எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. கையை விரித்த Tim Cook.. Apple iPhone விலைகள் உயர்வு.. எவ்வளவு?
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புகளிலும் விலை உயர்வை (Price Hike) அறிவிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, வேகமாக அதிகரித்து வரும் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சிப்களின் விலைகளானது, ஆப்பிள் நிறுவனத்தை விலைகளை உயர்த்த நிர்பந்திக்கக்கூடும்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக், செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களின் பெருகிவரும் தேவையால் ஏற்பட்ட உலகளாவிய மெமரி பாகங்களின் பற்றாக்குறையை ஆப்பிள் நிறுவனம் சமாளித்து வருவதால், விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இருப்பினும், எந்தெந்த தயாரிப்புகளின் விலை உயரக்கூடும் அல்லது இந்த மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்கிற விவரங்களை ஆப்பிள் சிஇஓ வெளியிடவில்லை.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடனான ஒரு உரையாடலில், அதிகரித்து வரும் பாகங்களின் விலைகளிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஆப்பிள் முயற்சி செய்து வருவதை டிம் குக் ஒப்புக்கொண்டார். இருப்பினும், எதிர்காலத்தில் இந்த விலை உயர்வுகளை தாங்கிக்கொள்ள ஐபோன் தயாரிப்பாளரால் முடியாமல் போகலாம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
"துரதிர்ஷ்டவசமாக, விலை உயர்வுகள் தவிர்க்க முடியாதவை," என்று குக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "எங்கள் மீது சுமத்தப்படும் இந்த மிகப்பெரிய விலை உயர்வுகளைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம், மேலும் இந்த விலை உயர்வுகளிலிருந்து எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க முயன்று வருகிறோம், ஆனால் நிலைமை தாங்க முடியாததாகிவிட்டது." என்று கூறியுள்ளார்
டிரேம் (DRAM) மற்றும் ஸ்டோரேஜ் (Storage) உதிரிபாகங்களின் விலை திடீரென உயர்ந்திருப்பதையும், அவற்றின் பற்றாக்குறை குறித்த கவலைகளையும் டிம் குக் சுட்டிக்காட்டினார். சமீபத்திய மாதங்களில், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான பாகங்களை விட, ஏஐ சர்வர்களில் பயன்படுத்தப்படும் 'ஹை-பேண்ட்வித் மெமரி' (HBM) தயாரிப்பிற்கே உற்பத்தியாளர்கள் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
இந்த மாற்றம் விநியோக சங்கிலியை பாதித்து, விலைகள் திடீரென உயர காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. தனது நிதி வளங்களை பயன்படுத்தி மெமரி விநியோகத்தை அதிகரிக்க வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார். இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக மெமரி சிப்களை தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்பதை டிம் குக் மீண்டும் வலியுறுத்தினார்.
தற்போதைய மாடல்களில் உள்ள 8ஜிபி ரேம் திறனுக்கு பதிலாக, ஐபோன் 18 சீரிஸ் மாடல்கள் ஆனது 12ஜிபி ரேம் உடன் வரக்கூடும் என்று டிஜிடைம்ஸ் ஏசியா (DigiTimes Asia) வெளியிட்ட அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஆப்பிளின் இந்த "கவலைகள்" வெளிவந்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
ஐஓஎஸ்27-இல் (iOS 27) அறிமுகமாகவுள்ள மேம்பட்ட சிரி (Siri) அனுபவங்கள் மற்றும் ஏஐ (AI) சார்ந்த அம்சங்களை ஆதரிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மெமரி திறன் அதிகரிக்கப்பட்டாலும், தற்போதைய விலையையே தக்கவைக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கை அப்போது குறிப்பிட்டிருந்தது. ஆனால், குக்கின் சமீபத்திய கருத்துக்கள் அந்த உத்திக்கு சவால் ஏற்படலாம் என்பதை குறிக்கின்றன.
உதிரிபாகங்களின் விலை உயர்வு எதிர்கால ஐபோன்விலையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்தும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆய்வு செய்துள்ளது. சந்தை ஆய்வு நிறுவனமான டெக்இன்சைட்ஸ்-ன் (TechInsights) மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை வெளியிட்ட தகவலின்படி, பேஸிக் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மாடலுக்கான டிரேம் செலவு சுமார் $39-லிருந்து (சுமார் ரூ.3,700) $145-ஆக (சுமார் ரூ.13,700) உயரக்கூடும்.
அதேவேளையில், ஸ்டோரேஜ் திறனுக்கான செலவு $13-லிருந்து (சுமார் ரூ.1,200) $51-ஆக (சுமார் ரூ.4,800) அதிகரிக்கலாம். உற்பத்தி செலவுகள் உள்ளிட்ட பிற செலவுகளையும் கணக்கில் கொண்டால், ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மாடலை விட பேஸிக் ஐபோன் 8 ப்ரோவை தயாரிப்பதற்கான செலவு கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தனது லாப வரம்பை தக்கவைக்க, ஆப்பிள் நிறுவனம் இந்த போனின் விலையை $1,099-லிருந்து (சுமார் ரூ.1.04 லட்சம்) $1,299-ஆக (சுமார் ரூ.1.23 லட்சம்) உயர்த்தக்கூடும்.


Click it and Unblock the Notifications