ரூ.56,000 கோடிக்கு மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தை வாங்குகிறது கூகுள்!

Posted By: Staff

ரூ.56,000 கோடிக்கு மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தை வாங்குகிறது கூகுள்!
சென்னை: ரூ.56,622 கோடி மதிப்பீட்டில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை கூகுள் நிறுவனம் விரைவில் கையகப்படுத்துகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களை தயாரிப்பதில் மோட்டோராலா மொபிலி்ட்டி சர்வதேச சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஆன்ட்ராய்டு போன்களை நேரடியாக களமிறக்கும் வகையில், மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தை விரைவில் கையகப்படுத்துகிறது கூகுள். மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் 63 சதவீத பங்குகளை கூகுள் வாங்குகிறது.

அதாவது, மோட்டோரோலா நிறுவனத்தின் ஒரு பங்கை 40 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,800) கொடுத்து வாங்குகிறது கூகுள். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் மோட்டோரோலாவின் ஆன்ட்ராய்டு போன்களின் தயாரிப்பு கூகுள் கட்டுப்பாட்டிற்குள் வர இருக்கிறது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு இரு நிறுவனங்களின் இயக்குனர் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மிகப்பெரிய கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) கூறியதாவது:

"எங்களின் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போன்களை தயாரிப்பதில் மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனம் மிகுந்த அர்ப்பணிப்பும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறது. இதுவே, அந்த நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மிகமுக்கிய காரணம்.

இந்த நடவடிக்கை, ஆன்ட்ராய்டு ஓஎஸ் பயனாளிகள், பங்குதாரர்கள் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும் விதமாக அமையும்.

இந்த புதிய முயற்சியின் மூலம் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய மோட்டோரோலா போன்கள் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.

இருப்பினும், வழக்கம்போல் ஆன்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஓபன் சோர்ஸாக வழங்குவது தொடரும். மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் வர்த்தகமும், ஆன்ட்ராய்டு ஓஎஸ் வர்த்தகத்தையும் தனித்தனியாகவே மேற்கொள்வோம். இதனால், எந்த குழப்பமும் இருக்காது," என்று கூறினார்.

மோட்டோரோலாவை கூகுள் கையகப்படுத்துவதன் மூலம், ஆன்ட்ராய்டு போன் மார்க்கெட்டில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மோட்டோரோலாவை கையகப்படுத்தும் பணி முழுவதுமாக நிறைவடையும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை காரணமாக ஆப்பிள் நிறுவனத்திற்கும், ஆசியாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்று மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் மோட்டோரோலோவின் அப்ளிகேஷன், சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவு தொடர்ந்து மோட்டோரோலோ சொல்யூசன்ஸ் வசமே இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot