6000mAh பேட்டரியை காட்டி ஏமாற்ற போகும் ஒன்பிளஸ் கம்பெனி.. OnePlus 13-க்கு வெயிட் பண்றவங்க தலையில் இடி!
ஒன்பிளஸ் 8 மாடலுக்கு கிடைத்த வரவேற்பானது.. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகமான வேறு எந்த ஒன்பிளஸ் பிளாக்ஷிப் ஸ்மாட்போனிற்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். கடைசியாக வெளியான ஒன்பிளஸ் 12 மாடல் தான், இந்த பிராண்டிற்கான உண்மையான 'கம்பேக்' ஆக இருந்தது. இந்த போக்கை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தின்கீழ் ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 13 மாடலில் சில அற்புதமான மேம்படுத்தல்களை கொண்டு வரவுள்ளது. கூடவே ஒன்பிளஸ் 13 மாடலில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் பற்றிய சில புதிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ஒன்பிளஸ் 13 ஆனது "மைக்ரோ-கர்வ்டு கிளாஸ் கவர் வடிவமைப்பை" கொண்ட "ஸ்ட்ரெயிட் ஸ்க்ரீனை" கொண்டிருக்கும்.

இந்த தகவல் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது குவாட்-கர்வ்டு டிஸ்பிளேவுடன் வரும் என்று வெளியான முந்தைய வதந்தியில் இருந்து சற்று வேறுபடுகிறது. அதாவது புதிதாக வெளியான தகவல் ஒன்பிளஸ் 113 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பிளாட் ஆக இருக்கலாம்; ஆனால் நான்கு பக்கங்களிலும் கர்வ்டு கிளாஸால் மூடப்பட்டிருக்கலாம்; சமச்சீர் ஆன பெசல்லெஸ் இல்லாத தோற்றத்தை பெறலாம் என்பது போல் தெரிகிறது.
ஷாவ்மீ மற்றும் ஹானர் ஆகிய 2 நிறுவனங்களுமே தத்தம் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் இந்த "குவாட்-கர்வ்டு" வடிவமைப்பை பயன்படுத்தியுள்ளன, ஆனால் அந்த ஸ்மார்ட்போன்கள் நான்கு பக்கங்களிலும், ஸ்க்ரீனில் சிறிய வளைவுகளை கொண்டிருந்தன. இந்த வடிவமைப்பை ஒன்பிளஸ் நிறுவனம் எப்படி கையாள போகிறது, எப்படி செயல்படுத்த போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.
இதுமட்டுமின்றி டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக, ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) இடம்பெறாது என்கிற தகவலும் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி கெப்பாசிட்டி ஆனது 6,000 எம்ஏஎச் ஆக அதிகரிக்கப்படும். நினைவூட்டும் வண்ணம் இதற்கு முன் வெளியான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 5,400mAh பேட்டரியை கொண்டு உள்ளது.
மேலும் ஒன்பிளஸ் 13-ன் பேட்டரி அது 100 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 13-ன் 6000எம்ஏஎச் +100W பாஸ்ட் சார்ஜிங் என்கிற காம்பினேஷன் ஆனது பயனர்களுக்கு 2 நாட்கள் என்கிற பேட்டரி லைஃப்பை உத்திரவாதம் அளிக்கக்கூடும்.
இருப்பினும், வயர்லெஸ் சார்ஜிங்கை அகற்றுவது ஒரு சர்ச்சைக்குரிய முடிவு. பெரும்பாலான ஃபிளாக்ஷிப் போன்களில் நிச்சயம் தேவை என்று கருதப்படும் இந்த அம்சத்தை தவிர்ததற்காக ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே கடந்த காலங்களில் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் மற்றும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் போல்ட் மடலிலும் கூட வயர்லெஸ் சார்ஜிங் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) மாடலுக்கு பிறகு வயர்லெஸ் சார்ஜிங்கை (Wireless Charging) வழங்கும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக வந்தது. இது ஏர்வூக் (AirVOOC) ஸ்டாண்டர்ட்-ஐ பயன்படுத்தி 50W வரையிலான சார்ஜிங் ஸ்பீட்-ஐ ஆதரிக்கிறது.
இந்த இடத்தில், சாம்சங் கேலக்ஸிஎஸ் 24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) போன்ற பெஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்கள் கூட அதிகபட்சம் 15W வயர்லெஸ் சார்ஜிங்கையே கொண்டுள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் இடம்பெற்றால், அது மிகப்பெரிய அம்சமாக இருக்கும். ஒருவேளை நீக்கப்பட்டால், நிச்சயம் ஒரு பின்னடைவாக இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் ஏன் இந்த அம்சத்தை அகற்றவுள்ளது என்பது பற்றி எந்த தெளிவான விளக்கமும் இல்லை. ஒருவேளை ஒன்பிளஸ் 13 மாடலில் இடம்பெறவுள்ள பெரிய 6,000mAh பேட்டரி, இதற்கு காரணமாக இருக்கலாம்.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள அதே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம் என்றும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் சுட்டிக்காட்டியுள்ளது. பெரிஸ்கோப் கேமராவில் மட்டும் சிறிய அளவிலான மேம்படுத்தல்கள் இருக்கலாம். அறிமுகத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 13 ஆனது டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications