ஏர்டேக், ப்ளூடூத் டிராக்கர் இல்லாமலேயே, டிராக்கிங்.. இனி கூகுள் Gemini போதும்.. ஸ்மார்ட் ஐட்டம் டிராக்கிங்!
இப்போதெல்லாம், "அதை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை" என்று சொல்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. கீஸ், வாலெட், லேப்டாப், முக்கிய டாக்குமெண்ட்கள் அல்லது பொருட்கள் என்று எதையாவது எங்காவது வைத்துவிட்டு, அது தேவைப்படும்போது வீடு முழுக்க தேடுவது வழக்கமாக மாறிவிட்டது.
கிடைக்கவில்லை என்றால், வீட்டில் இருப்பவர்களிடம் கோபம் கொள்வது, தேவையில்லாமல் டென்ஷனாகி கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டி இருப்பதால், எதை எங்கே வைத்தோம் என்பதை கட்டாயம் நினைவில் வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒரு வழியை காட்டி இருக்கிறது.

கூகுளின் ஜெமினி (Gemini) மற்றும் ஃபைண்ட் ஹப் (Find Hub) இன்டிகிரேஷன் செய்யப்பட்டு, இந்த மறந்த பொருட்களின் தேடுதலுக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமைந்துவிட்டது. ஒரு தொழில்நுட்ப செய்தியாளராகவும், ஆர்வலராகவும் இதன் செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இது குறித்த எனது தனிப்பட்ட அனுபவத்தையும், பார்வையையும் இங்கே பகிர்கிறேன்.
டிஜிட்டல் மூளையாக செயல்படும் ஜெமினி
பொதுவாக ஸ்மார்ட் டிராக்கிங் என்றால், ஒரு பொருளில் ஒரு சிறிய ப்ளூடூத் டிவைஸ் மாட்டிவைக்க வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், ஜெமினி - ஃபைண்ட் ஹப் கூட்டணியானது, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. நமது வாய்ஸ் கமெண்ட்களை (Voice commands) ஒரு டிஜிட்டல் நினைவகமாக மாற்றுவதுதான் இதன் சிறப்பம்சம்.
அதாவது, ஒரு பொருளை ஒரு இடத்தில் வைக்கும்போதே, அதை ஜெமினியிடம் சொல்லிவிட்டால் போதும். அது ஃபைண்ட் ஹப் மூலம் பாதுகாப்பாக ஸ்டோர் செய்து கொள்ளப்படும். பிறகு அதே ஜெமினியிடம், வைத்த இடத்தை சொல்லு என்று கேட்டால் போதும், நிமிடத்தில் எங்கே அதை வைத்தோம் என்பதை சொல்விடும். ஃபைண்ட் ஹப் வழியாகவும் இதை செய்யலாம்.
எனது அனுபவம்
இந்த தொழில்நுட்பத்தை என் அன்றாட வாழ்வில் நான் பரிசோதித்து பார்த்தேன். சில நாட்களுக்கு முன், ஒரு அவசரத்தில் எனது பைக் மாற்று கீயை (Bike Key) பெட்ரூமின் டிராயரில் (Bedroom Drawer) வைத்தேன். உடனே, ஜெமினியை ஓப்பன் செய்து "Remember in Find Hub that I put my bike spare in my bedroom drawer" என்று சொல்லி வைத்தேன். இதை ஜெமினி நினைவில் வைத்து கொண்டது.

அதேபோல, மற்றொரு நாள் எனது லேப்டாப்பை ஒரு இடத்தில் வைத்தபோது, அந்த அவசரத்தில் மீண்டும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, "நான் எனது லேப்டாப்பை டேபிளுக்கு அடியில் வைத்துள்ளேன், மறந்துவிட்டால் நான் கேட்கும் பொழுது மீண்டும் சொல்" என்று தமிழிலும் இயல்பாக தெரிவித்தேன். இதையும் ஜெமினி நினைவில் வைத்து கொண்டது.
இப்போதுதான் விஷயம் ஆரம்பிக்கிறது. சில நாட்கள் கழித்து, "எனது பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது?" என்றும், "எனது லேப்டாப்பை எங்கே வைத்தேன்?" என்றும் ஜெமினியிடம் கேட்டேன். எவ்வித தயக்கமும் இன்றி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் நான் கொடுத்த கட்டளைகளை சரியாக புரிந்துகொண்டு, அந்தப் பொருட்கள் இருக்கும் இடத்தை மிக துல்லியமாக எனக்கு நினைவூட்டியது.
இது எனக்கு வியப்பை அளித்தது. இதையே ஃபைண்ட் ஹப் வழியாகவும் செய்ய முடியும். அதாவது, ஃபைண்ட் ஹப் ஆப்பை ஓப்பன் செய்து, வலது புறத்தின் கீழே இருக்கும் Remembered விருப்பத்தை கிளிக் செய்தால் போதும், எதை நினைவில் வைக்க வேண்டும் என்ற கட்டளையை கொடுத்து, ஸ்டோர் செய்ய முடியும். பிறகு அதே விருப்பத்துக்கு சென்று பார்த்து கொள்ளலாம்.
எனது கருத்தை சொல்ல வேண்டுமானால், இந்த ஜெமினி மற்றும் ஃபைண்ட் ஹப் இன்டிகிரேஷன் ஒரு சாதாரண சாப்ட்வேர் அப்டேட் அல்ல. நமது அன்றாட வாழ்வில் தேவையான விஷயங்களை எளிதாக்கும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். ஏனென்றால், கடைசி நேரத்தில் தேடுவதுதான் நமக்கு வாடிக்கையாக உள்ளது. ஆகவே, இதில் நேர மிச்சம் ஏற்படுகிறது.
அதேநேரத்தில் அவசரத்தில் தேடும்போது ஏற்படும் டென்ஷன் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. மொழி கட்டுப்பாடு இல்லை, நம் தாய்மொழியான தமிழிலேயே கட்டளைகளை கொடுக்கலாம். சொந்த மொழியில் நினைவூட்டல்களை பெறுவது என்பதும் இதன் மிகப்பெரிய பலம். அப்போது, இதில் எந்த குறையும் இல்லையா என்று கேட்டால், இல்லாமல் எப்படி இருக்கும்.
டேட்டா பிரைவசி (Data Privacy)
உங்களது ஸ்மார்ட்போனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் வரையில் இதில் எந்த குறையும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கியவர்களும் உங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவார்கள் என்றால், அவர்களாலும் இதை தெரிந்து கொள்ள முடியும். கூகுளை பொறுத்தவரை இந்த தகவல்கள் அனைத்தும் ஃபைண்ட் ஹப்பில் பாதுகாப்பான முறையில் கையாளப்படும்.
கீஸ், புக், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட எந்த பொருட்களுக்கும் இதை பயன்படுத்த முடியும். அதற்காக பணத்தை எங்கே வைத்துள்ளேன், நகைகளை எங்கே வைத்துள்ளேன், நில ஆவணங்களை எங்கே வைத்துள்ளேன் என்பது போன்ற தனிநபருக்கு மட்டுமே தெரியவேண்டிய தகவல்களை இதில் பகிராமல் இருக்க வேண்டும். இது உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன். அதேபோல வைத்த பொருளை வீட்டில் இருப்பவர்கள் மாற்றி வைத்தாலும், அதை கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும்.
சொந்த மூளைக்கு வேலை கொடுங்கள்
முன்பெல்லாமல், வீட்டில் இருக்கும் அனைவரது மொபைல் நம்பரையும் நினைவில் வைத்து கொள்வோம். யாராவது பேசியபடி மொபைல் நம்பரை சொன்னாலும் அதை மூளையில் சேமித்து சில மணி நேரங்கள் கழித்தாலும் சொல்வோம். தேதி, நேரம் போன்றவற்றிலும் அதிக கவனம் மற்றும் நினைவுடன் இருப்போம். ஆனால், இப்போது கதையே மாறிவிட்டது.
பலருக்கு வீட்டில் இருக்கும் நபர்களின் மொபைல் நம்பர் கூட தெரியாது. எதையாவது நினைவில் வைக்க போட்டோ எடுக்க முடிவு செய்வோம். இதற்கெல்லாம், தொழில்நுட்ப வளர்ச்சியும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே, இதுவும் உங்களது மூளைக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கும். வயதான பிறகு, யோசிக்க விரும்பாத கட்டத்தில் மட்டுமே இதை பயன்படுத்தலாம். அடிக்கடி மறதி ஏற்பட்டாலும் இதை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications
