ஓமன் மொபைல்போன் மார்க்கெட்டில் களமிறங்கும் இன்டெக்ஸ்

Posted By: Staff

ஓமன் மொபைல்போன் மார்க்கெட்டில் களமிறங்கும் இன்டெக்ஸ்
மஸ்கட்: இந்தியாவில் வளர்ந்து வரும் மின்னணு சாதன தயாரிப்பாளர்களில் இன்டெக்ஸ் நிறுவனமும் ஒன்று. மொபைல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் அதிவேக வளர்ச்சி பெற்று இன்டெக்ஸ் நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ்,லாவா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் வகையில் மொபைல்போன்களை விற்பனை செய்து வருகிறது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்டெக்ஸ் மொபைல்போன் விற்பனைக்கு பரந்துவிரிந்த விற்பனை நெட்வொர்க்கை கொண்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற பல்வேறு விலை பிரிவுகளில் மொபைல்போன்களை விற்பதால் இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்திய சந்தையில் பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து சர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் துவங்கியுள்ளது. முதலில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் தனது மொபைல்போன்களை இன்டெக்ஸ் அறிமுகம் செய்கிறது.

இதற்காக, ஓமனில் மின்னணு சாதனங்கள் சில்லறை வணிகத்தில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் இ-மேக்ஸ் நிறுவனத்துடன் இன்டெக்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.நவீன அம்சங்கள் கொண்ட இன்டெக்ஸ் போன்களை இ-மேக்ஸ் தனது விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்ய இருக்கிறது.

அடுத்த வாரத்திலிருந்து இ-மேக்ஸ் ஷோரூம்களில் இன்டெக்ஸ் போன்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில்,மாதத்திற்கு 5,000 முதல் 7,000 போன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக விற்பனை இலக்கை உயர்த்தவும் இன்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது.

தவிர, ரோடு ஷோக்கள் மூலமும், வணிக வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் தனது போன்களை இன்டெக்ஸ் அங்கு பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், பார்வையற்றவர்களுக்கு ஏற்ற வகையில் பிரெய்லி கீபேடு கொண்ட போன்களை விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஓமனில் இன்டெக்ஸ் போன்கள் 14.9 ரியால்கள் முதல் 64 ரியால்கள்(ரூ.1,700 முதல் ரூ.7,400) வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமனை தொடர்ந்து பிற நாடுகளிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot