மொபைல்போனிலேயே வங்கி சேவைகள்: நோக்கியா அறிமுகம்

ஒரு நேரத்தில் வங்கிக்கு நேரில் சென்றால்தான் பணம் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே எடுக்க இயலும்.
ஆனால், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டு ஏடிஎம் இயந்திரங்களில் 24 மணி நேரமும் எளிதாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இதையும் தாண்டி மொபைல்போனிலேயே வங்கி சேவைகளை பெறும் வசதியை இந்தியா உள்பட சர்வதேச அளவில் நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம், வங்கி சேவையில் புதிய அத்தியாயத்தை நோக்கியா துவங்கியுள்ளது.
மொபைல் மணி கிளையன்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த வங்கி சேவைகளை நோக்கியாவின் அனைத்து ரக போன்களிலும் பெற முடியும் என்பதுதான் இதன் ஹைலைட்.
யெஸ் வங்கி, ஓபோ பே மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற முடியும்.
இதற்காக, அந்த வங்கிகளுடன் நோக்கியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
நோக்கியாவின் மொபைல் மணிகிளையண்ட் மூலம் பெறக்கூடிய வங்கி சேவைகள்:
1. பணம் செலுத்துதல்
2. வங்கி கணக்குகளுக்கிடையில் பண பரிமாற்றம்
3. நோக்கியா அவுட்லெட்டுகள் மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி
4. வங்கி கணக்கின் விபரங்களை பெறும் வசதி
5. வரவு- செலவு விபர அறிக்கை பெறும் வசதி
ஆகிய வங்கி சேவைகளை பெற முடியும்.
இந்த நிலையில், இந்த வங்கி சேவை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால்தான் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று நோக்கியா தெரிவித்துள்ளது.
ஊரக பகுதிகளில் வங்கி சேவை கிடைப்பதற்கு இந்த திட்டம் ஊன்றுகோலாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், மொபைல்போன் இன்டர்நெட் பேங்கிங்கில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், புதிய தகவல்தொழில்நுட்ப வசதிகள் அனைத்திலும், இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை தவிர்க்க இயலாது என்றும் வாடிக்கையாளர்கள் சிறிது எச்சரிக்கையாக இருந்தால் பிரச்னையை இருக்காது என்றும் நோக்கியா தெரிவித்துள்ளது.
மேலும், நோக்கியா மொபைல் மணி கிளையன்ட் திட்டத்தால் வாடிக்கையாளர்கள் பெறும் பயன்களையும், வசதிகளையும் பெற முடியும் என்றும் நோக்கியா கூறுகிறது.


Click it and Unblock the Notifications