இனி அலைச்சல் வேண்டாம்! குடும்ப அட்டை முகவரியை ஆன்லைனில் மாற்றும் வசதி.. இதோ வழிமுறைகள்..
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் புதிய வீட்டிற்கு குடிபெயரும்போது, குடும்ப அட்டையில் உள்ள முகவரியையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பலர் இதற்காக நேரில் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், தற்போது அந்த சிரமம் தேவையில்லை.
அரசு வழங்கியுள்ள ஆன்லைன் வசதியின் மூலம், குடும்ப அட்டையின் (Family Card) முகவரியை வீட்டிலிருந்தபடியே எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். இதனால் நீண்ட வரிசையில் காத்திருப்பது, அலுவலகங்களுக்குப் பலமுறை செல்வது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன.

தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால், முகவரி மாற்றத்திற்கான செயல்முறை தொடங்கப்படும். விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணிக்கும் வசதியும் உள்ளது.
இதனால், வீடு மாறிய பிறகு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தற்போது மிகவும் எளிதான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் செயலாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, இந்த சேவையைப் பொதுமக்கள் விரைவாகப் பெறலாம். சரி இப்போது குடும்ப அட்டையில் உள்ள முகவரியை வீட்டிலிருந்தபடியே மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும். அடுத்து முகப்பு பக்கத்தில் முகவரி மாற்றம் செய்ய என்ற விருப்பம் வழங்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-2: அதன்பிறகு குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிடவும். அதன் கீழ் உள்ள கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளிடவும். இப்போது உங்கள் போனுக்கு வரும் 7 இலக்க ஓடிபியை (OTP) பதிவு செய்யவும். அதன்பின்பு உங்களது குடும்ப அட்டை விவரங்கள் வரும்.
வழிமுறை-3: அடுத்து உங்கள் குடும்ப அட்டை (Ration Card) விவரங்கள் அனைத்து சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அதன்பின்பு புதிய முகவரி விவரங்களைப் பதிவிடவும். அதாவது வீட்டு எண், தெரு பெயர், பகுதியின் பெயர், கிராமம், மாவட்டம் அஞ்சல் குறியீடு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.
வழிமுறை-4: புதிய முகவரி விவரங்களை உறுதி செய்ய 15 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, எரிவாயு நுகர்வோர் அட்டை, வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு, வீடு ஆவணம், மின்கட்டண ரசீது, தொலைபேசி ரசீது, வங்கி கணைக்குப்புத்தகம், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், அஞ்சலக அடையாள அட்டை.

வழிமுறை-5: மேலே உள்ள பட்டியலில் புதிய முகவரிக்குச் சரியான முறையில் இருக்கும் ஆவணத்தை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் 1.0எம்பி அளவுள்ள பிஎன்எஜி, ஜிஃப், ஜேபக், அல்லது பிடிஎஃப் கோப்புகளாக மாற்றிப் பதிவேற்ற வேண்டும்.
வழிமுறை-6: அடுத்து பயனர்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதில் டிக் செய்துவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண் கொண்டு உங்களது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications