பான் கார்டுக்கு அப்ளை பண்றீங்களா? இனி இந்த சான்றிதழ் அவசியம்.. இல்லையெனில் ரிஜெக்ட் ஆயிடும்!
இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது பான் கார்டு (PAN card). வருமான வரி செலுத்துவதற்கு மட்டுமின்றி, வங்கிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் எடுப்பதற்கு மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு என நிதி சார்ந்த பல்வேறு விஷயங்களில் பான் கார்டு அவசியம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஆதார் கார்டு போலவே பான் கார்டும் ஒரு முக்கிய அரசு ஆவணமாக உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசு திருத்தப்பட்ட பான் விண்ணப்ப விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் இதில் புதிய படிவங்கள், கடுமையான ஆவணத் தேவைகள் மற்றும் அடையாள சரிபார்ப்பு செயல்முறையில் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பான் விண்ணப்பச் செயல்முறையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட படிவம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முந்தைய படிவம் 49A-க்கு பதிலாகப் படிவம் 93-ஐ நிரப்ப வேண்டும். அதேசமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் படிவம் 49AA-க்கு பதிலாகப் படிவம் 95-ஐ பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இனி பான் விண்ணப்பத்திற்கு ஆதார் மட்டுமே போதாது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, ஆதார் அட்டையை (aadhaar card) மட்டும் கொண்டு விண்ணப்பிக்க முடியாது. அதாவது விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையுடன் கூடுதலாகத் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் பான் அட்டையில் உள்ள பெயர் ஆதார் பதிவில் உள்ளபடியே இருக்கும். ஆகவே இனி பெயரில் எந்த பொருத்தமின்மைக்கும் அல்லது மாற்றத்திற்கும் இனி வாய்ப்பில்லை.
தற்போது பான் கார்டு விண்ணப்பங்களுக்குப் பிறந்த தேதி சான்று இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் செல்லுபடியாகும் பிறந்த தேதி சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
பான் கார்டுக்கு தேவையான ஆவணங்கள்
பிறப்புச் சான்றிதழ்,
வாக்காளர் அடையாள அட்டை,
ஓட்டுநர் உரிமம்,
பாஸ்போர்ட்,
மெட்ரிகுலேஷன் சான்றிதழ்,
நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாண பத்திரம்.
இந்த புதிய மாற்றங்கள் அடையாளச் சரிபார்ப்பை வலுப்படுத்தவும், அரசாங்கப் பதிவேடுகளில் உள்ள தகவல்களின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
வழிமுறை 1: பார்டு கார்டுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ பான் விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும் (NSDL அல்லது UTIITSL).
வழிமுறை 2: அடுத்துச் சரியான படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். படிவம் 93 (இந்திய விண்ணப்பதாரர்களுக்கு) அல்லது படிவம் 95 (வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு).
வழிமுறை 3: அதன்பின்னர் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
வழிமுறை 4: அடையாளச் சரிபார்ப்பிற்காக ஆதார் விவரங்களை உள்ளிடவும்.

வழிமுறை 5: அதை தொடர்ந்து உங்கள் ஆதார் மற்றும் பிறந்த தேதி சான்று உட்படத் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். அதன்பின்பு ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தவும்
வழிமுறை 6: அடுத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து ஒப்புதல் எண் (Acknowledgement Number) சேமிக்கும். அந்த ஒப்புதல் எண்ணின் மூலம் நீங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும், உங்கள் பான் கார்டைப் பதிவிறக்கம் செய்யவும் அல்லது பெற்றுக்கொள்ளவும் முடியும்.


Click it and Unblock the Notifications








