ரூ.28000 இல்ல ரூ.4800 தான்.. மற்ற கம்பெனி மாதிரி நாங்க இல்ல.. iPhone 18 Pro மாடல் விலையில் Apple அந்தர் பல்டி!
தொழிற்துறையை பாதித்துள்ள மெமரி பற்றாக்குறை நெருக்கடிக்கு மத்தியிலும், தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை விற்பனை காலத்தின் பாதியிலேயே உயர்த்தாத சில நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்றாகும். விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் கூறியிருந்தாலும், அடுத்துவரும் ஐபோன்களை வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
ஏற்கனவே சில ஆய்வாளர்கள் கணித்ததை போல ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விலையை மிக அதிகமாக உயர்த்தாமல் இருக்கலாம் என்கிற தகவல் மீண்டும் கிடைத்துள்ளது. ஜேபி மோர்கனின் (JP Morgan) ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆய்வாளர் மேக்ஸ் வெயின்பேக் (Max Weinbach) ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதன்படி, வரவிருக்கும் ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) ஆகியவற்றின் விலை உயர்வு 50 அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.4,800) மிகாமல் இருக்கலாம். இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 200 டாலர் (சுமார் ரூ.19,000) முதல் 300 டாலர் (சுமார் ரூ.28,000) வரையிலான விலை உயர்வு மதிப்பீடுகளை விட மிக குறைவாகும்.
ஐபோன் 18 சீரீஸில் எதிர்பார்க்கப்படும் விலை உயர்வு: டெக்இன்சைட்ஸ் (TechInsights) போன்ற நிறுவனங்களின் முந்தைய மதிப்பீடுகள், லாப வரம்பை தக்கவைக்க ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோவின் விலையை 270 டாலர் வரை உயர்த்த வேண்டியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டின. வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் (The Wall Street Journal) ஆய்வும் இதே போன்ற முடிவுக்கு வந்தது; ஐபோன் 17 ப்ரோவின் ஆரம்ப விலையான 1,099 டாலருடன் (சுமார் ரூ.1.03 லட்சம்) ஒப்பிடுகையில், ஐபோன் 18 ப்ரோவின் 1,399 டாலர் (சுமார் ரூ.1.32 லட்சம்) அல்லது அதற்கும் அதிகமாக தொடங்கலாம் என்று கணித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சாம்சங் (Samsung), மைக்ரான் (Micron) மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் (SK Hynix) போன்ற மெமரி தயாரிப்பு நிறுவனங்கள், அதிக லாபம் தரக்கூடிய ஏஐ சார்ந்த தயாரிப்புகளான ஹை-பேண்ட்வித் மெமரி (High-Bandwidth Memory -HBM) மற்றும் அட்வான்ஸ்டு சர்வர் டிரேம் (DRAM) ஆகியவற்றின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க தொடங்கியுள்ளன.
இது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சிப்களின் விநியோகத்தை குறைத்து, ஒட்டுமொத்தத் துறையிலும் உதிரிபாகங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இருப்பினும், மற்ற நிறுவனங்களை போல் இல்லாமல், இந்த செலவு சுமையை நேரடியாக நுகர்வோர் மீது சுமத்துவதற்கு பதிலாக, ஆப்பிள் நிறுவனம் அதை தானே ஏற்றுக்கொள்ளக்கூடும் என்று ஜேபி மோர்கன் நம்புகிறது.
அந்நிறுவனத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனம் பிற வழிகளில் செலவை குறைக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; குறிப்பாக, அதன் சொந்தத் தயாரிப்பான சி-சீரீஸ் மோடம் பிளாட்ஃபார்ம் போன்ற உள்நாட்டு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவது இதில் அடங்கும். இந்த கணிப்பு உண்மையானால், ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கமான உத்தியையே பின்பற்றுவதாக அமையும்.
குறுகிய கால லாபத்தை அதிகப்படுத்துவதை விட, விற்பனை அளவையும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்கான வரவேற்பையும் தக்கவைப்பதற்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளதால், ஐபோன் விலையை பெருமளவில் உயர்த்துவதில் அந்நிறுவனம் வரலாற்று ரீதியாகவே எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் விலை உத்தியில் கடைசியாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது - 2023 இல் தான். இந்தாண்டு வெளியான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடலின் ஆரம்ப விலை 100 அமெரிக்க டாலர்கள் உயர்ந்தாலும், அதே வேளையில் ஆப்பிள் நிறுவனம் பேஸ் ஸ்டோரேஜை (base storage) 128ஜிபிலிருந்து 256ஜிபி ஆக இருமடங்காக உயர்த்தியது; இதன் மூலம் விலை உயர்வினால் ஏற்பட்ட கூடுதல் செலவு பெருமளவு ஈடுசெய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications