iPhone SE 4 வெறித்தனமா இருக்கு.. 6.1-இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம், 48MP கேமரா, 5G.. விலையும் எகிறும்!
ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) - ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை எஸ்இ மாடலில் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் கனெக்டிவிட்டி ஆகியவற்றில் பல குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக ஆப்பிள் (Apple) நிறுவனம் வரவிருக்கும் ஐபோன்களை பற்றி எந்த விவரங்களையும் வெளியிடாது; இருப்பினும் பல சந்தர்ப்பங்களில், ஆன்லைன் வழியாக வெளிவரும் தகவல்கள் உண்மையாகி உள்ளதால்.. ஐபோன்கள் விஷயத்தில் லீக்களை (Leaks) தட்டிக்கழிப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் அல்ல. சரி ஐபோன் எஸ்இ 4 பற்றி அப்படி என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளது? இதோ விவரங்கள்:
9டூ5மேக் (9to5Mac) வழியாக வெளியான புதிய அறிக்கையின்படி, வரவிருக்கும் ஐபோன் எஸ்இ 4 ஆனது ஐபோன் 16 மாடலில் உள்ள அதே சிப் மூலம் இயக்கப்படும்; ஐபோன் 15 மாடலில் உள்ள அதே கேமரா மற்றும் ஐபோன் 14 மாடலில் உள்ளதை போன்ற டிஸ்பிளேவை பேக் செய்யும். வெளியான அறிக்கையானது ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது ஆப்பிளின் ஏ18 சிப்செட் (Apple A18 Chipset) மற்றும் 8ஜிப் ரேம் உடன் இயங்கும் என்று கூறுகிறது.

நினைவூட்டும் வண்ணம் ஆப்பிளின் லேட்டஸ்ட் ஜெனரேஷன் மாடல்களான ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரண்டுமே ஏ16 சிப்செட் கொண்டு தான் இயங்குகின்றன. இதன் மூலம் ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் எஸ்இ 2022 மாடலில் ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது.
ஐபோன் எஸ்இ 4 உடன் வரும் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் - இது ஆப்பிளின் முதல் இன்-ஹவுஸ் 5ஜி மோடம் உடன் அறிமுகம செய்யப்படலாம். இது 'சென்டாரி' என்கிற குறியீட்டு பெயரை கொண்டதாகக் கூறப்படுகிறது. இது ஐபோன் எஸ்இ 4 மாடலில் வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ்-ஐ செயல்படுத்தும் திறனையும் கொண்டிருக்கலாம். இதிலுள்ள பில்ட்-இன் பவர் சேவிங் மோட்-ஐ இயக்கும் போது, அது பேட்டரி பயன்பாட்டை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஐபோன் எஸ்இ 4 மாடல் ஆனது 6.1-இன்ச் (1170 x 2532 பிக்சல்ஸ்) ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம், அதாவது இது ஐபோன் 14 மாடலில் நாம் பார்த்த டிஸ்பிளே அளவை போன்றது. நினைவூட்டும் வண்ணம் டிஸ்பிளே நாட்ச் உடன் ஆப்பிள் வெளியிட்ட கடைசி ஐபோன் மாடல் - ஐபோன் 14 ஆகும்.
இருப்பினும் ஐபோன் எஸ்இ 4 ஆனது ஐபோன் எஸ்இ 3 மாடலை முன்னோடியை போலன்றி, ஃபேஸ் ஐடிக்கான ஆதரவை (Face ID Support) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டச் ஐடியை (Touch ID) விட பாதுகாப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 4 சிங்கிள் ரியர் கேமராவை மட்டுமே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஐபோன் 15 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட 48-மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், அதே 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் (12MP TrueDepth) கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே கேமரா தான் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களிலும் உள்ளது.
விலையை பொறுத்தவரை, முன்னதாக வெளியான அறிக்கைகள் ஐபோன் எஸ்இ 4 ஆனது அதன் முன்னோடியை விட சற்றே விலை அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றன. இந்த மாடலில் கொண்டுவரப்படவுள்ள வன்பொருள் மேம்படுத்தல்களே விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும். கடைசியாக ஆப்பிள் எஸ்இ 4 மாடலானது ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் 'ம்யூட் ஸ்விட்ச்க்கு' பதிலாக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்ஷன் பட்டனுடன் இவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








