எகிறியது Android போன்களின் விலை.. ஆனால் 2026 இல் புது iPhone வாங்க போறவங்களுக்கு அதிர்ஷ்ட காற்று!
உலகளவில், ஸ்மார்ட்போன்களுக்கான "ஸ்டோரேஜ் செலவுகள்" (Memory costs) அதிகரித்துள்ள நிலையில், ஆண்ட்ராய்டு மொபைல் மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. மேலும் இந்த 2026 இல் இனி வரப்போகும் ஆண்ட்ராய்டு போன்களின் விலைகளும் "நிச்சயம்" அதிகமாகவே இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு பிரீமியம் ஐபோன் மாடல்களை வாங்குபவர்களுக்கு "அரிதான" ஒரு அதிர்ஷடம்" காத்திருக்கலாம். அது என்னவென்றால் வரவிருக்கும் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகள் ஐபோன் 17 ப்ரோ மாடல்களின் அதே ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎப் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் ஆன ஜெஃப் புவின் கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளை செயின் கூட்டாளிகள், ஐபோன் 18 ப்ரோ விலையை தற்போதைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது "மாறாமல் அல்லது அதே மட்டத்தில்" வைத்திருக்க, கடுமையான செலவு நிர்வாகத்தில் நிறுவனம் கவனம் செலுத்துகிறதாம்.
வெளியான விவரங்களின்படி - அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை சுமார் USD 1,099 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ சீரிஸின் ஹை-எண்ட் மாடல் ஆன ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை USD 1,199 ஆகவும் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ மாடல்களின் விலை ரூ.1,34,900 முதல் தொடங்குகின்றன.
முன்னரே குறிப்பிட்டபடி DRAM மற்றும் NAND விலைகள் உயர்ந்துள்ளன. ஏனென்றால் சிப் தயாரிப்பாளர்கள் தங்களுடைய அதிக உற்பத்தியை - லாபகரமான ஏஐ டேட்டா தரவு மையங்களுக்கு திருப்பி, நுகர்வோர் டிவைஸ்களுக்கு குறைவான மெமரி சிப்களை விட்டுவிடுகிறார்கள். இது ஏற்கனவே சில ஸ்மார்ட்போன்களுக்கான 10-25 சதவீத விலை உயர்வாக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆண்ட்ராய்டு பிராண்டுகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.
இதன் விளைவாக பல ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்ந்துள்ளன அல்லது அதே விலையில் குறைக்கப்பட்ட ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. ஆனால் ஆப்பிள் இதை செய்யப்போவது இல்லை.
சாம்சங் மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற சப்ளையர்களுடன் மிகவும் சாதகமான மெமரி ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், டிஸ்பிளே மற்றும் கேமராக்கள் போன்ற பிற கூறுகளுக்கான செலவுகளை குறைப்பதன் மூலம், இந்த விலை அதிகரிப்புகளிலிருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற ஆப்பிள் தனது அளவு மற்றும் பேரம் பேசும் சக்தியை பயன்படுத்துகிறது என்று ஜெஃப் பு நம்புகிறார்.
நன்கு அறியப்பட்ட மற்றொரு ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோ இதே கருத்தை எதிரொலித்துள்ளார். வன்பொருள் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் கூட ஆப்பிள் நிறுவனத்தின் உள் இலக்கு ஆனது ஐபோன் 18 விலைகளை "முடிந்தவரை" உயர்த்துவதை தவிர்ப்பது தான் என்று கூறியுள்ளார். ஆனால் இதெல்லாம் இந்திய சந்தையில் எப்படி கையாளப்படும் என்பதை பார்க்க, ஐபோன் 18 ப்ரோ மாடல்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள நாம் 2026 செப்டம்பர் வெளியீடு வரை காத்திருக்க வேண்டும்.
ஐபோன் 18 சீரீஸ் குறித்த மற்றொரு முக்கிய அப்டேட்டை பொறுத்தவரை, முன்னதாக மேக்ரூமர்ஸ் வழியாக கிடைத்த ஒரு அறிக்கையின்படி, ஜேபி மோர்கனின் புதிய ஈக்விட்டி ஆராய்ச்சி குறிப்பின் (JP Morgan new equity research note) படி, ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் 18 சீரீஸில் (iPhone 18 Series) குறிப்பிடத்தக்க செல்பீ கேமரா அப்கிரேட்-ஐ (Selfie Camera Upgrade) இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது - ஐபோன் 18 சீரிஸில் உள்ள அனைத்து பிளாக்ஷிப் மாடல்களிலும் 24 மெகாபிக்சல் செல்பீ கேமராவை (24MP Selfie Camera) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய ஐபோன் 17 சீரிஸில் (iPhone 17 Series) உள்ள 18 மெகாபிக்சல்களில் இருந்து அதிகமாகும்.
இந்த மாற்றம் ஆப்பிளின் செல்பீ கேமரா தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கலாம். மேலும் இந்த மாற்றம் இன்னும் கூர்மையான படங்கள், மேம்படுத்தப்பட்ட குறைந்த-ஒளி செயல்திறன் மற்றும் விரிவான போர்ட்ரெயிட் காட்சிகளை உறுதியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த தகவல் துல்லியமாக இருந்தால், குறிப்பிட்ட செல்பீ கேமரா அப்கிரேட் ஆனது ஐபோன் 18 ( iPhone 18), ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro), ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ( iPhone 18 Pro Max), ஐபோன் ஏர் 2 (iPhone Air 2) மற்றும் ஆப்பிளின் முதல் போல்டபிள் ஐபோன் (Apple first foldable iPhone) ஆகிய அனைத்து மாடல்களிலும் இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications








