கூகுள் பே செயலியின் புதிய அப்டேட்.. குழந்தைகளுக்குப் பணம் அனுப்ப புதிய வழி.. பயன்படுத்துவது எப்படி?
சமீபத்தில் கூகுள் பே செயலில் உள்ள Pocket Money ஐகான் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது. அதில் இந்த Pocket Money ஐகானைத் தொட்டால், வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் காலியாகி விடும் என்று ஒருவர் கூறுகிறார். மேலும் இது ஒரு மோசடி வலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கூகுள் பே செயலியில் இந்த பாக்கெட் மணி (Pocket Money) அம்சம் எந்தவித மோசடியும் இல்லாத அம்சம் ஆகும். அதாவது BHIM செயலியில் இருப்பது போல யூபிஐ சர்கிள் சேவை தான் கூகுள் பே செயலில் பாக்கெட் மணி என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பாக்கெட் மணி வங்கி கணக்கு இல்லாத உங்கள் குடும்பத்தினர் அல்லது குழந்தைகளுக்கு டிஜிட்டல் பேமெண்ட் செய்ய உதவ கொண்டு வரப்பட்ட சேவை ஆகும். இது வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும். சரி இதன் அம்சங்கள் என்னென்ன மற்றும் இதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

அதாவது UPI circle அமைப்பின் ஒரு பகுதிதான் இந்த பாக்கெட் மணி அம்சம். இதன் மூலம் முதன்மை பயனர், இரண்டாம் பயனர்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. குறிப்பாக இதில் முதன்மை பயனரின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கும், ஆனால் இரண்டாம் நிலை பயனர்கள் அந்த கணக்கைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களைச் செய்ய முடியும்.
குறிப்பாக இந்த முறையில் தனியாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதற்குப் பதிலாக இரண்டாம் நிலை பயனர் ஒரு பரிவரத்தணையை தொடங்கும்போது, முதன்மை பயனர் அமைத்துள்ள நிபந்தனையைப் பொறுத்து அது தானாகவே நடக்கும் அல்லது முதன்மை பயனரின் ஒப்புதலுக்குப் பிறகு நடக்கும்.
அதேபோல் ஒரு கூகுள் பே பயனாளர் ஐந்து இரண்டாம் நிலை பயனர்கள் வரை சேர்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக சிறிய செலவுகளை நிர்வகிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த பாக்கெட் மணியில் இரண்டு விதமான பணம் செலுத்துவதற்கான முறைகள் உள்ளன.
1.முழு அதிகாரம் (Full Delegation): இந்த பாக்கெட் மணி அம்சத்தில் முதன்மை பயனர் மாதம் ரூ.15,000 வரை ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிக்கலாம். இரண்டாம் நிலை பயனர் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்க தேவையில்லை. அந்த வரம்பிற்குள் சுதந்திரமாகப் பணம் செலுத்த முடியும்.
2.பகுதி அதிகாரம் (Partial Delegation): குறிப்பாக இந்த முறையில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அனுமதி அவசியம் ஆகும். இரண்டாம் நிலை பயனர் பணம் செலுத்த முற்படும்போது, முதன்மை பயனர் அதை தனது போனில் உறுதி செய்த பின்பு தான் பணம் பரிமாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது கூகுள் பே செயலியில் பாக்கெட் மணியை செட் செய்யும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.
கூகுள் பே செயலியில் பாக்கெட் மணியை செட் செய்யும் வழிமுறைகள்
வழிமுறை 1: கூகுள் பே செயலியில் புரொபைல் மெனுவில் உள்ள UPI Circle எனும் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
வழிமுறை 2: அடுத்து Set up Pocket Money எனும் விருப்பம் தெரியும். அதை கிளிக் செய்து நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் காண்டாக்ட் நம்பரை தேர்வு செய்யவும். குறிப்பாக அந்த நபரிடமும் கூகுள் பே செயலி இருக்க வேண்டும்.
வழிமுறை 3: அதன்பின்பு முதன்மை பயனர், இரண்டாம் நிலை பயனரின் UPI Circle QR குறியீட்டை ஸ்கேன் செய்து, மேலே கூறியபடி, இரண்டு முறைகளில் முழு அதிகாரம் அல்லது அனுமதி முறை என எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வழிமுறை 4: குறிப்பாக நீங்கள் முழு அதிகார முறையைத் தேர்வு செய்தால், மாதாந்திர செலவு வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அதுவும் பாதுகாப்புக்காக அந்த நபரின் உறவுமுறை மற்றும் அரசு அடையாள அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.
வழிமுறை 5: அதை தொடர்ந்து அழைப்பு அனுப்பப்பட்டு, முதன்மை பயனர் தனது UPI PIN-ஐ உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே செயலியில் பாக்கெட் மணியை செட் செய்ததும், இரண்டாம் நிலை பயனர் நேரடியாக கடைகளில் QR கோடு ஸ்கேன் செய்தோ அல்லது போன் நம்பர் மூலம் பணம் செலுத்தலாம். குறிப்பாக முழு அதிகாரம் கொடுக்கப்பட்ட நபர் பணம் உடனடியாக செலுத்திக் கொள்ளலாம். அதே அனுமதி முறையில் முதன்மை பயனருக்கு நோட்டிபிகேஷன் வரும், அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை ஓகே செய்ய வேண்டும். அதன்பின்பு தான் பணம் செலுத்த முடியும். மேலும் இருவருமே தங்களது ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியில் (Transaction History) செலவுகளைப் பார்க்க முடியும்.
இப்போது QR கோடு, போன் நம்பர், UPI ID மற்றும் ஆன்லைன் பேமெண்ட்களுக்கு மட்டுமே பாக்கெட் மணி அம்சம் உள்ளது. மொபைல் ரீசார்ஜ், பில் பேமெண்ட போன்ற வசதிகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








