன வேறுபாடு? என்ன விலை?
மார்ச் 4 ஆம் தேதி நெருங்க நெருங்க நத்திங் நிறுவனத்தின் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, நத்திங் போன் 3ஏ சீரீஸின் 2 மாடல்களின் கேமரா செட்டப்களை விவரிக்கும் புதிய லீக்ஸ் வெளி வந்துள்ளன.
இதன்படி நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய இரண்டும் பொதுவான ஹார்ட்வேரை பகிர்ந்து கொள்ளும். அதாவது இரண்டு மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு கேமரா செட்டப்பில் இருக்கும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் AMOLED டிஸ்பிளே, தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்புக்கான ஐபி64 ரேட்டிங், 5000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ராவைட் ஆகிய பொதுவான அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டிற்கும் இடையேயான உண்மையான மற்றும் முக்கியமான வித்தியாசம் - மூன்றாவது கேமராவில் இருக்கும். நத்திங் நிறுவனம் முதல் முறையாக அதன் ஸ்மார்ட்போன்களில் பிரத்யேகமாக டெலிஃபோட்டோ லென்ஸை எசேர்கிறது. ஆனால் இரண்டு மாடல்களிலும் இதன் செலயல்பாடுகள் மாறுபடும். அதாவது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 2ஸ்க்ஸ் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் ப்ரோ வேரியண்ட்டில் சோனியின் Lytia LYT-600 சென்சார் உடன், அதிக திறன் கொண்ட 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் ஆதரவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ப்ரோ மாடலுக்கு ஜூம் ஷாட்கள் மற்றும் போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுக்கும் திறனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நத்திங் நிறுவனம் அதன் போன் 3ஏ சீரீஸின் கேமரா வடிவமைப்பை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால் நேற்று வெளியான ஒரு ட்வீட்டில், நத்திங் நிறுவனம் 2 தனித்துவமான தளவமைப்புகளில் அமைக்கப்பட்ட புள்ளிகளின் படங்களை பகிர்ந்துள்ளது. ஒன்று கிடைமட்ட அமைப்பிலும் மற்றொன்று எல் வடிவத்திலும் உள்ளது.
இதில் எது போன் 3ஏ மாடலுக்கு செல்லும், எது போன் 3ஏ ப்ரோ மாடலுக்கு செல்லும் என்பதில் எந்த தெளிவும் இல்லை. ஆனால் இரண்டு மாடல்களிலும் கேமரா செட்டப் மற்றும் கேமரா டிசைன் ஒரே மாதிரியாக இருக்காது என்பது மட்டும் உறுதி.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 3.1, 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.
முன்னதாக நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயமும் லீக் ஆனது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 முதல் ரூ.25,999 வரைக்குள் இருக்கும். அதே சமயம் அதன் ஹைஎண்ட் வேரியண்ட் ஆன நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 முதல் ரூ.29,999 வரைக்குள் இருக்கும்.
மேற்கண்ட விலை நிர்ணயங்கள் உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சீரீஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஏ-சீரிஸில் உள்ள மிட்-பிரீமியம் பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுமே கடும்போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications